புதன், 21 செப்டம்பர், 2011

பிரசாரத்திற்கு திமுக தயாராகிறது அழகிரியுடனும் ஆலோசனை

இடைதேர்தல், உள்ளாட்சி தேர்தல் பிரச்சாரத்திற்கு தயாராகும் கருணாநிதி-மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை

சென்னை: உள்ளாட்சித் தேர்தல் மற்றும் திருச்சி மேற்கு தொகுதி இடைத்தேர்தல் ஆகியவற்றில் பிரசாரம் மேற்கொள்ள முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான கருணாநிதி தயாராகி வருகிறார்.
உள்ளாட்சித் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், திருச்சி மேற்கு தொகுதி தேர்தல் வரும் அக்டோபர் 13ம் தேதி நடக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இடைத்தேர்தலில் போட்டியிடும் முக்கிய கட்சிகளான ஆளுங்கட்சியான அ.தி.மு.க. மு.பரஞ்சோதியை வேட்பாளராக அறிவித்துள்ளது. தி.மு.க. தரப்பில் கே.என்.நேரு போட்டியிடுகிறார்.
இடைத்தேர்தல் பணிகளில் அனைத்து கட்சியினரும் களமிறங்கி உள்ளனர். இந்நிலையில் தி.மு.க. தலைவரும், முன்னாள முதல்வருமான கருணாநிதி தேர்தல் பிரசாரத்திற்காக தயாராகி வருகிறார். இதற்காக கடந்த பொதுத் தேர்தலில் பயன்படுத்திய பிரசார வாகனம் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

திருச்சி மேற்கு தொகுதியில் கருணாநிதி பிரசாரம் மேற்கொள்ளும் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. ஆனால் அங்கு போட்டியிடும் கே.என்.நேருவிற்கு எதிராக பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகள் பொய்யானது என்பதை சுட்டிக் காட்டும் வகையில் கருணாநிதி பிரச்சாரம் மேற்கொள்ளுவார் என தெரிகிறது.

திருச்சியில் 3 இடங்களில் கருணாநிதி பிரச்சாரம் மேற்கொள்ள தீர்மானித்துள்ளதாக கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து மாநிலம் முழுவதும் உள்ளாட்சித் தேர்தல் பிரச்சாரத்திலும் அவர் இறங்கவுள்ளார்.

மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை:

இந் நிலையில்
கடந்த 2 தினங்களாக கருணாநிதி மாவட்டச் செயலாளர்களுடன் உள்ளாட்சித் தேர்தல் வேட்பாளர்கள் குறித்து ஆலோசனை நடத்தி வருகிறார். இந்தத் தேர்தலில் பெண்களுக்கும் இளைஞர்களுக்கும் அதிக முக்கியத்துவம் கொடுத்து வேட்பாளர்களை தேர்வு செய்ய கருணாநிதி உத்தரவிட்டுள்ளதாகத் தெரிகிறது.

அதே சமயத்தில் உள்ளாட்சி தேர்தலில் கட்சி பலத்தை விட வேட்பாளர்களின் தனிப்பட்ட செல்வாக்கே வெற்றியை நிர்ணயிக்கும் என்பதால் அதன் அடிப்படையில் ஆட்களை தேர்வு செய்யுமாறும் அவர் உத்தரவிட்டுள்ளார்.

அழகிரியுடன் ஆலோசனை:

அதே போல தென் மாவட்ட மேயர்கள், உள்ளாட்சி பதவிகளுக்கான வேட்பாளர்கள் குறித்து தென் மாவட்ட திமுக அமைப்பு செயலாளர் மு.க.அழகிரி, கருணாநிதியுடன் ஆலோசனை நடத்தினார்.

இந்த சந்திப்புகளைத் தொடர்ந்து 10 மாநகராட்சிக்கான தி.மு.க. மேயர் வேட்பாளர்களும் தேர்வு செய்யப்பட்டுவிட்டதாகத் தெரிகிறது. சென்னை மாநகராட்சி மேயர் வேட்பாளராக மா.சுப்பிரமணியமே மீண்டும் நிறுத்தப்படுவார் என்றும் கூறப்படுகிறது.

திமுகவின் மேயர் வேட்பாளர்கள் பட்டியல் இன்று அல்லது நாளை (வியாழக்கிழமை) வெளியாகும் என்று தெரிகிறது. மற்ற உள்ளாட்சி அமைப்புகளுக்கான வேட்பாளர் பட்டியல் மட்டும் தேர்தல் தேதி அறிவித்தவுடன் வெளியாகும்.

இடைத்தேர்தல்-திமுகவுக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆதரவு:

இந் நிலையில்
திருச்சி மேற்கு தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. வேட்பாளரை ஆதரிப்பது என்றும், உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிடுவது என்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் முடிவு செய்துள்ளது.

இந்தக் கட்சியின் உயர்நிலை அரசியல் ஆலோசனை கூட்டம் சென்னையில் கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் மாநில பொதுச்செயலாளர் கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர், மாநில பொருளாளர் எம்.எஸ்.ஏ.ஷாஜஹான், மாநில துணை தலைவர் வடக்கு கோட்டையார், மாநில செயலாளர்கள் காயல் மகபூப், கமுதி பஷீர், அப்துல் பாசித், சிறப்பு அழைப்பாளர்களாக அப்துல் ரஹ்மான் எம்.பி., சென்னை மாவட்ட தலைவர் ஜெய்னுல் ஆபிதீன், கே.எம்.நிஜாமூதின் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

கூட்டத்துக்குப் பின் நிருபர்களிடம் பேசிய அக் கட்சியின் தலைவர் காதர் மொகிதீன், உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. தனித்து போட்டியிடும் என்றும், நாடாளுமன்ற, சட்டசபைத் தேர்தலில் கூட்டணி தொடரும் என்றும் அக் கட்சியின் தலைவர் கருணாநிதி அறிவித்துள்ளதை வரவேற்கிறோம்.

நாடாளுமன்ற, சட்டபைத் தேர்தலில் தி.மு.க.வுடன் கூட்டணி என்றும்போல தொடர்ந்து நீடிக்கும். திருச்சி மேற்கு தொகுதி இடைத் தேர்தலில் தி.மு.க. வேட்பாளரின் வெற்றிக்காக பாடுபடுவோம்.

உள்ளாட்சித் தேர்தலில் தனித்து போட்டியிடுவோம். எங்களுடன் இணைந்து செயல்படுவதற்கு வரும் அரசியல் கட்சிகளுடன் தொகுதி உடன்பாடு செய்து கொள்ளும் அதிகாரம் மாவட்ட முஸ்லீம் லீக் தலைவர்களுக்கு வழங்கப்படுகிறது.

தமிழ்நாட்டில் முஸ்லீம்கள் அதிகம் உள்ள வார்டுகள் பெண்கள் வார்டுகளாக மாற்றப்பட்டுள்ளது கண்டிக்கதக்கதாகும். தேர்தல் ஆணையம் இதை மறு பரிசீலனை செய்து இவைகளை பொதுத் தொகுதிகளாக அறிவிக்க வேண்டும்.

தமிழக அரசு 7ம் வகுப்பு மற்றும் 8ம் வகுப்பு உருது பாட புத்தகத்தில் ஹஜ்ரத் யூசுப், ஹஜ்ரத் உமர், ஹஜ்ரத் அலி, இமாம் அபூ ஹனீபா ஆகியோர் உருவசித்திரங்கள் வரையப்பட்டுள்ளது, முஸ்லிம்களை வேதனையடைய செய்துள்ளது. இவைகளை உடனே திரும்பப் பெற வேண்டும் என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக