வியாழன், 29 செப்டம்பர், 2011

யாழ். பழைய பூங்கா இடித்துடைப்பு?

யாழ். நகரில் வரலாற்று புகழ்மிக்க பழைய பூங்கா கட்டடம் வடமாகாண ஆளுநரின் பணிப்புரையின் பேரில் இடித்துடைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆங்கிலேயரின் ஆட்சிக் காலத்தில் கச்சேரியாகவும் அரச அதிபரின் வாசஸ்தலமாகவும் பாவிக்கப்பட்ட குறித்த கட்டடம் 1829ஆம் ஆண்டு யாழ். மாவட்ட அரச அதிபர் காரியாலயத்திற்கு சொந்தமானதென முன்னாள் அரச அதிபர் லைக்கினால் எழுதிக் கொடுக்கப்பட்டிருந்தது. தற்போதைய யாழ். அரச அதிபர் காரியாலயத்திற்கு நேரெதிரே அமைந்துள்ள குறித்த பழைய பூங்கா கட்டடம் தொல்பொருள் திணைக்களத்தினால் பராமரிக்கப்பட்டும் வந்துள்ளது. இந்நிலையிலேயே வடமாகாண ஆளுநர் சந்திரசிறியின் பணிப்பு என்று கூறி, அவரது பிரத்தியேக செயலர் தலைமையில் குறித்த கட்டடத்தின் பகுதியும் சுற்று மதிலும் இன்று இடிக்கப்பட்டுள்ளது. இவ்விடயம் தொடர்பாக யாழ். மாவட்ட அரச அதிபர் திருமதி இமெல்டா சுகுமாரிடம் கேட்டபோது: 'யாழ். மாவட்டத்தில் என்ன நடைபெறுகிறதென்றே தெரியவில்லை. எங்களையும் மீறி என்னென்னமோ நடைபெற்று வருகிறது. நேற்று பிற்பகல் எனக்கு ஒரு கடிதம் வந்திருந்தது. பழைய பூங்கா கட்டடத்தின் சுவர்களின் பரவிக் கிடக்கின்ற மர வேர்களை அப்புறப்படுத்தவுள்ளோம் என தொல்பொருள் திணைக்களத்திற்கு ஆளுநர் எழுதிய கடிதத்தின் பிரதியே அது. இக்கடிதம் தொடர்பான விபரங்களை ஆராய்வதற்கு முயற்சித்த போதும் அது பயனளிக்கவில்லை. அதற்கிடையில் இன்று மாநகர சபையினரால் அந்த பழைய கட்டடத்தின் பல பகுதிகள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டுள்ளன. கடந்த 2ஆம் திகதி மரபுரிமைகள் அமைச்சினால் இந்த பழைய பூங்கா கட்டடம் 'தொல்பொருள் சின்னம்' என பிரகடணப்படுத்தப்பட்டு 1722 என்னும் இலக்கத்தினையுடைய வர்த்தமானி அறிவித்தலொன்றும் வெளிவந்திருந்தது. இப்படி இருக்கும்போதுதான் குறித்த கட்டடம் இடிக்கப்படுகிறது. இவ்விடயம் தொடர்பாக மேலிடத்திற்கு நான் அறிவித்திருக்கிறேன். இதனைத் தவிர என்னால் எதுவும் செய்ய முடியாது...' என்று தமிழ்மிரருக்கு குறிப்பிட்டார். குறித்த சம்பவம் தொடர்பாக வடமாகாண ஆளுநருடன் தொடர்பு கொண்டு கேட்டபோது: 'நான் அக்கட்டடத்தினை உடைப்பதற்கு உத்தரவிடவில்லை...' என்று தெரிவித்து, அவசர கூட்டமொன்றில் இருப்பதாக கூறி தொடர்பை துண்டித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக