திங்கள், 24 அக்டோபர், 2011

விஜயகாந்தின் வாந்தி: ஆளும் கட்சிதான் வெல்லும் என்பது நியதியாம்


விஜயகாந்துக்கு சொல்ல மறந்த (அல்லது மறந்தும் சொல்லாத) ட்ரிக்!சென்னை, இந்தியா: “உள்ளாட்சித் தேர்தல் என்றாலே ஆளும் கட்சி வெற்றி பெறுவது என்றுதானே அர்த்தம். இதில் ஆச்சரியப்பட என்ன இருக்கிறது?”  என்று கேட்டிருக்கிறார், உள்ளாட்சித் தேர்தலுக்காக பம்பரமாகச் சுழன்று பிரச்சாரம் செய்த விஜயகாந்த். தேர்தல் முடிவுகள் வெளியானபோது, பம்பரம் சுற்றியது பெரிதாக எடுபடவில்லை என்று வெட்ட வெளிச்சமாகி விட்டதில் கேப்டன் இப்படிச் சொல்லி விட்டார்.
பாவம், “உள்ளாட்சித் தேர்தல் என்றாலே ஆளும் கட்சி வெற்றி பெறுவது என்றுதானே அர்த்தம்” என்ற விஷயத்தை யாராவது அவருக்கு முன்கூட்டியே தெரிவித்திருந்தால், அவருக்கு தொண்டை வலியாவது ஏற்படாமல் இருந்திருக்கும்.

மொத்தமுள்ள 10 மாநகராட்சிகளில், ஒரு மேயர் பதவியைக்கூட கேப்டன் கட்சியினரால் பெற முடியவில்லை.
கம்யூனிஸ்ட் கூட்டணியுடன் உள்ளாட்சித் தேர்தலை சந்தித்த இவர்கள், அநேக மாநகராட்சிகளில் மூன்றாவது இடத்தையாவது பிடிக்க முடிந்தது. இவர்களுடன் கூட்டணி வைத்து போட்டியிட்ட, அடுத்த பார்ட்ரான இடது கம்யூனிஸ்ட் இருட்டு விட்டத்தில் தாவிய குருட்டுப் பூனை!
இந்த 10 மாநகராட்சிகளிலும் சேர்த்து வெறும் 8 கவுன்சிலர்கள் தே.மு.தி.க. சார்பில் ஜெயித்துள்ளனர். அதைவிட, 2 நகராட்சித் தலைவர்கள், 3 பேரூராட்சித் தலைவர்கள் என்று ஒற்றை எண்ணிக்கையில் வெற்றி பெற்றுள்ளனர். மொத்தமாகப் பார்த்தால், 120 நகராட்சி கவுன்சிலர்கள் உட்பட, மொத்தம் 858 பிரதிநிதிகள் தே.மு.தி.க.வில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்து, மாநகராட்சிகளில் 3 கவுன்சிலர்கள், 2 நகரசபைத் தலைவர்கள், 20 நகரசபை உறுப்பினர்கள் உட்பட, மொத்தம் 159 பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்து மாநகராட்சியில் 4 கவுன்சிலர்கள், நகராட்சியில் 10 கவுன்சிலர்கள் உட்பட, மொத்தம் 99 பிரதிநிதிகள் வெற்றி பெற்றுள்ளனர்.
இது வெளியே சொல்லிக்கொள்ளும் விதத்திலான எண்ணிக்கை அல்ல என்பது உண்மைதான். ஓவர்-ஆல் பிக்சரில், Single party seats-to-votes ratio கணக்கு பார்த்தால், தே.மு.தி.க. 5வது இடத்தில் நிற்கின்றது. விஜயகாந்த் வில்லன்களை செமையாக குத்துவதுபோல, இது செம அடி! அதுவும் உண்மைதான்!
ஆனால், அரசியல்வாதி விஜயகாந்துக்கு இந்த தரவை எப்படி தனக்கு சாதகமாக ட்டுவிஸ்ட் பண்ணி வெளியே காட்டலாம் என்பது தெரியவில்லை என்பதுதான் ஆச்சரியம்! இதே தேர்தல் முடிவுகளை ‘தோசை திருப்பிப் போடுவதுபோல’ கொஞ்சம் மாற்றிப் போட்டு, சொல்ல முடியும். அதை ஏன் கேப்டன் செய்யவில்லை?
அப்படிச் செய்திருந்தால், அட்லீஸ்ட் புலம்பலையாவது தவிர்த்திருக்கலாம்.
அது எப்படி? உள்ளாட்சி அமைப்புக்களின் பவர் சென்டர்களே மாநகராட்சிகள்தான். அந்த வகையில் பார்த்தால், 10 மாநகராட்சிகளில் தே.மு.தி.க.வும், மாக்சிஸ்ட் கட்சியினருமாக சேர்த்து, மொத்தம் 7 இடங்களில் இவர்களது கூட்டணி, மூன்றாவது இடத்தைப் பிடித்திருக்கின்றது. அதேபோல இந்த 3 கட்சிகளும் இணைந்த கூட்டணி சார்பில் மொத்தம் 1116 பிரதிநிதிகள் (858+159+99) பேர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
அந்த விதத்தில், அ.தி.மு.க., தி.மு.க.வுக்கு அடுத்த இடத்தில் இவர்களது கூட்டணி வருகின்றது. இப்படியொரு கணக்கை கேப்டன் வாரி விட்டிருக்கலாமே! கூட்டுத் தொகையில் என்ன பிரேக்-டவுன் என்று எல்லோரும் பார்க்கவா போகிறார்கள்?
சினிமாவிலும் சரி, அரசியலிலும் சரி, இல்லாததை இருப்பது போல காட்ட வேண்டும். இருப்பதை, அதைவிட பெரிதாகக் காட்டவேண்டும். சினிமாவில் விஜயகாந்த் கொடுக்கும் ஒவ்வொரு அடியும், வில்லன் தலையில் இடியாக இறங்குவது அப்படித்தானே.
அதே பிலோசஃபியை தேர்தல் முடிவுகளில் ஏன் உபயோகிக்காமல் மிஸ் பண்ணினார் கேப்டன்? (பண்ணுருட்டியார் சொல்லிக் கொடுக்கவில்லையோ!)

• படித்தது, பிடித்திருக்கிறதா? நண்பர்களிடம் “விறுவிறுப்பு.காம்” பற்றி கூறுங்களேன்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக