புதன், 21 செப்டம்பர், 2011

500 மேற்பட்ட முச்சக்கர வண்டிகள் கொழும்பு மாநகர சபைத் தேர்தல் களம்

கொழும்பு மாநகர சபைத் தேர்தல் களம் கொஞ்சம் கொஞ்சமாக சூடுபிடித்துக்கொண்டிருக்கிறது. புதிய பல உத்திகளைக் கையாண்டு ஒவ்வொரு கட்சி வேட்பாளர்களும் பிரசாரம் செய்துகொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் தங்களுக்குரிய மக்கள் ஆதரவை வெளியில் காட்டுவதற்காகவும் சிலர் முயற்சிக்கிறார்கள். இவர்களின் நடவடிக்கை சில சந்தர்ப்பங்களில் வெறுப்பினை ஏற்படுத்துகிறது.

மக்களின் நலனே முதல் நோக்கம். தம்பட்டம் அடித்துக்கொண்டு பிரசாரம் செய்யும் வேட்பாளர்களில் ஒருவரின் தேர்தல் பிரசார ஆதரவாளர்களை படங்களில் காண்கிறீர்கள். கிராண்;ட்பாஸில் தேர்தல் பிரசாரம் செய்யப்பட்ட விதம் இது.

வேட்பாளர் செல்லும் வாகனத்துக்குப் பின்னால் மேலும் சில வாகனங்கள் செல்கின்றன. அதனைத் தொடர்ந்து பேன்ட் வாத்தியங்களுடன் பாடல்கள் பாடிய வண்ணம் ஒரு கூட்டத்தினர் செல்கிறார்கள். பலர் அதிக போதையில் வாகன சத்தத்துக்குப் போட்டியாக சத்தமிடுகிறார்கள். அதனைத் தொடர்ந்து சுமார் 500 இற்கும் மேற்பட்ட முச்சக்கர வண்டிகள் சென்றுகொண்டிருக்கின்றன.
பாதசாரியொருவருக்கு பாதையில் நடந்து செல்ல முடியாது. ஏனென்றால் வழியெங்கும் பட்டாசுகள் கொளுத்தப்படுகின்றன. அவசரத் தேவைக்காக செல்லும் வாகனங்கள் கூட இவர்களுக்கு வழிவிட்ட பின்னர் தான் செல்ல முடியும். இருவழிப் பாதை இவர்களுக்காக தனிவழிப்பாதையாக்கப்படுகிறது.
பொலிஸார் கண்டுகொள்ளவில்லை. பொதுமக்களும் தமது கோபத்தை திட்டித்தீர்த்தவண்ணம் சென்றுகொண்டிருக்கிறார்கள். தேர்தல் பிரசாரத்துக்காக கூட்டத்தோடு கூட்டமாக சென்றுகொண்டிருந்த முச்சக்கரவண்டி சாரதியிடம் இதுபற்றிக் கேட்டோம்.
“எனக்கு 2000 ரூபா காசும் சாப்பாடும் ஒரு போத்தலும் தாறேன்னு சொன்னாங்க மாஸ்டர். ஒருநாள் முழுக்க ஹயர் ஓடினாலே ஆயிரம் ரூபா தான் கிடைக்கும். இங்க எல்லாமே கிடைக்குது. நல்லா ஜொலியாத்தான் இருக்குது” என வண்டியை நகர்த்திக்கொண்டே சொல்லிச் சென்றார். இப்படி ஓர் அரசியல் தேவைதானா எனக் கேட்டார் நமக்கருகிலிருந்து பாதசாரியொருவர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக