செவ்வாய், 18 அக்டோபர், 2011

திருக்கேதீஸ்வர ஆலய புனரமைப்பு: இலங்கை – இந்தியா நேற்று ஒப்பந்தம்

வரலாற்றுப் புகழ்மிக்க திருக்கேதீஸ்வரம் ஆலயத்தின் திருப்பணிகளுக்கு இலங்கை நாணயப்படி 326 மில்லியன் ரூபாவை இந்தியா வழங்கியுள்ளது. இது தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தமொன்று இலங்கையிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்துக்கும், ஆலயத்தின் திருப்பணி சபையினருக்கு மிடையில் நேற்று கைச்சாத்தானது.இந்த ஒப்பந்தத்துக்கமைய திருக்கேதீஸ்வரம் ஆலயத்தில் மஹா மண்டபம் அமைப்பதற்கான சகல உதவிகளும் இந்தியாவினால் மேற்கொள்ளப்படும்.

இம்மண்டபத்துக்கான கற்கள் மூலப்பொருள்கள் மற்றும் அவற்றை அமைப்பதற்கான கலைஞர்கள் மற்றும் சிற்பிகள் அனைவரும் இந்தியாவிலிருந்தே அழைத்துவரப்படுவார்கள் என திருக்கேதீஸ்வரம் திருப்பணிச்சபையின் இணைச்செயலாளர் புலவர் அம்பலவாணர் திருநாவுக்கரசு தெரிவித்தார்.
அத்துடன் வரலாற்றுடன் தொடர்புடைய 10 ஒட்டணித் தூண்கள் இந்தியாவிலிருந்து கொண்டுவரப்படவுள்ளன.இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் திருக்கேதீஸ்வரம் ஆலயம் சார்பில் திருப்பணிச்சபையின் பணிப்பாளர் சபைத் தலைவர் வி. கைலாசபிள்ளை, இந்திய அரசின் சார்பில் இலங்கையிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகர் அசோக் கே. காந்தா ஆகியோர் கைச்சாத்திட்டனர்.
பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ, வடமாகாண ஆளுநர் ஜி.ஏ. சந்திரசிறி, மிலிந்த மொரகொட, இந்துசமய இந்துகலாசார திணைக்களத்தின் தலைவர் சாந்தி நாவுக்கரசன், திருக்கேதீஸ்வர பணிப்பாளர் சபை உறுப்பினர்களான எம். தவயோகராஜா, எஸ். சுப்ரமணியம் செட்டியார், திருப்பணிச் சபையின் இணை செயலாளர் புலவர் அம்பலவாணர் திருநாவுக்கரசு மற்றும் இந்திய உயர் ஸ்தானிகராலய அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.
கொழும்பு சினமன் கிராண்ட் ஹோட்டலில் நடைபெற்ற நிகழ்வின் போதே இவ்ஒப்பந்தம் கைச்சாத்தானது. ஆலயத்தின் நான்கு பிரதான கோபுரங்களையும் அமைத்துத் தருமாறும் இந்திய அரசிடம் பணிப்பாளர் சபையினர் வேண்டுகோள் விடுத்தனர்.ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் இந்திய விஜயத்தின் போது எட்டப்பட்ட பேச்சுவார்த்தைகளுக்கு அமையவே இந்தியா மேற்படி உதவிகளை வழங்குவதாக இந்திய உயர் ஸ்தானிகர் அசோக் கே. காந்தா குறிப்பிட்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக