செவ்வாய், 18 அக்டோபர், 2011

தேர்தல் ஆணையம் மீது திமுக கோர்ட் அவமதிப்பு வழக்கு

சென்னை மாநகராட்சித் தேர்தலில் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுகளை அமல்படுத்தாத தேர்தல் அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். 239 வாக்குச் சாவடிகளில் மறு வாக்குப் பதிவு நடத்த வேண்டும் என்று கோரி திமுக சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் அவமதிப்பு வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

திமுகவின் வழக்கறிஞர் பிரிவு செயலாளர் ஆலந்தூர் ஆர்.எஸ்.பாரதி இந்த மனுவைத் தாக்கல் செய்துள்ளார். அதில், சென்னை மாநகராட்சித் தேர்தல் வாக்குப் பதிவை முழுமையாக வீடியோ மூலம் கண்காணிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு கடைப்பிடிக்கப்படவில்லை. உயர்நீதி்மன்ற உத்தரவுப்படி வெப் காமராக்களும் பொருத்தப்படவில்லை. வெளி மாநில போலீஸார் மற்றும் பார்வையாளர்களை வரவழைக்க வேண்டும் என்ற உத்தரவும் அமல்படுத்தப்படவில்லை.
தேர்தலை முறையாக நடத்தாத 239 வாக்குச் சாவடிகளிலும் மறு வாக்குப் பதிவு நடத்தப்பட வேண்டும். மேலும் உயர்நீதிமன்ற உத்தரவுகளை அமல்படுத்தாத அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரியுள்ளார் பாரதி.

இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என்று தெரிகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக