செவ்வாய், 20 செப்டம்பர், 2011

டக்ளஸ் தேவானந்தாவை கைது செய்ய முடியாது: மத்திய அரசு


Douglas Devananda with Manmohan Singh

 இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை கைது செய்ய முடியாது என்று உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கடந்த ஆண்டு அரசு முறை பயணமாக அந்த நாட்டு அதிபர் ராஜபக்சேவுடன் இந்தியாவுக்கு வந்தார். அப்போது அவரை உடனடியாக கைது செய்ய உத்தரவிடக்கோரி சிறை கைதிகள் உரிமைகள் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் புகழேந்தி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு பொது நல மனு தாக்கல் செய்தார்.


அதில், சென்னை சூளைமேட்டில் திருநாவுக்கரசு என்ற வாலிபர் 1986ல் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்தக் கொலை வழக்கில் டக்ளஸ் தேவானந்தா மீது குற்றம் சாட்டப்பட்டது. இதில் கைதான டக்ளஸ் தேவானந்தா ஜாமீனில் வெளியே வந்தார். பின்னர் இலங்கைக்கு தப்பிச் சென்றார். இவர் மீதான வழக்கு சென்னை 6வது கூடுதல் செசன்சு கோர்ட்டில் நிலுவையில் இருந்து வருகிறது. இந்த வழக்கில் 1994ல் டக்ளசுக்கு எதிராக தேடப்படும் குற்றவாளியாக அறிவித்து வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஆகவே அவரை உடனடியாக கைது செய்யுமாறு சென்னை போலீசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார்.

இந்த மனுவுக்கு மத்திய அரசின் சார்பில் இலங்கைக்கான வெளியுறவுத்துறை துறை சார்பு செயலாளர் கே.எம்.பி.சர்மா பதில் மனு தாக்கல் செய்துள்ளார். அதில்,

கைதிகள் பரிமாற்றம் தொடர்பாக இலங்கையுடன் இந்தியா எந்த உடன்படிக்கையும் செய்து கொள்ளவில்லை. இருப்பினும் கைதிகள் பரிமாற்றம் சட்டத்தின்கீழ் இரு நாடுகளுக்கு இடையே 1978ல் கைதிகள் பரிமாற்றம் தொடர்பாக ஒரு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. டக்ளஸ் தேவானந்தா அந்நாட்டு அமைச்சராக உள்ளார். இந்தியாவுக்கு வருகை தந்தபோது அவரை கைது செய்ய முடியாது. அவரை கைது செய்வது என்பது இரு நாடுகளுக்கிடையேயான தூதரக உறவுக்கு எதிரானதாகும்.

ஆகவே இந்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

வழக்கை விசாரித்த நீதிபதிகள் நாகப்பன், சத்திய நாராயணன் ஆகியோர் விசாரணையை 4 வார காலத்துக்கு தள்ளி வைத்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக