ஞாயிறு, 4 செப்டம்பர், 2011

கேரள பத்மநாபசாமி கோயில் தங்க நகை கடத்தல் அம்பலம்

சாமி குத்தம் - உயிருக்கு ஆபத்து என்பதெல்லாம் மூடநம்பிக்கைகளே!
ஆறாவது அறை திறந்து எல்லா பொக்கிஷமும்  கணக்கிட வேண்டும் மத்திய அரசு உடனே தலையிட்டு நடவடிக்கை எடுத்திடுக!
சென்னை, செப்.3- பத்மநாபசாமி கோயிலி லிருந்து மன்னர் குடும்பத்தினர் தங்கம் நகை கடத்துகின்றனர் என்ற குற்றச்சாட்டு வெளிப் படையாக வெளிவந்துள்ளது. இந்நிலையில் கோயிலின் ஆறாவது கதவையும் திறந்து மொத்த பொக்கிஷங்களையும் மத்திய அரசு கணக்கிட வேண்டும். மூடநம்பிக்கைகளைக் கண்டு ஏமாறக் கூடாதென்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளார். அவரது அறிக்கை வருமாறு:

சாமி குத்தம் - உயிருக்கு ஆபத்து!
நம் நாட்டில் இருப்பதிலேயே மிகப் பெரிய முதலாளிக் கடவுள் திருப்பதி வெங்கடாஜலபதிதான் என்று நிலவிய கருத்தை பின்னுக்குத் தள்ளி திருவனந்தபுரத்து பத்மநாபசாமி அதன் ஆறு அறைகளில் வைக்கப்பட்டு, திறந்தநிலையில் இன்னும் ஆறாவது அறையைத் திறக்கவே இல்லை, காரணம் அதற்கு அங்குள்ள மன்னர் வம்சத்தவரும் மற்றும் சிலரும் தேவபிரசன்னம் சாமி குத்தம், உயிருக்கு ஆபத்து, நாட்டிற்கு கேடு என்ற பூச்சாண்டி, புருடாக்களை விட்டு, தினம் தினம் கோயில் பொருள்கள் கொள்ளையடிக்கப்பட்டு போகின்றன என்ற நிலை உள்ளது என்பதை முன்னாள் கேரள முதல்வர், இந்நாள் எதிர்க்கட்சித் தலைவர் அச்சுதானந்தன் கடுமையான அறிக்கை வெளியிட்டு வருகிறார்.

மன்னர் தங்கம் கடத்தல்
பழைய மன்னர் பரம்பரையான மார்த்தாண்டவர்மன் என்பவர் நாளும் வழிபடச் செல்வதாகக் கூறி, பிரசாதம் வாங்குவதாகக் கூறி நகை, தங்கம் இவற்றைக் கடத்துகிறார் என்று கூறியுள்ளார். இது மிகப் பெரிய குற்றச்சாற்று அல்லவா? இதுபற்றி விசாரிக்க கேரள மாநில அரசு தயங்குகிறது. மத்திய அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டு கை கட்டி வாய்களைப் பொத்திக் கொண்டிருக்கக் கூடாது. தாமதிக்காமல் நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும்.

கேரள பகுத்தறிவாளர்கள் கொடுத்த விண்ணப்பம்
கேரள பகுத்தறிவாளர்கள் - யுக்திவாதிகள் சங்கத் தினர் - உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அவர்களுக்கு ஒரு விண்ணப்ப மனுவையே இதற்கென அனுப்பி யுள்ளனர்!

முடிவு செய்வது நீதிபதிகளே தவிர பூசாரிகள் அல்ல
உச்சநீதிமன்றமும் நேற்று கடுமையாக கூறியுள்ளது. இனியும் ஏதோ வீண் சால்ஜாப்பு - சமாதானம் - கூறாமல்,   நகைகள், சொத்துக்களின் மதிப்பீட்டை செய்யத் துவங்க வேண்டும். காலதாமதம் செய்யாமல் இதை முடிவு செய்ய வேண்டியது நீதிபதிகளே தவிர, பூசாரிகள் அல்ல! அல்லவே!

21ஆம் நூற்றாண்டிலும் ஏன் இந்த மூடநம்பிக்கை?
ஆறாவது அறை என்ன மற்ற 5 அறைகளுக்குமேல் சக்தி உள்ளதா? பின் ஏன் வேண்டுமென்றே இந்த அச்சுறுத்தல்கள்? அதுவும் இந்த 21ஆம் நூற்றாண்டில் கூடவா இவ்வளவு தேவபிரசன்னம் மூடநம்பிக்கை?
கேரள உயர்நீதிமன்றத்தில் வந்த ஒரு பொது நல வழக்கையொட்டி, அய்யப்பன் மகரஜோதி மோசடி அப்பட்டமாக அம்பலப்படுத்தி விட்டது என்றாலும் பக்தி மூடநம்பிக்கையில் பரவசம் காணுவோர் குறைய வில்லையே!

அரசியல் சட்டம் 51A பிரிவின்படி
உடனடியாக மத்திய மாநில அரசுகள் அரசியல் சட்டம் 51A பிரிவு விதித்துள்ள அடிப்படைக் கடமையான அறிவியல் மனப்பாங்கு பெருக்கத்தினையாவது (Scientific temper) செய்ய வேண்டாமா அதன் மீது பிரமாணம் எடுத்த முக்கிய ஆட்சியினர்?

இப்போதாவது புரிகிறதா?

நமது இயக்கம் இத்தகைய பிரச்சாரத்தினை தொடர்ந்து செய்து வருவது எவ்வளவு நியாயம் என்பது இப்போதாவது புரிந்தால் போதும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக