செவ்வாய், 25 அக்டோபர், 2011

Chennai beach ஆணுறை பாக்கெட்கள் குவியல் குவியலாக கொட்டி வைக்கப்படுகின்றன!'

மீன்களுக்கு இரை போடுவதைப் போல், சென்னை, மெரீனா கடற்கரையின் 4 இடங்களில், ஆணுறை பாக்கெட்கள் குவியல் குவியலாக கொட்டி வைக்கப்படுகின்றன. வேண்டுமென நினைப்பவர்கள், வேண்டிய அளவு எடுத்துச் செல்லலாம். தயக்கம் தேவையில்லை; தடுப்பார் யாரும் இல்லை. இப்படி ஆணுறையைக் கொட்டி வைப்பது வேறு யாரும் அல்ல. தமிழக அரசின் நிறுவனமான எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கம் தான். ?

விசாரித்த போது, விளக்கம் வந்தது. "ஆம்! மெரீனா கடற்கரை மட்டுமல்ல, பெரும் கூட்டம் கூடும் இடத்தில் எல்லாம், இதுபோன்று ஆணுறைகளை நாங்கள் தான் கொட்டி வைக்கிறோம்' என, ஒப்புதல் வாக்குமூலம் தந்தனர், எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்க அதிகாரிகள்.
இதற்கு முன் பெட்ரோல் பங்குகள், முக்கிய ரயில் நிலையங்களில் ஆணுறைகள் வைக்கப்பட்டன. ஆனால்
, அங்கு வருபவர்கள், பருவ வயதை தாண்டியவர்கள், விவரம் தெரிந்தவர்கள். ஆனால், கடற்கரை போன்ற இடங்களில், சிறு குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை வந்து செல்லும் நிலையில், இப்படி தாராளமாகக் கிடைப்பது சரிதானா எனக் கேட்டபோது, சரி தான் என நியாயப்படுத்தினர்.
எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்க அதிகாரி ஒருவர் இதுகுறித்து கூறும்போது, ""தண்ணீரைக் காய்ச்சி குடித்தால் தொற்று நோய்கள் வராது என பிரசாரம் செய்கிறோம். "பிரசாரம் செய்துவிட்டோம்; எல்லாரும் அதன்படி நடப்பர்; தடுப்பு மருந்துகள் இனி எதற்கு?' என தூக்கி வீசிவிடுவதில்லை. அதைப் போன்று தான், ஒழுக்க நெறிகளை போதித்தாலும், வழி தவறும் ஒரு சிலரும், உயிர்க்கொல்லி நோய்க்கு பலியாகிவிடக் கூடாது என்ற நோக்கத்தில், ஆணுறைகள் எளிதில் கிடைப்பதற்காக, இவ்வாறு ஆங்காங்கே கொட்டி வைக்கப்படுகின்றன'' என்றார்.

சென்னை கடற்கரையில், சர்வீஸ் சாலையில் லைட் ஹவுஸ் பகுதி, நீச்சல் குளம், உழைப்பாளர் சிலை, ஐஸ் ஹவுஸ் எதிர்புறம் என நான்கு இடங்களில், காலை 7 மணிக்கு கொட்டப்படுகிறது. இரவுக்குள் எல்லாம் காலியாகி விடுகின்றன. மறுநாள் புதிதாக கொட்டப்படுகின்றன. அங்கு, நடைபாதை கடை வைத்திருக்கும் முத்து கூறும்போது, ""இளைஞர்கள் தான் தயக்கம் இல்லாமல் எடுக்கின்றனர். மற்றபடி, தொழில் செய்பவர்களும் இதை எடுத்துக் கொள்கின்றனர்'' என்றார்.

எதார்த்தமாக அணுகினால் பிரச்னை இல்லை : தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்க மண்டல ஒருங்கிணைப்பாளர் வளன் கூறியதாவது: நாங்கள் பிரச்னையை எதார்த்தமாக அணுகுகிறோம். தமிழகத்தில் எய்ட்ஸ் நோய் பரவும் விகிதம் வெகுவாகக் குறைந்துள்ளது. தேசிய அளவில் நோய் பரவல் .30 சதவீதம். ஆனால், தமிழகத்தில் .13 சதவீதம் தான். தாயிடமிருந்து குழந்தைக்கு பரவுவது, ரத்ததானம் மூலம் பரவுவது, ஊசி மூலம் பரவுவது என, நோய் பரவுவதற்கான வேறு காரணங்களை ஓரளவு கட்டுப்படுத்தி விட்டோம். ஆனால், உடலுறவு மூலம் பரவுவதை தடுப்பதில், நேரடியாக எங்களால் எதுவும் செய்ய முடியாது. அதற்காக, பல்வேறு வகையில் பிரசாரம் செய்வதோடு, ஆணுறைகளை இலவசமாக, எளிதில் கிடைக்கச் செய்கிறோம். ஒழுக்க நெறிகளை போதிப்பது தான் எங்களது முதல் பணி. அதேசமயத்தில், தவறுபவர்கள் நோயில் சிக்கிவிடக் கூடாது என்பதற்காகவே, பெரும் கூட்டம் கூடும் இடங்களில் ஆணுறைகள் கொட்டப்படுகின்றன. இவ்வாறு வளன் கூறினார்.

ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் தவறாமல் கடற்கரைக்கு வரும் ஜெயக்குமார் இதுபற்றி கூறும்போது, ""அதெல்லாம் சரிதாங்க... எய்ட்ஸ் நோயை கட்டுப்படுத்த இதெல்லாம் செய்ய வேண்டியது தான். ஆனால், கடற்கரையில் இப்படி கொட்டி வைத்தால், அங்கு இதுபோன்ற செயல்களை ஊக்குவிப்பதைப் போல் ஆகிவிடாதா?'' என ஆதங்கப்பட்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக