ஞாயிறு, 30 அக்டோபர், 2011

ஆலோசனை நிறுவன தொழிலுக்கு முழுக்குப் போட்டார் நீரா ராடியா


Nira Radia
டெல்லி: குடும்பம், உடல் நிலையைக் காரணம் காட்டி ஆலோசனை நிறுவன தொழிலுக்கு முழுக்குப் போடுவதாக 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் சிக்கிய நீரா ராடியா அறிவித்துள்ளார்.
வைஷ்ணவி கம்யூனிகேஷன்ஸ் என்ற நிறுவனத்தின் உரிமையாளர் நீரா ராடியா. இவர் டாடா குழுமம், முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் உள்ளிட்ட பல்வேறு முக்கிய நிறுவனங்களின் ஆலோசனை நிறுவனமாக ராடியாவின் வைஷ்ணவி குழுமம் செயல்பட்டு வந்தது.
மத்தியில் ராடியா ஒரு அதிகார தரகராக செயல்பட்டு வந்தது, அவரும், பல முக்கிய அரசியல் பிரபலங்களும் பேசிய தொலைபேசிப் பேச்சுக்களின் ஆடியோ லீக் ஆனபோதுதான் அனைவருக்கும் தெரிய வந்தது. கனிமொழி, முன்னாள் மத்திய அமைச்சர் ராசா உள்ளிட்ட பல பிரபலங்களுடன் அவர் பேசிய பேச்சுக்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தின. ரத்தன் டாடாவுடன் அவர் பேசியதும் புயலைக் கிளப்பியது.
இதையடுத்து அவரிடம் சிபிஐ விசாரணை நடத்தியது. அவரது வீடு,அலுவலங்களில் ரெய்டும் நடத்தப்பட்டது. 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் அவர் ஒரு சாட்சியாக சேர்கக்ப்பட்டுள்ளார்.

இந்த நிலையில், கம்யூனிகேஷன் ஆலோசனை பணியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார் ராடியா. இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், எனது குடும்பம், உடல் ஆரோக்கியம் உள்ளிட்ட தனிப்பட்ட விஷயங்களுக்கு முக்கியத்துவம் தர விரும்புகிறேன். எனவே எனது நிறுவனத்தின் பொறுப்பை தொடருவதிலிருந்து விலகியிருக்க முடிவு செய்துள்ளேன். புதிதாக எந்த வாடிக்கையாளரையும் சேர்ப்பதில்லை என்ற முடிவையும் எடுத்துள்ளேன்.

இது மிகவும் வலி தரக் கூடிய முடிவு. இருப்பினும் தீவிர பரிசீலனை மற்றும் ஆலோசனைகளுக்குப் பிறகு இந்த முடிவை எடுத்துள்ளேன் என்று கூறியுள்ளார் ராடியா.

ராடியாவின் இந்த திடீர் முடிவு பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. இதுகுறித்து கருத்து தெரிவித்த டாடா குழுமத் தலைவர் ரத்தன் டாடா, ராடியாவின் இந்த தனிப்பட்ட முடிவை நாங்கள் மதிக்கிறோம். மிகக் கடுமையாக போராடி தனது வைஷ்ணவி நிறுவனத்தை உயர்த்தியவர் ராடியா. தனது வாடிக்கையாளர் நலனுக்காக குடும்பத்தைக் கூட இரண்டாம் கட்டமாக பார்த்தவர் ராடியா. அவரது உழைப்பும், செயல்பாடும் பாராட்டுக்குரியவை என்றார்.

இதேபோல ரிலையன்ஸ் நிறுவனமும் ராடியாவின் முடிவு குறித்து அதிர்ச்சியும், வருத்தமும் தெரிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக