வட, கிழக்குக்கு வெளியே வாழும் முஸ்லிம்களுக்கு சமஷ்டித்தீர்வு உரிய பயன்தரப்போவதில்லை நீதியமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவிப்பு
வடக்கு, கிழக்கு வெளியே தெற்கிலும் மத்தியிலும் மேற்கிலும் வாழும் தமிழ் மொழி பேசும் முஸ்லிம்களுக்கு சமஷ்டித்தீர்வு உரிய பயனைத் தரப்போவதில்லையென நீதியமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
சிங்களம் மட்டும் சட்டத்தால் பிற்காலத்தில் ஏற்படக்கூடிய விளைவுகளை சுட்டிக்காட்டியவர் அறிஞர் அஸீஸ் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
அறிஞர் ஏ.எம்.ஏ.அஸீஸ் பிறந்த நூற்றாண்டையொட்டி கொழும்பு ஸாஹிராக் கல்லூரியில் இடம்பெற்ற வைபவத்தில் நினைவுச் சொற்பொழிவை நிகழ்த்தும் போதே அமைச்சர் ஹக்கீம் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து பேசுகையில் கூறியதாவது; 1956 ஆம் ஆண்டில் சிங்களம் மட்டும் அரசகரும மொழிச் சட்டம் கொண்டுவரப்பட்ட வேல்ளியில் அதனால் பிற்காலத்தில் ஏற்படப்போகும் ஆபத்துகளை ஆணித்தரமாகவும் ஆழ்ந்த கவலையோடும் சுட்டிக்காட்டிய அறிஞர் கலாநிதி ஏ.எம்.ஏ.அஸீஸ் தமிழ் மொழிக்கு சம அந்தஸ்து வழங்கினால், சிங்கள மொழிக்கு பாதிப்பு ஏற்படும் என்ற பெரும்பான்மை சமூகத்தினரின் அச்சம் அடிப்படையற்றதெனவும் ஆதாரமற்றதெனவும் இரு மொழிகளுக்கும் உரிய அந்தஸ்தை வழங்குவதன் ஊடாகவே பலமொழி, பல்லின, பல்சமய நல்லிணக்கத்தையும் நல்லுறவையும் கட்டியெழுப்ப முடியுமெனவும் கூறினார். அவரது எச்சரிக்கையை புறக்கணித்ததன் விளைவை அரை நூற்றாண்டு கடந்த பின்னர் இன்று நாமனைவரும் அனுபவித்துக் கொண்டிருக்கின்றோம்.
தூர நோக்குடன் சிந்தித்து தமது கருத்துகளை துணிச்சலோடு முன்வைத்தவர்கள் வரலாற்று நாயகர்களாக போற்றப்படுகின்றனர். தற்காலிக குறுகிய கால தீர்வுகளைக் காண்பதை விடுத்து வருங்கால சந்ததியின் நலன்களை கருத்தில் கொண்டே அவர்கள் சிந்தித்து செயலாற்றினார்கள். இத்தகையோரில் அறிஞர் ஏ.எம்.ஏ.அஸீஸ் குறிப்பிடத்தக்கவர்.
முன்னொரு காலத்தில் பெரிதும் மதிக்கப்பட சிவில் சேவை பதவியை உதறித் தள்ளிவிட்டு கொழும்பு சாஹிரா கல்லூரியில் அதிபராக அவர் பதவியேற்றதிலிருந்து முஸ்லிம் சமூகத்தின் கல்வி வளர்ச்சியில் அவருக்கிருந்த அளப்பரிய ஈடுபாடு நன்கு புலனாகின்றது. மூதவை என்படும் செனற் சபையின் உறுப்பினராக இருந்து சுதந்திரத்தின் பின்னரான இலங்கையின் வகிபாகத்தை நெறிப்படுத்தும் வாய்ப்பும் அன்னாருக்குக் கிட்டியது.
அவர் தமிழ், சிங்களம், ஆங்கிலம், அரபு ஆகிய மொழிகளின் அறிவும் முஸ்லிம் மாணவர்களுக்கு அவசியமாகும். ஆயினும் தமிழ் மொழி கற்கை மொழியாக இல்லாத பட்சத்தில் சமூகம் மொழி ரீதியாக பிரிவடைவதோடு மதரஸாக் கல்வியையும் ஏனைய இஸ்லாமிய தமிழ் இலக்கியங்களில் பொதிந்துள்ள அறிவுக் கருவூலங்களையும் பெறுவதில் பாரிய இழப்பு ஏற்படும். கல்வி என்பது சமூகத்தின் உயர்ச்சிக்கான சாதனமாகும். சிங்கள மொழியைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் கல்வியினால் பெறக்கூடிய சமுதாயக உயர்ச்சியை ஏற்படுத்த முடியுமா என்று அறிஞர் அஸீஸ் எழுப்பிய கேள்விக்கு இன்று நாம் பதில் கூறக் கூடியவர்களாக இருக்கின்றோமா?
தமிழ் மொழி நாடு முழுவதிலும் பாடசாலைகளில் ஒரு கற்கை மொழியாக இருக்க வேண்டும். ஏனெனில், தமிழ் பேசும் முஸ்லிம்கள் நாடு முழுவதிலும் பரந்து வாழ்ந்து வருகின்றனர். வட கிழக்குக்கு அப்பால் நாட்டின் தெற்கிலும் மத்தியிலும் மேற்கிலும் வசிக்கும் தமிழ் மொழியைப் பேசும் முஸ்லிம்களுக்கு சமஷ்டித் தீர்வு பயனளிக்காது என்றார்.
முஸ்லிம் மாணவர்களுக்கு ஆரம்பத்தில் தமிழ் மொழியிலேயே கல்வி ஊட்டப்பட வேண்டும் என வலியுறுத்திய அறிஞர் அஸீஸ் அதனுடன் சேர்த்து ஆங்கில மொழிக் கல்வியின் அவசியத்தையும் வலியுறுத்திக் கூறி வந்தார். தேசிய மொழிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் அதேவேளையில்,அனைத்துலக மட்டத்தில் பல கோடிக்கணக்கான மக்களின் தாய் மொழியாகவும் இரண்டாவது மொழியாகவும் விளங்கும் ஆங்கிலமும் எமது வளர்ச்சிக்கு மிகவும் அவசியமானது. அதனைக் கற்காது விட்டால் அம் மொழியை அறிந்த மிகச் சிலரே அதன் பலனை அனுபவிப்பவர் ஏனையோர் அதன் பயனை அனுபவிக்க முடியாது தவிப்பர் என்று கூறினார்.
பல்கலைக்கழகங்களில் ஆங்கிலம் கற்கை மொழியாக இருக்கின்ற பொழுது பாடசாலைகளில் அந்த மொழியை முறையாகக் கற்பதற்கு வாய்ப்பற்ற மாணவர்கள் மேற்படிப்புக்காகச் சென்ற பின்னர் எவ்வளவு தூரம் பாதிக்கப்படுவர் என அவர் எழுப்பிய வினாவுக்கான விளைவை இன்று எமது உயர் கல்வி கற்கும் மாணவர்களும் சர்வதேச மட்டத்தில் தொழில் புரிபவர்களும் நேரடியாக அனுபவித்துக்கொண்டிருக்கின்றார்கள்.
அறிஞர் அஸீஸ் உன்னதமான கல்விமான் மட்டுமல்ல மகத்தான மானுடவாதியும் கூட அத்துடன் அவர் சிறந்த சன்மார்க்க சீலராகவும் விளங்கினார். அவர் 1911 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் நான்காம் திகதி சரியாக நூறாண்டுகளுக்கு முன்னர் யாழ்ப்பாணம் வண்ணார் பண்ணையில் பிறந்தார்.
கலாநிதி ஏ.எம்.ஏ.அஸீஸ் மன்றத் தலைவர் எஸ்.எச்.எம்.ஜமீல், அகில இலங்கை வை.எம்.எம்.ஏ.பேரவைத் தலைவர் நத்வீ பஹாவுத்தீன் ஆகியோரும் உரையாற்றினர்.
இக்கூட்டத்தில் சாஹிரா கல்லூரி பழைய மாணவர்களான சங்கைக்குரிய ரத்தின தேரோ தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வி.ஆனந்த சங்கரி ஆகியோரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன், சாஹிராக் கல்லூரியின் முன்னாள் மாணவர்களும் வெளிநாட்டுத் தூதுவர்களும் கல்விமான்களும் பெருமளவில் கலந்துகொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக