திங்கள், 17 அக்டோபர், 2011

எஜமானருக்கு பயந்து 4 நாட்களாக காட்டுக்குள் பதுங்கி இருந்த 19 பேர் மீட்பு


ராமேசுவரம் தங்கச்சிமடம் அருகே உள்ள 4 பனை கிராமத்தில் 19 பேர் தஞ்சம் அடைந்துள்ளதாக வருவாய்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. அதை தொடர்ந்து அதிகாரிகள் அந்த கிராமத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
அப்போது அவர்கள் ராமேசுவரம் சேரான்கோட்டையில் வசித்த 5 குடும்பங்களை சேர்ந்த முனீஸ்வரன் (வயது29), மங்களேசுவரி, சத்யா, ஈஸ்வரன், பரமேசுவரன், நாகராணி, அஞ்சலி, மூக்குபூரி(50), கோவிந்தராஜ்(25), துர்கா, நம்புராஜா(30), பிரியா(20), ஆறுமுகம், முனீஸ்வரி, முத்துராணி(25), பூமாரி, நம்பு மற்றும் 10 மாத குழந்தை ஒன்று என்பது தெரியவந்தது.

அவர்களிடம் தாசில்தார் விசாரணை நடத்தினார். அவர்கள் கூறியதாவது: நாங்கள் அனைவரும் சேராங்கோட்டை கிராமத்தில் வசித்துவந்தோம். கடந்த 10 வருடங்களுக்கு முன்பு தூத்துக்குடியை சேர்ந்த செல்வராஜ் என்பவர் நல்ல சம்பளத்துடன் வேலை தருவதாக கூறினார். இதனால் 5 குடும்பத்தினரும் தூத்துக்குடி சென்றோம். அங்கு குடும்பச் செலவுக்காக செல்வராஜிடம் கடன் வாங்கினோம்.
பின்னர் செல்வராஜ் முல்லைகாடு என்ற கடற்கரை பகுதியில் உள்ள பண்ணையில் குடிசைகள் அமைத்து கொடுத்தார். எங்களுக்கு ஆடு, மாடு, கோழிகளை பராமரிக்கவும், பாதுகாக்கவும் வேலை கொடுத்தார். மீன்பிடி தொழிலிலும் ஈடுபடுத்தினார். அதற்கு அவர் போதுமான சம்பளம் வழங்காமல் கொத்தடிமைகள் போல் நடத்தினார்.
நாங்கள் சாப்பாட்டுக்கு கூட வழியில்லாமல் அவதிப்பட்டோம். குடிக்க தண்ணீர் கூட கிடைக்கவில்லை. இதனால் நாங்கள் வாங்கிய கடனை கொடுத்துவிடுகிறோம் எங்களை அனுப்பி வையுங்கள் என்று செல்வராஜிடம் முறையிட்டோம். அதற்கு அவர் கொலைமிரட்டல் விடுத்தார். கடந்த 10 நாட்களுக்குமுன்பு பண்ணையில் இருந்த கோழிகளை காணவில்லை. நாங்கள் திருடி விற்று விட்டதாக அடித்தார்.
இதனால் மன வேதனை அடைந்த நாங்கள் அங்கிருந்து தப்பி பஸ் மூலம் ராமேசுவரம் 4 பனைக்கு வந்தோம். இங்குள்ள காட்டுப்பகுதியில் கடந்த 4 நாட்களாக தங்கி இருந்தோம். செல்வராஜ் எங்களை பிடித்து சென்று விடுவாரோ என்று பயந்து போய் ஊருக்குள் வராமல் காட்டுப்பகுதியில் தங்கி இருந்தோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.
இதுகுறித்து தாசில்தார் கதிரேசன் மாவட்ட கலெக்டர், வருவாய் அதிகாரியிடம் தெரிவித்தார். மேலும் 5 குடும்பங்களும் சேராங்கோட்டையில் வசிக்க நடவடிக்கை எடுத்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக