வெள்ளி, 7 அக்டோபர், 2011

தென்னிந்திய தொலைக்காட்சி தயாரிப்பாளர் ரோஸ் இலங்கையில்!

தமிழ் நாட்டின் கலைஞர் தொலைக்காட்சியிலும் விஜய் தொலைக்காட்சியிலும் பலதரப்பட்ட சமூக பிரச்சினைகள் குறித்து விவாத நிகழ்ச்சிகளை நடத்தி புகழ் உச்சியில் வீற்றிருந்த ரோஸ் வெங்கடேசன் தற் போது இலங்கை வந்துள்ளார்.
இவர் தன்னுடைய பொப் இசை அல்பம் ஒன்றை ஆங்கில, தமிழ், இந்தி, மலையாள மொழிகளில் வெளியிடுவதற்கான பூர்வாங்க ஒழுங்குகளை பூர்த்தி செய்வதற்காக இந்த இலங்கை விஜயத்தை மேற்கொண்டுள்ளார்.அவசியமாயின் இந்த இசை அல்பத்தை சிங்கள மொழியிலும் வெளியிடப்போவதாக இந்தியாவிலும் அமெரிக்கப் பல்கலைக்கழகங்களிலும் உயர் பட்டம் பெற்ற ரோஸ், தினகரன் ஆசிரிய பீடத்திற்கு நேற்று வந்திருந்த போது தெரிவித்தார்.
விரைவில் சென்னையில் தொலைக்காட்சி திரைப்படங்களை தயாரிப்பதற்கான நிறுவனமொன்றையும் ஆரம்பிக்கப் போவதாக கூறினார்.

சென்னை சத்தியபாமா பொறியியல் கல்லூரியில் தனது முதல் பட்டத்தை பெற்ற இவர் 2008 ஆம் ஆண்டில் லொயலா கல்லூரியில் தொலைக் காட்சி, தொழில்நுட்பவியல் பற்றிய முதுமாணிப் பட்டத்தையும் பெற் றுள்ளார்.

கிig பி.ணி. என்ற ரிலையன்ஸ் நிறுவனம் நடத்தும் வானொலியில் பல நிகழ்ச்சிகளை தற்போது தயாரித்து வருகிறார். 2004 ஆம் ஆண்டில் அமெரிக்கா சென்று அங்குள்ள பல்கலைக்கழகத்தில் உயிரியல், வைத்திய பொறியியல் துறையிலும் முதுமாணிப் பட்டம் பெற்றார்.

இது பற்றி நாம் விளக்கம் கேட்ட போது, சில நோயாளிகளின் நாடித்துடிப்பும், இதயமும் சரியாக இயங்குவதற்கு உதவக்கூடிய வகையில் ஸ்பேஷ் மேக்கர் போன்ற கருவிகளை உடலில் பொருத்துவது பற்றிய வைத்திய ரீதியிலான பொறியியல்துறை என்று விளக்கிக் கூறினார்.

ஆணாக பிறந்த தான் சிறு வயதிலிருந்து பெண்ணாகவே இருக்க வேண்டுமென்ற உணர்வுடன் வளர்ந்தேன்.

பின்னர் 2004 இல் முழுமையாக பெண் உருவத்தை பெற்று இப்போது பெண்ணாகவே வாழ்ந்து வருவதாகவும் 2008ல் முழுமையாக பெண்ணாக மாறுவதற்குரிய சத்திரசிகிச்சைக்கு உட்பட்டதாகவும் அவர் கூறினார். அரவாணிகள் என்பவர்களும் இவ்வுலகில் மனிதர்களாக பிறந்தவர்களேயாகும்.

ஒருவர் தனது விருப்பத்தின் பேரில் அரவாணியாக பிறப்பதில்லை. இயற்கை தான் அவரை அரவாணியாக மாற்றுகிறது. அரவாணிகளையும் சமூகம் மனிதர்களாக மதித்து கெளரவத்துடன் நடத்த வேண்டுமே ஒழிய அவர்களை கேலி கிண்டல் செய்து அவர்களின் வேதனையை மேலும் அதிகரிப்பது நல்லதல்ல என்று அவர் மேலும் தெரிவித்தார்.

தான் ஆணாக பிறந்து பெண்ணாக மாறியதனால் தன்னை தனது பெற்றோரும், உறவுகளும் வீட்டை விட்டு வெளியேற்றிவிட்டனர். சமூகத்தில் தன்னையும் மதிக்க வேண்டும், கெளரவமாக வாழ வேண்டுமென்ற வைராக்கியத்தினால் தற்போது அந்த நிலையையும், அந்தஸ்தையும் பெற்றிருப்பதாகவும் ரோஸ் தெரிவித்தார்.

ரோஸ் தொலைக்காட்சி சேவைகளில் நடத்திய பல நிகழ்ச்சிகளில் பேய்கள் என்ற மூட நம்பிக்கைக்கு எதிரான கருத்தை வலியுறுத்தினார். பேய்கள் இருந்தால் அதனை தயவு செய்து நிரூபித்துக் காட்டுங்கள் என்று சவால் விட்டு நடத்திய பலதரப்பட்ட நிகழ்ச்சிகள் ரோஸின் புகழ் உலகெங்கிலும் பரவுவதற்கு காரணமாக அமைந்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக