ஞாயிறு, 4 செப்டம்பர், 2011

1000 விநாயகர் சிலைகள் கரைப்பு: 5 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு!

சென்னையில் இன்று 1000 விநாயகர் சிலைகள் கரைப்பு: 5 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு!


விநாயகர் சதுர்த்தி விழா கடந்த 1-ந்தேதி கோலாகலமாக கொண்டாடப்பட்டது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மொத்தம் 1300 சிலைகள் வைக்கப்பட்டன. இந்த சிலைகளுக்கு தினமும் பூஜைகள் நடத்தப்பட்டு வருகிறது.

சென்னையில் விநாயகர் சிலை ஊர்வலத்துக்கு 4 நாட்கள் போலீசார் அனுமதி வழங்கி இருந்தனர். நேற்று மாலையில் முதல்நாள் ஊர்வலம் நடந்தது. 100-க்கும் மேற்பட்ட சிலைகள் கடலில் கரைக்கப்பட்டன. இன்று இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி ஆகியவை சார்பில் விநாயகர் ஊர்வலம் நடத்தப்படுகிறது.

திருவல்லிக்கேணி திருவட்டீஸ்வரன் பேட்டையில் இருந்து புறப்படும் ஊர்வலத்துக்கு ராமகோபாலன் தலைமை தாங்குகிறார். ஆண்டு தோறும் திருவல்லிக்கேணி மசூதி வழியாக ஊர்வலமாக செல்லும். ராமகோபாலனை போலீசார் கைது செய்வது வழக்கம். இந்த ஆண்டும் இதுபோன்று கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

சென்னையில் நடைபெறும் விநாயகர் ஊர்வலங்களில் இன்று நடைபெறும் ஊர்வலத்தில்தான் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கூடுவார்கள். இதனால் போலீஸ் பாதுகாப்பும் அதிகரிக்கப்பட்டுள்ளது. நகரில் பல்வேறு பகுதிகளில் இருந்தும் முக்கிய சாலைகள் வழியாக கடற்கரையை நோக்கி விநாயகர் சிலைகள் ஊர்வலமாக மாட்டு வண்டிகள் மற்றும் லாரிகளில் எடுத்து வரப்படும்.

இதற்காக முக்கிய சந்திப்புகள் மற்றும் மசூதிகள் முன்பு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். சென்னை முழுவதும் 5 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

போலீஸ் கமிஷனர் திரிபாதி உத்தரவின் பேரில் கூடுதல் கமிஷனர்கள் தாமரைக்கண்ணன் மேற்பார்வையில் பாதுகாப்பு பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.

சென்னை மாநகர் முழுவதும் இணை கமிஷனர்கள் சண்முகராஜேஸ்வரன், செந்தாமரைகண்ணன், சேசஷாயி, சங்கர் ஆகியோரது தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மெரீனா கடற்கரையில் கூடுதல் போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர். சாமியானா பந்தல் போடப்பட்டு தற்காலிக கட்டுப்பாட்டு அறையும் அங்கு அமைக்கப்பட்டுள்ளது.

விநாயகர் சிலைகளை கரைப்பதற்காக ராட்சத கிரேன்களும் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. நீச்சல் பயிற்சி பெற்ற 100 மீனவர்களும் தயார் நிலையில் உள்ளனர். நாளையும், வருகிற 11-ந்தேதியும் விநாயகர் ஊர்வலங்கள் நடத்தப்பட உள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக