புதன், 12 அக்டோபர், 2011

அழகி'க்காக பட்ட அவமானங்கள்! தங்கர் பச்சான்



அழகி படத்தை எடுத்தபோது என்னை இந்த சினிமா உலகம் அவமானப்படுத்தியது. ஊருக்கு ஓடிவிடச் சொன்னார்கள் பலர். ஆனால் அந்த அவமானங்களே பின்னர் வெற்றியாக மாறின, என்றார் இயக்குநர் தங்கர் பச்சான்.

செவன்த்சேனல் மாணிக்கம் நாராயணன் தயாரிப்பில், பார்த்திபன் கதாநாயகனாக நடித்து இயக்கிய படம், 'வித்தகன்'. இந்த படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா, சென்னை சத்யம் திரையரங்கில் நேற்று காலை நடந்தது. பாடல்களை, இசையமைப்பாளர் ஹாரீஸ் ஜெயராஜ் வெளியிட்டார்.
இந்த விழாவில், தங்கர்பச்சான் கலந்துகொண்டு பேசும்போது, அழகி படத்தை எடுத்துவிட்டு தான் பட்ட அவமானங்களை வெளிப்படையாகக் கூறி அதிரவைத்தார்.
அவர் கூறுகையில், "நான் இயக்கிய 'அழகி' படம், ஒரு கோடியே எழுபது லட்சம் செலவில் தயாரிக்கப்பட்டது. தயாரிப்பாளர் பாதி விலைக்கு விற்க முன்வந்து, அந்த படத்தை 120 முறை திரையிட்டு காண்பித்தும் யாரும் வாங்க முன்வரவில்லை.

அது கூட பரவாயில்லை. அவர்கள் மகிழ்ச்சியாக இருந்துவிட்டு போகட்டும். என்னை அவர்கள் அவமானப்படுத்தியது போல், அவர்களின் பெயர்களை சொல்லி நானும் அவமானப்படுத்த விரும்பவில்லை.

தயாரிப்பாளராகவும், மிகப்பெரிய இயக்குனராகவும் இருக்கக்கூடிய ஒருவர் படம் பார்த்துவிட்டு, ஒரு வார்த்தை கூட பேச விரும்பாமல், முகத்தை திருப்பிக் கொண்டு போய்விட்டார்.

இதுவும் கூட பரவாயில்லை. இன்று கூட மிகப்பெரும் தயாரிப்பாளராக இருக்கக்கூடிய மற்றொருவருக்கு முதல் ஆளாக 'அழகி' படத்தை திரையிட்டு காண்பித்தேன். அவர் என்னிடம் எந்த கருத்தும் சொல்லாமல், தயாரிப்பாளரை அழைத்தார். "தவறாக எடுத்துக்கொள்ளாதீர்கள். செலவு செய்த பணம் இதோடு போகட்டும். இந்த படத்தை ரிலீஸ் செய்தால், மேலும் ரூ.50 லட்சம் தேவைப்படும். உங்களுக்கு போஸ்டர் காசு கூட திரும்பி வராது. இதை இப்படியே விட்டுவிட்டு ஊருக்கு ஓடிவிடுங்கள்,'' என்று கூறிவிட்டு சென்றார்.

இப்படிப்பட்டவர்கள் எல்லாம் இந்த துறையில் இருக்கிறார்கள். ஆனால் என்னை அவமானப்படுத்தியவர்களின் கணிப்பை எல்லாம் மீறி, 'அழகி' படம் எவ்வளவு பெரிய வெற்றியையும், வரவேற்பையும் பெற்றது என்று உங்களுக்கே தெரியும்.

தோல்வியை அனுபவித்தவனுக்குத்தான் வெற்றிகளை எவ்வாறு தற்காத்துக் கொள்வது என்பது புரியும். வித்தகன் திரைப்படமும் மாபெரும் வெற்றியை பெற வேண்டும் என்று வாழ்த்துகிறேன்,'' என்றார்.

இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் பேசுகையில், "இதே மாணிக்கம் நாராயணனுக்காக கவுதம் மேனன் இயக்கிய வேட்டையாடு விளையாடு பெரிய வெற்றி பெற்றது. அதே போன்ற வெற்றியை வித்தகனும் பெறும்," என்றார்.

விழாவில் வழக்கறிஞர் பிரேமா சதாசிவம், பேராசிரியர் ஞானசம்பந்தம், நடிகர்கள் சத்யராஜ், விவேக், நடிகைகள் சினேகா, எமிஜாக்சன், மதுமிதா, இனியா, இயக்குநர்கள் அமீர், கவுதம் மேனன், சேரன், லிங்குசாமி, வசந்தபாலன், ஏ.எல்.விஜய், வெற்றிமாறன், சுசீந்திரன், பாடல் ஆசிரியர் நா.முத்துக்குமார், பட அதிபர் தனஞ்செயன், கமலா திரையரங்க உரிமையாளர் வி.என்.சிதம்பரம் ஆகியோரும் பேசினார்கள்.

தயாரிப்பாளர்கள் ராம.நாராயணன், ஏ.எல்.அழகப்பன், நடிகை லட்சுமி ராமகிருஷ்ணா மற்றும் ஏராளமான திரையுலக பிரமுகர்கள் கலந்துகொண்டார்கள்.

படத்தின் தயாரிப்பாளர் மாணிக்கம் நாராயணன் வரவேற்றுப் பேசினார். பார்த்திபன் நன்றி கூறினார். விழா நிகழ்ச்சிகளை இயக்குநர் கரு.பழனியப்பன் தொகுத்து வழங்கினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக