சனி, 15 அக்டோபர், 2011

வாழ்க, தலைவர்கள்! தலைவர்கள் காமெடி


ramathasKARUNANIDHI-0309நகைச்சுவை உணர்வில் தமிழக அரசியல் தலைவர்களை மிஞ்சக் கூடிய தலைவர்கள், மற்ற மாநிலங்களில் இருப்பார்களா என்பது சந்தேகமே. நம்மூர் தலைவர்கள் போட்டி போட்டுக் கொண்டு காமடி கருத்துகளைச் சரமாரியாக வெளியிடுவதால், யாருடைய காமடியைப் பாராட்டுவது என்ற குழப்பமே ஏற்பட்டு விடுகிறது.
‘சட்டசபைத் தேர்தலில் பா.ம.க. தனித்துப் போட்டியிட்டிருந்தால், 40, 50 தொகுதிகளில் ஜெயித்திருக்கும்’ என்று சீரியஸாக ஜோக் அடித்திருக்கிறார் டாக்டர் ராமதாஸ். தனியாக நின்றால் நாற்பது, ஐம்பது இடங்களில் ஜெயிக்கக் கூடிய கட்சி எதற்காக 30 இடங்களுக்கு ஒப்புக் கொண்டு தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்தது என்று கேட்கிற அளவுக்கு சிந்திக்கக் கூடியவர்கள், பா.ம.க.வில் இருக்க மாட்டார்கள் என்ற தன்னம்பிக்கைதான் அவரது பலம்.ராமதாஸ் கருத்துப்படி பார்த்தால், அவர் மிகப் பெரிய தியாகம் செய்திருக்கிறார். தனியாகவே 40, 50 இடங்களில் ஜெயிக்கக் கூடிய பலமிருந்தும், தி.மு.க. தந்த 30 இடங்களுக்கு சம்மதித்து, தேர்தலுக்கு முன்பே 10, 20 தொகுதிகளைத் தியாகம் செய்துள்ளார். தி.மு.க. வாக்குகளையும் சேர்த்து, வெறும் 3 இடங்களில் மட்டுமே ஜெயித்த வகையில் 37 முதல் 47 தொகுதிகள் வரை நஷ்டப்பட்டிருக்கிறார். அதாவது, தன்னால் பூஜ்யம் மார்க் போடப்பட்ட தி.மு.க.வுடன் துணிந்து கூட்டணி அமைத்து, கிட்டத்தட்ட கட்சியையே தியாகம் செய்யத் துணிந்திருக்கிறார்.

இதை அவருடைய தவறு என்று கூறுவது முறையல்ல. தி.மு.க. வின் ஆட்சிக்கு பூஜ்யம் மார்க் போட்ட மறு வாரமே, அதற்கு நூறு மார்க் போட்ட அவருடைய பெருந்தன்மை மக்களுக்கு இல்லாமல் போய்விட்டது. தகுதி பார்க்காமல் மார்க் போடுகிற ராமதாஸின் அந்த பரந்த உள்ளம் மக்களுக்கும் இருந்திருந்தால், பா.ம.க. போட்டியிட்ட 30 இடங்களிலும் ஜெயித்திருக்கும். ‘பா.ம.க. தனித்து போட்டியிட்டிருந்தால் 234 இடங்களிலும் ஜெயித்திருக்கும்’ என்று அவர் இப்போது கூறியிருக்க முடியும். நாற்பது, ஐம்பது இடங்களில் ஜெயித்திருப்போம் என்று கூற வேண்டிய அவல நிலை ஏற்பட்டிருக்காது. மக்கள் இனியாவது பெருந்தன்மையுடன் வாக்களிக்க கற்றுக் கொள்ள வேண்டும்.

சரி, வருத்தத்துடன் அடுத்த நகைச்சுவைக்குப் போவோம் – சோகமோ, கோபமோ, வீரமோ எந்த உணர்ச்சியைக் காட்டுவதாக இருந்தாலும் நகைச்சுவை கலந்து பேசுவதை தனது கொள்கையாகவே வைத்திருப் பவர் கலைஞர்தான். நாகரிகக் குறைவாகப் பேசிய ஒரு அமைச்சரைக் கண்டித்துப் பேசும்போதுகூட, ‘தமிழன் தமிழனாக வாழ்கிறான், தன்மான உணர்ச்சியைப் பெறுகிறான் என்ற நிலை வந்தது என்று கேள்விப்படும்போதுதான், என் உயிர் போகும்’ என்றே கூறியிருக்கிறார்.

அதாவது, தமிழன் இப்போது தமிழனாக வாழவில்லை. அவனுக்கு தன்மான உணர்ச்சி இன்னும் வரவில்லை என்பது கலைஞரின் கருத்து. 2006 மே முதல் 2011 மே வரை தன்மான உணர்ச்சியோடு வாழ்ந்து வந்த தமிழன், ஓட்டு எண்ணிக்கை அன்றே தமிழன் என்ற உணர்வையும் தன்மான உணர்வையும் இழந்து விட்டது எவ்வளவு பெரிய கொடுமை? கலைஞர் ஐந்து வருடங்கள் ஆட்சி செய்தும், தமிழனுக்கு குறைந்தபட்சம் தன்மான உணர்வைக் கூடவா நிரந்தரமாக ஏற்படுத்தித் தர முடியவில்லை? இதென்ன மின் பற்றாக் குறையை சீரமைப்பது போன்று அவ்வளவு கஷ்டமான காரியமா?
ஐந்து முறை முதல்வராக இருந்தும் தமிழனை தமிழனாக வாழ வைக்க, அவனுக்கு தன்மான உணர்வு போகாமல் இருக்க கலைஞர் ஒன்றுமே செய்யவில்லை என்பது இப்போதுதான் புரிகிறது.

ஐந்து வருடங்களுக்கு ஒருமுறை வந்து வந்து போகிற அந்த தன்மான உணர்வால் தமிழனுக்குத்தான் என்ன பயன்? கலைஞர் ஆட்சியில் இருக்கும்போது மட்டும்தான் தமிழனுக்கு தன்மான உணர்வு இருக்கிறது என்று எடுத்துக் கொண்டால், அது வெறும் ஐந்து வருட கான்ட்ராக்ட் சமாச்சாரம்தானா?

சரி, மத்தியிலே தி.மு.க. இன்னும் அங்கம் வகிக்கிறதே. அப்படியென்றால், தற்சமயம் மத்திய தமிழனுக்கு தன்மான உணர்வு இருக்கிறதென்றும், மாநிலத் தமிழனுக்கு அது போய்விட்டது என்றும் பொருள் கொள்ளலாமா? தன்மானம் வராவிட்டால் போகிறது. கலைஞரின் கருத்துப்படி தன்மானம் என்பது என்ன என்றுகூட புரிந்து தொலைய மாட்டேன் என்கிறதே?

எப்படியோ போகட்டும்! தமிழன் தன்மான உணர்வைப் பெறும் காலம் வரும்வரை தன் உயிர் போகாது என்று கலைஞர் உறுதியோடு கூறியிருப்பதால், தமிழனுக்கு அந்தத் தன்மான உணர்வு வரவே வேண்டாம். கலைஞர் நீண்ட காலம் வாழட்டும். இப்படிப்பட்ட நகைச்சுவைகளை நாட்டுக்கு வழங்க, அனைத்துத் தலைவர்களும் தீர்க்காயுளுடன் வாழ வேண்டும்.

– நாராயணன்   (துக்ளக்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக