ஞாயிறு, 25 செப்டம்பர், 2011

ஷவேந்திர சில்வாவுக்கு எதிராக அமெரிக்க நீதிமன்றம் அழைப்பாணை விடுத்துள்ளது!

ஐநாவுக்கான இலங்கையின் நிரந்தர துணை வதிவிடப் பிரதிநிதி மேஜர் ஜெனரல் ஷவேந்திர சில்வாவுக்கு எதிராக அமெரிக்க நீதிமன்றம் அழைப்பாணை விடுத்துள்ளது.
இலங்கையின் இறுதிக்கட்ட யுத்தத்தின்போது, மேஜர் ஜெனரல் ஷவேந்திர சில்வா, மனித குலத்துக்கு எதிரான குற்றங்களைப் புரிந்துள்ளதாக தெற்கு நியுயோர்க்கிலுள்ள மன்ஹட்டன் மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள சிவில் வழக்கு தொடர்பிலேயே இந்த அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.

இறுதிக்கட்டப் போரின் போது படையினரிடம் சரணடைந்த பின்னர் சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டதாகக் கூறப்படும் விடுதலைப் புலிகளின் தளபதிகளின் ஒருவரான கேர்ணல் ரமேஷின் மனைவி இந்த வழக்கைத் தொடுத்துள்ளவர்களில் ஒருவர்.2009 February 3ம் திகதி புதுக்குடியிருப்பு மருத்துவமனையின் மீது படையினர் மேற்கொண்ட ஷெல் தாக்குதல்களில், அங்கு சிகி்ச்சை பெற்றுவந்த தனது தந்தை கொல்லப்பட்டதாக குற்றஞ்சாட்டும் ஒருவர் இந்த வழக்கை தொடுத்துள்ள இரண்டாவது நபர் ஆவார்.

அமெரிக்காவில் நடைமுறையிலுள்ள Alien Tort Claims Act அதாவது வெளிநாட்டவர்களுக்கான தீங்கியல் இழப்பீட்டுச் சட்டத்தின் படி இழப்பீடு கோரி இந்த சிவில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சட்டத்தரணி விளக்கம்
இந்த வழக்கை விசாரிக்க அமெரிக்க நீதிமன்றத்துக்கு எப்படி அதிகாரம் வருகின்றது என்பதை வழக்கைத் தாக்கல் செய்துள்ள சட்டத்தரணி அலி பெய்தூன் தமிழோசையிடம் விளக்கினார்.

"அமெரிக்க பிரஜை அல்லாத ஒருவர், அமெரிக்காவுக்கு வெளியில் நடந்த தீங்கியல் சம்பவத்துக்காக வழக்குத் தாக்கல் செய்ய இந்த சட்டத்தின்படி இடமிருக்கிறது.இந்தசட்டத்தின்படி, வழக்கொன்றின் எதிராளி, அமெரிக்காவில் இருப்பாரானால் அவருக்கு எதிரான வழக்குக்கு அமெரிக்க நீதிமன்றத்துக்கு நியாயாயாதிக்கம் - அதாவது வழக்கை விசாரிப்பதற்கான அதிகாரம் இருக்கிறது." என்று அவர் கூறினார்.

இறுதிக்கட்டப் போர்க்காலத்தில், அங்கு பொதுமக்களுக்கு குற்றச்செயல்களில் ஈடுபட்டதாகக் கூறப்படும் இராணுவத்தினரை மேஜர் ஜெனரல் ஷவேந்திர சில்வா வழிநடத்தியமைக்கான ஆதாரங்கள் இருப்பதாக கூறிய சட்டத்தரணி அவற்றை நீதிமன்றத்தில் சமர்பிக்க இருப்பதாகவும் சட்டத்தரணி அலி பெய்தூன் கூறினார்.

தமது சிவில் வழக்கு மூலம் இழப்பீட்டை கோருவதற்கு மட்டுமே வசதி இருக்கின்றது என்ற நிலையில், மனித குலத்துக்கு எதிரான குற்றச்செயல்கள் தொடர்பான நடவடிக்கையை அமெரிக்க அரசு மட்டுமே எடுக்கமுடியும் என்றும், அதற்காக அரச திணைக்களங்களுக்கு கடிதம் அனுப்பியுள்ளதாகவும் சட்டத்தரணி அலி பெய்தூன் தமிழோசையிடம் தெரிவித்தார்.

வழக்கில் சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் பற்றிய தனது பதிலை ஷவேந்திர சில்வா நீதிமன்றத்துக்கு அறிவிக்க வேண்டுமென்று அழைப்பாணையில் கோரப்பட்டுள்ளது.
(பீபீசி)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக