செவ்வாய், 25 அக்டோபர், 2011

விக்கிலீக்ஸ் தளத்தை தற்காலிகமாக மூட முடிவு: அசாஞ்சே

assange
லண்டன், அக்.24: விக்கிலீக்ஸ் இணைய தளத்தை முடக்க சிலர் சதி செய்வதாகக் கூறியுள்ள அதன் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே, விக்கிலீக்ஸ் இணைய தளத்தின் செயல்பாடுகளை தற்காலிகமாக நிறுத்தி வைக்கவுள்ளதாகக் கூறியுள்ளார்.

அமெரிக்க தூதரகங்களுக்கும், அமெரிக்க வெளியுறவு அமைச்சகத்துக்கும் இடையிலான தகவல் பரிமாற்றங்களை விவரமாக வெளியிட்டு உலகையே திரும்பிப் பார்க்கவைத்த இணையதளம் விக்கிலீக்ஸ். இதன் தலைவர் ஜூலியன் அசாஞ்சே.
விக்கிலீக்ஸ் வெளியிட்ட பல பரபரப்புத் தகவல்களால் அமெரிக்காவில் மட்டுமல்லாமல் உலக நாடுகள் பலவற்றிலும் பரபப்பு ஏற்பட்டது. இந்த இணைய தளத்துக்கு அரசுகளின் தரப்பில் எதிர்ப்பு கிளம்புவதும் வாடிக்கையானது. விக்கிலீக்ஸின் செயல்பாடுகளை முடக்க பல்வேறு வேலைகள் நடந்தன. நிறுவுனர் ஜூலியன் அசாஞ்சே மீது பாலியல் குற்றச்சாட்டுகள் கூட கூறப்பட்டன.

இந்த நிலையில் அசாஞ்சே தனது தளத்தின் செயல்பாடுகளை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக இன்று அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் இன்று லண்டனில் செய்தியாளர்களிடம் கூறுகையில்,

எங்களுக்கு எதிராக அமெரிக்க மற்றும் இங்கிலாந்து வங்கிகள் நிதி கையாளுதலை தடைசெய்துள்ளன. எங்களது கடன் அட்டைகள் பரிமாற்றம் முடக்கப்பட்டுள்ளது. இதனால் எங்களது செயல்பாடுகளைத் தொடர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் தற்காலிகமாக எங்களது செயல்பாடுகள் நிறுத்தி வைக்கப்படுகின்றன. எதிர்கால பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு இந்த முடிவை எடுத்துள்ளோம். எங்களது தளத்தை முடக்க சிலர் முயற்சிக்கின்றனர். சதி செய்கின்றனர். அதை நாங்கள் முறியடிப்போம். அவதூறுப் பிரசாரத்தை தவிடு பொடியாக்குவோம்” என்றார் அவர்.

விக்கிலீக்ஸ் நிறுவனத்துக்கு நன்கொடை உள்ளிட்டவற்றை தங்களது மாஸ்டர் கார்டு, விசா கார்டு, பேபால் உள்ளிட்டவை மூலம் வழங்குவதற்கு அமெரிக்கா மற்றும் இங்கிலாந்தைச் சேர்ந்த பல முன்னணி வங்கிகள் தடை செய்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது
.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக