வியாழன், 29 செப்டம்பர், 2011

தோழர் உமாகாந்தனின் கனவுகள்

umakanthanதி. ஸ்ரீதரன் - பத்மநாபா ஈ.பி.ஆர்.எல்.எப்
ஈழத் தமிழர்களின் இன்றைய வாழ்நிலை பின்புலத்தில் தோழர் உமாகாந்தன் மறைந்து  ஆண்டுகள் 7  உருண்டோடிவிட்டன. தமிழ் மக்களின் சுதந்திரத்திற்காகவும் அனைத்து விதமான ஒடுக்குமுறைகளுக்கு எதிராகவும் தோழர் உமாகாந்தன் புலம்பெயர் தளத்தில் காத்திரமான பங்கை வழங்கியிருந்தார். அவர் உலகின் ஒடுக்கப்பட்ட தேசங்கள், மக்கள் தொடர்பாக அக்கறை கொண்டிருந்தார். கவிதை, இலக்கியம் பத்திரிகை என அவரின் ஈடுபாடு விசாலமானது. சமூக அநீதிகளுக்கு எதிராக குரல் கொடுப்பதில் புலம் பெயர் தளத்தில் விழிப்புணர்ச்சியை ஏற்படுத்துவதில் காத்திரமான பங்களிப்பை வழங்கியவர், பிரான்சில் அவரது அரசியல் சமூக செயற்பாடுகள் தனித்தன்மை வாய்ந்தனவாக அமைந்திருந்தன. எமது நாட்டில் நிலவிய தேசிய ஒடுக்குமுறை, பிரான்சின் புரட்சிகர எழுச்சிகள் பற்றிய அறிவு, லத்தீன் அமெரிக்காவில் நிகழ்ந்து கொண்டிருந்த ஜனநாயக புரட்சி இயக்கங்கள் எல்லாமே அவரை ஈர்த்திருந்தன. சர்வதேச விடுதலை இயக்கங்கள் பற்றிய கட்டுரைகளை அவ்வப்போது எழுதி வந்தார். தமிழ் முரசு என்றவொரு சஞ்சிகையையும் அவர் நடத்தினார். அவர் தனது அரசியல் பயணத்தில் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் (ஈ.பி.ஆர்.எல்.எப்) பாரம்பரியமொன்றை குறிப்பாக பிரான்சிலும் பொதுவாக புலம்பெயர் தளத்திலும் ஏற்படுத்தியிருந்தார்.

கால்நூற்றாண்டுகளுக்கு மேலாக மானிட விடுதலையை நேசித்து தணியாத தாகத்துடன் அவர் உலா வந்தார். சகோதரப் படுகொலைகள் எமது சமூகத்தின் வேதனைகள் அவரை மிகவும் பாதித்திருந்தன. அவற்றின் பாதிப்பின் பிரதிபலிப்பாகவே அவரது உருவமும், செயற்பாடுகளும் அமைந்திருந்தன. மனைவி, பிள்ளை இருந்தும் சொந்த வாழ்க்கை எல்லைக் கோட்டினுள் அவர் நின்றுவிடமுடியவில்லை.. அவர் இடையறாது போராடும் மனிதனாகவே வாழ்ந்து தனது 48வது வயதிலேயே மரணமானார்.

இத்தகைய மனிதர்கள் என்றென்றும் நினைவுகூரப்பட வேண்டும். மனித நெஞ்சங்களில் ஈரம் கொஞ்சமேனும் மிஞ்சியிருப்பது இத்தகைய மனிதர்கள் வாழ்ந்ததால்தான்.

அவர் தனது வாழ்நாளில் தமிழ் மக்கள் மாத்திரமல்ல சகோதர சமூகத்தினர் பேரினவாத ஒடுக்குமுறைகளுக்கும் சகோதர படுகொலைகளுக்கும் ஆளானதை அறிந்து வேதனையுற்றிருந்தவர். தான் வாழ்ந்த பிரான்ஸ் சூழலில் சபாலிங்கம் போன்றவர்கள் படுகொலை செய்யப்பட்டதை அனுபவித்தவர்.

ஜனநாயக விரோத படுகொலைகளுக்கு முற்றுப்புள்ளி வராதா என்று ஏங்கியவர்.

ஆனால் இன்று ஏதோவொரு விதத்தில் அற்ப சொற்ப ஜனநாயக இடைவெளி கிட்டியிருந்தாலும் இன்னொரு விதமாக அந்த இடைவெளி நெருக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.

வரலாற்றில் எது எது நிகழும் என தோழர் உமாகாந்தன் போன்றவர்கள் கண்ட கனவுகள் பொய்த்து விடவில்லை.

ஆனால் அவரின் இலட்சியங்களை வென்றெடுப்பதற்கு இன்னும் நாம் நெடுந்தூரம் பயணமாக வேண்டும்.


தி. ஸ்ரீதரன்
பத்மநாபா ஈ.பி.ஆர்.எல்.எப்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக