திங்கள், 24 அக்டோபர், 2011

1.75 லட்சம் கோடி என்பதெல்லாம் வழக்குக்கு உதவாத விஷயங்கள், சிபிஐ நீதிபதி சாய்னி

2ஜி குற்றப்பத்திரிகை

ஆ.இராசா, சித்தார்த்த பெஹூரா, ஆர்.கே.சந்தோலியா என்ற மூன்று அமைச்சர், அரசு அலுவலர்கள், கனிமொழி, சரத்குமார், யூனிடெக், ஸ்வான், ரிலையன்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் ஆகியோர்மீது குற்றப் பத்திரிகை தாக்கல் செய்து 2ஜி வழக்கு நவம்பர் 11 முதல் நடைபெறும் என்று சிபிஐ நீதிமன்றம் கூறியுள்ளது.
இதனை அடுத்து, நாளை கனிமொழிக்கு பெயில் கிடைத்துவிடும் என்று நினைக்கிறேன். இராசாவுக்கு பெயில் கொடுப்பார்களா என்பது சந்தேகம். மற்ற அனைவருக்கும் கிடைத்துவிடலாம்.

கடைசியாக 1.75 லட்சம் கோடி என்பதெல்லாம் வழக்குக்கு உதவாத விஷயங்கள் என்பதை சிபிஐ நீதிமன்ற நீதிபதி சாய்னி ஒப்புக்கொண்டிருக்கிறார் என்பது கவனிக்கப்படவேண்டும். ஸ்வானின் ஷாஹித் பால்வா வழியாக கலைஞர் தொலைக்காட்சிக்கு வந்த பணம் மட்டுமே இராசாமீதான லஞ்சக் குற்றச்சாட்டுக்கு வலுவாகத் துணைநிற்பது. இராசா வேறுவகையில் பணம் பெற்றாரா, கிரீன்ஹவுஸ் புரமோட்டர்ஸ் வழியாக இராசாவுக்குப் பணம் வந்ததா, சாதிக் பாட்சா விஷயம் என்ன, யூனிடெக், ஸ்வான் தவிர பிறர் இராசாவுக்கோ, அவருடைய உறவினர்களுக்கோ, பினாமிகளுக்கோ, திமுக தலைவர் கருணாநிதியின் குடும்பத்தாருக்கோ பணம் கொடுத்தார்களா என்பது பற்றி சிபிஐ விசாரித்ததாகவே தெரியவில்லை.

இந்தக் காரணங்களுக்காகவே வழக்கு சரியாக விசாரிக்கப்படவில்லை என்று சொல்லவேண்டும். 1.75 லட்சம் கோடி என்ற ஹைப்பிலிருந்து சிபிஐயின் 30,000 கோடி ஊழல் என்பதற்குத் தாவி, இப்போது 200-250 கோடி என்ற அளவுக்கு வந்து சேர்ந்துள்ளது. இரண்டு, மூன்று வழக்குகளாக இதனைப் பிரித்து நடத்தினால் உபயோகமாக இருக்கும். ரிலையன்ஸ்-ஸ்வான், எஸ்ஸார்-லூப், யூனிடெக், (டாடா?) ஆகியோர் செய்துள்ள கார்பொரேட் முறைகேடுகள். டாடா தவிர்த்து பிறர்மீது வலுவான சாட்சியங்கள் உள்ளன. அவர்களைத் தனியாக விசாரித்து, கடுமையான அபராதங்கள் விதித்து, சில மாதங்கள் சிறைத்தண்டனை கொடுத்து, முடித்துவிடலாம்.

அடுத்து இராசா, பெஹூரா, சந்தோலியா ஆகிய பொது ஊழியர்கள். இவர்கள்மீது இரண்டு குற்றச்சாட்டுகள்: முதலாவது - சட்டத்தை வளைத்து, திருத்தி, முறைகேட்டில் ஈடுபடுவதன்மூலம் சில கார்பொரேட் நிறுவனங்களுக்குச் சாதகமாக நடந்துகொண்டது. இரண்டாவது - நேரடியாகவோ மறைமுகமாகவோ லஞ்சமாகப் பணம் பெற்றுக்கொண்டது. இதில் முதலாவதற்கு நிறையச் சாட்சியங்கள் உள்ளன. அதற்கான தண்டனை அதிகமாக இருக்கமுடியாது. இரண்டாவதற்கான சாட்சியங்கள் மிக வலுவாக இல்லை. இங்கு கலைஞர் தொலைக்காட்சி விவகாரம் மட்டுமே வலுவாக இருப்பதுபோலத் தோன்றுகிறது; ஆனால் அதுவும் சட்டம் எதிர்பார்க்கும் வலுவில் இல்லை என்பது என் தனிப்பட்ட கருத்து.

அடுத்து, மேலே உள்ளதுடன் இணையும் கலைஞர் தொலைக்காட்சி ஷாஹித் பால்வா கம்பெனியிடமிருந்து “கடன்” பெற்ற விவகாரம். நேரடியாகப் பார்த்தால் இதனை லஞ்சம் என்பதுடன் இணைக்கமுடியும் என்றாலும் சட்டரீதியாக இதனை நிரூபித்தல் மிக மிகக் கடினம். கிரிமினல் வழக்குக்குத் தேவையான ரிகர் இதில் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. அதன் காரணமாக கனிமொழி, சரத்குமார் கைது செய்யப்பட்டிருப்பது மிகவும் பலவீனமானது. இராசாவும் கனிமொழியும் சரத்குமாரும் சேர்ந்து கான்ஸ்பிரசியில் ஈடுபட்டுள்ளனர் என்பதற்கு வலுவான சாட்சியங்களைக் கொண்டுவரவேண்டும். காகிதங்கள், ஒலிப்பதிவுகள், கூட இருந்து பார்த்தோரின் சாட்சியங்கள் ஆகியவை தேவைப்படும். இராசா பால்வாவிடம் இப்படி கலைஞர் தொலைக்காட்சியில் பணம் போட்டால்தான் உனக்குத் தேவையான உரிமங்களைத் தருவேன் என்று சொன்னதற்கு சாட்சியங்கள் வேண்டும். வெறும் சர்கம்ஸ்டான்ஷியல் எவிடென்ஸை வைத்துக்கொண்டு இதனை நிரூபிக்கமுடியுமா என்று தெரியவில்லை.

***

நாட்டின் மிக முக்கியமான ஊழல் வழக்கு என்று கட்டம் கட்டப்பட்ட இது, மிகச் சாதாரணமான ஒரு வழக்கு என்ற பெருமையை மட்டுமே பெறப்போகிறது.

இதன் மிகப்பெரும் காசுவாலிட்டிகள் 3ஜி, 4ஜி நெட்வொர்க்கும்தாம். அடிமட்ட மக்களுக்கான பிராட்பேண்ட் இணைய இணைப்புக்கான கட்டணம் மிக அதிகமாக ஆகும். புதிய தொலைத்தொடர்புக் கொள்கை (2011) பற்றி முழுமையாக நான் பார்க்கவில்லை. ஆனால் ஸ்பெக்டரத்தை சந்தை மாதிரியில் விலைக்கு அளிப்பது (அதாவது ஏதோ ஒருவிதத்தில் அதிகக் கட்டணம் வசூலிப்பது) என்று அதில் சொல்லப்படுவது இந்தியாவுக்கு நல்லதல்ல என்பதை மட்டும் என்னால் இப்போதைக்குச் சொல்லமுடியும்.

இந்தப் பிரச்னைக்கு யார் அடிப்படைக் காரணம்? ஒருவரை என்று குற்றம் சாட்டமுடியாது.
தயாநிதி மாறனின் முரட்டுத்தனம்.
இராசாவின் திருட்டுத்தனம்.
இவர்கள் இருவரையும் முற்று முழுதாக ஆதரித்த கருணாநிதியின் பிடிவாதம் மற்றும் முட்டாள்தனம்.
இதனைக் கண்டுகொள்ளாமல் முகத்தைத் திருப்பிக்கொண்ட மன்மோகன் சிங்கின் கையாலாகாத்தனம்.
இது தன் பிரச்னை அல்ல என்று கைகழுவிவிட்ட சோனியா காந்தியின் அசட்டுத்தனம்.
இவை அனைத்தும் சேர்ந்து இன்று பாதிப்புக்கு உள்ளாவது, இந்தியாவின் தொலைத்தொடர்புக் கொள்கையே. இதன் விளைவுகள் அடுத்த பத்தாண்டுக்கு இந்தியாவில் எதிரொலித்துக்கொண்டே இருக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக