ஞாயிறு, 30 அக்டோபர், 2011

சி.பி.ஐ. நாளை மீண்டும் சொரூபத்தைக் காட்டும் “சாரி.. நோ ஜாமீன்!”

Viruvirupuபுதுடில்லி, இந்தியா: ஸ்பெக்ட்ரம் வழக்கில் நாளை (திங்கட்கிழமை) டில்லி சுப்ரீம் கோர்ட்டுக்கு வரவுள்ள ஜாமீன் மனுக்களை எதிர்ப்பது என்ற முடிவை சி.பி.ஐ. எடுத்திருப்பதாக தெரியவருகின்றது. இது தொடர்பான இன்ஸ்ட்ரக்ஷன், சி.பி.ஐ. வக்கீல்களிடம் இன்றே கொடுக்கப்பட்டு விட்டதாகவும் டில்லி வட்டாரங்களில் கூறப்படுகின்றது.
நாளை சுப்ரீம் கோர்ட்டில் ஐந்து பேருடைய ஜாமீன் மனுக்கள் விசாரணைக்கு வரவுள்ளன. இவர்களது ஜாமீன் மனுக்கள்மீது சி.பி.ஐ. ஆட்சேபணை ஏதும் தெரிவிக்காது என்ற எதிர்பார்ப்பு இருந்தது. அதற்கு காரணமும் உள்ளது.
இந்த வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ள அனைவரது ஜாமீன் மனுக்களும் எந்த நீதிமன்றத்துக்கு வந்தாலும், சி.பி.ஐ. எதிர்ப்பு தெரிவித்து வந்தது. இதனாலேயே யாருக்கும் ஜாமீன் கிடைக்காத நிலை இருந்தது. கடந்த வாரம் திடீர் திருப்பமாக கனிமொழியின் ஜாமீன் மனு விசாரணைக்கு வந்தபோது, ஆச்சரியகரமாக சி.பி.ஐ., “எமக்கு எந்த ஆட்சேபணையும் கிடையாது” என்றது.
கனிமொழிக்கு மாத்திரம் விதிவிலக்கு அளிக்காமல், அவருடன் மனு செய்திருந்த கலைஞர் டி.வி. சரத் குமார், ஆசிப் பால்வா, ராஜிவ் அகர்வால், கரிம் மொரானி ஆகியோருடைய ஜாமீன் மனுக்களையும் சி.பி.ஐ. எதிர்க்கவில்லை. கலைஞர் டில்லியில் தங்கியிருந்து, சோனியா காந்தி மற்றும் பிரதமரை சந்தித்தபின் நடைபெற்ற திருப்பம் இது.

இதையடுத்து, நாளை ஜாமீன் மனுக்கள் விசாரணைக்கு வரும் ஐந்து பேரின் ஜாமீன் மனுக்களையும் சி.பி.ஐ. எதிர்க்காமல் விட்டுவிடும் என்று டில்லி மீடியாக்கள் செய்தி வெளியிட்டன. சஞ்சய் சந்த்ரா, வினோத் கோங்கா, அனில் திருபாய், ஹரி நாயர், கௌதம் தோஷி ஆகியோரின் மனுக்களே நாளை விசாரணைக்கு வரவுள்ளன.
இவர்கள் அனைவரும் கனிமொழி போலவே 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில்தான் கைது செய்யப்பட்டு, கனிமொழி போலவே திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
நாளை இவர்களது மனு விசாரணைக்கு வரும்போது, சி.பி.ஐ. எதிர்க்கப் போகின்றது என்பது டில்லி வட்டாரத் தகவல்களின்படி  கிட்டத்தட்ட நிச்சயமாகிவிட்ட நிலையில், அதை இவர்களது வக்கீல்கள் எப்படி எடுத்துக் கொள்ளப் போகிறார்கள்? கனிமொழியில் ஜாமீன் மனுவுக்கு சி.பி.ஐ. ஏன் எதிர்ப்பு காட்டவில்லை என்று கேட்பார்களா? அப்படிக் கேட்டால் என்னாகும்?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக