திங்கள், 17 அக்டோபர், 2011

வாக்காளர்களுக்கு மூக்குத்தி, ஜாக்கெட்... கண்டுகொள்ளாத தேர்தல் அதிகாரிகள்!

சென்னை: உள்ளாட்சி அமைப்புகளுக்கு இன்று முதல்கட்ட வாக்குப் பதிவு நடக்கும் பகுதிகளில் மூக்குத்தி, ஜாக்கெட் என வாக்காளர்களுக்கு பரிசு மழை பொழிந்தனர் அரசியல் கட்சி வேட்பாளர்கள்.
ஆனால் இவை எதையுமே கண்டு கொள்ளவில்லை தேர்தல் அதிகாரிகள்.
தமிழக உள்ளாட்சித் தேர்தலில் முதல் கட்ட வாக்குப் பதிவு நாளை நடக்கிறது. இதையொட்டி நேற்றுமாலை 5 மணியுடன் பிரச்சாரம் ஓய்ந்தது. இந்த தேர்தலில் அனைத்து கட்சிகளும் தனித்து களமிறங்கியுள்ளதால் உள்ளாட்சி தேர்தல் களைகட்டியுள்ளது. பிரச்சாரம் அனவ் பறந்தது.
இந்ததேர்தலில் சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தலின் போது கெடுபிடிகள் அதிகம் இல்லாததால் வேட்பாளர்கள் தாராளமாகச் செயல்பட்டனர்.
அரசியல் கட்சியினருக்கு நிகராக சுயேட்சை வேட்பாளர்களும் வாக்காளர்களை கவர பல்வேறு பரிசுப் பொருட்களை வாரி வழங்கினர். மேலும் தேர்தல் விதிமுறைகளையும் முறையாக கடைபிடிக்காமல் பிரச்சாரம் செய்தனர்.

நேற்று மாலை 5 மணியுடன் பிரச்சாரம் ஓய்ந்ததையடுத்து வாக்களர்களுக்கு பரிசுப் பொருட்கள் விநியோகத்தில் வேட்பாளர்களும், அவர்களது ஆதரவாளர்களும் நேற்று இரவு ஈடுபட்டனர். வீடு, வீடாக சென்று அரைகிராம் தங்க மூக்குத்தி, தாலிக் கயிறில் இணைக்கும் குழல், புடவை, ஜாக்கெட், சில்வர் குடம், அண்டா, காமாட்சி விளக்கு உள்ளிட்ட பொருட்களை கொடுத்து வருகின்றனர். இவற்றுடன் வெற்றிலை பாக்கில் ரூ 500 அல்லது புத்தம் புது 20 ரூபாய்களை கத்தையாக வைத்து கொடுத்து வருகின்றனர்.

பரிசுப் பொருட்கள் விநியோகம் கிராமங்களில் வெகுஜோராக நடந்து வருகிறது. குறிப்பாக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் போச்சம்பள்ளி, வேப்பனஹள்ளி, ஒசூர் உள்ளிட்ட இடங்களில் விநியோகம் களை கட்டியுள்ளது. அரசியல் கட்சியினரும், சுயேட்சை வேட்பாளர்களும் பாகுபாடின்றி கொடுத்து வருகின்றனர்.

சிலர் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட சின்னங்களையே பரிசுப் பொருளாக வழங்கி வருகின்றனர். ஆனால் இந்த பரிசுப் பொருள், பணம் விநியோகம் தாராளமாக, வெளிப்படையாக நடப் பதை அதிகாரிகள் யாரும் கண்டு கொள்ளவில்லை.

சென்னையில் புறநகர்ப் பகுதிகளில் எந்த பயமும் இல்லாமல், வெளிப்படையாக பரிசுகள் மற்றும் பணம் விநியோகித்து வருகின்றனர். மடிப்பாக்கம் நெடுஞ்சாலையில் வைத்தே சில வேட்பாளர்கள் பணம் விநியோகித்துக் கொண்டிருந்ததைப் பார்க்க முடிந்தது.

டாஸ்மாக் கடைகள் விடுமுறை என அறிவிக்கப்பட்டிருந்தாலும், சில வேட்பாளர்கள் குடிமகன்களுக்கு சரக்கு விநியோகமும் செய்து வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக