திங்கள், 29 ஆகஸ்ட், 2011

புலிகளுக்கு உதவிய புலன்பெயர்கள் தமிழ்மக்களுக்கும் உதவ வேண்டியது அவசியம்

புலிகளின் போருக்கு உதவிய புலம்பெயர் தமிழர்கள், போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதும் அவசியம்!
- கனடாவில் எழுத்தாளர் ராஜேஸ் பாலா வேண்டுகோள்
புலம்பெயர் தமிழர்கள் மனித நேயத்துடன் இலங்கையில் வாழுகின்ற யுத்தத்தால் பாதிக்கப்பட்ட சகோதர மக்களுக்கு உதவுவது அவசியம். இந்த புலம்பெயர் தமிழர்கள்தான், புலிகள் போரில் ஈடுபட்ட காலத்தில் டொலர்களாகவும் பவுண்களாகவும் அள்ளி அள்ளி கொடுத்தவர்கள். அவர்கள் கொடுத்த பணத்தாலேயே, அந்த மக்கள் இன்று சொல்ல முடியாத துன்பங்களுடன் வாழும் நிலை ஏற்பட்டது. இன்று புலிகள் அழிந்துவிட்டார்கள். ஆனால் அவர்களால் அழிவுக்குள்ளான மக்கள் அங்கு கண்ணீருடன் வாழ்கிறார்கள். அந்த மக்களை கண்ணீரில் மூழ்கடித்த புலிகளுக்கு உதவிய புலம்பெயர் தமிழர்கள,; வெளிநாடுகளில் சகல சௌபாக்கியங்களுடனும் வாழ்கிறார்கள். இனியாவது தமது தவறை உணர்ந்து, அந்த மக்களுக்கு தம்மாலான உதவிகளைச் செய்வது புலம்பெயர் தமிழர்களின் கடமையாகும்.”

இவ்வாறு கூறினார் பிரித்தானியாவில் வாழ்கின்ற பிரபல தமிழ் எழுத்தாளரும், சமூக செயற்பாட்டாளருமான ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம். ஆகஸ்ட் 27, 2011 அன்று கனடாவின் ஸ்காபரோ நகரில் நடைறெ;ற, ‘வாழும் மனிதம் - 2’ நிகழ்வில் பிரதம அதிதியாக வந்து கலந்துகொண்டு, “போருக்குப் பிந்திய சமூக மாற்றமும் முற்போக்குவாதிகளின் கடமையும்” என்ற தலைப்பில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். நிகழ்வுக்கு தேவன் தலைமை வகித்தார். பெருந்தொகையான மக்கள் கலந்து கொண்ட இந்நிகழ்வில் ராஜேஸ்வரி தொடர்ந்து உரையாற்றுகையில்,

“இலங்கை அரசாங்கம் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களை சொந்த இடங்களில் மீள் குடியேற்றம் செய்து, அவர்களுக்காக பல புனர்வாழ்வு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ள போதிலும், அந்த மக்களுக்கு இன்னும் பல அத்தியாவசிய தேவைகள் நிறைவேற்றப்படாமல் உள்ளன. குறிப்பாக இந்த கொடுமையான போரினால் விதவைகளாக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கான பெண்கள் வடக்கு கிழக்கில் இருக்கிறார்கள். தாய் தந்தையை இழந்த சிறுவர்கள் ஆயிரக்கணக்கில் இருக்கிறார்கள். பராமரிப்பின்றி ஏராளமான முதியவர்கள் இருக்கிறார்கள். இவர்கள் எல்லோரும் போரின் விளைவால் உருவானவர்கள். இவர்களுக்கு உதவ வேண்டியது புலம்பெயர் தமிழ் மக்களின் மனிதநேயக் கடமையாகும்.

ஆனால் புலம்பெயர் தமிழர்களோ, இந்த உதவிகளைச் செய்வதை விடுத்துவிட்டு, அந்த மக்களை மேலும் மேலும் அழிவுக்குள்ளாகும் செயல்களில் ஈடுபட்டு வருகிறார்கள். மீண்டும் அங்கு யுத்த நிலைமைகளை ஏற்படுத்துவதற்காக, இனவெறிப் பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருகிறார்கள். பெரும்பாலான புலம்பெயர் ஊடகங்கள் அங்குள்ள உண்மை நிலைமைகளை எழுதாது, பொய் புரட்டுகளையே எழுதுகின்றன. உதாரணமாக, அங்கு உள்ள ஒவ்வொரு ஊரிலும் உள்ள பெண்களை, இராணுவம் தினசரி பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்துவதாக எழுதி, அந்த மக்களை அவமானத்துக்கு உள்ளாக்குகிறார்கள். இப்படியான செய்திகளைப் பார்த்துவிட்டு, நான் அந்த மக்களுடன் தொடர்பு கொண்டு கேட்டால், அது முழுக்க முழுக்கப் பொய் என்று அவர்கள் கூறி வேதனைப்படுகிறார்கள். தயவுசெய்து அந்த மக்களைப் பற்றி இழிவாக எழுதி அவமானப்படுத்தாதீர்கள். உதவி செய்யாவிட்டாலும், உபத்திரவமாவது செய்யாதீர்கள்”

“இன்று அந்த மக்களுக்குத் தேவைப்படுவது எல்லாம் உங்களது மனிதநேய உதவிதான். நீங்கள் இங்கு ஆடம்பரமாக திருமணம் மற்றும் பூப்புனித நீராட்டு விழாக்களைச் செய்கிறீர்கள். மணப்பெண்ணுக்கு அரை மணி மணிநேரத்தில் மிகவும் விலையுயர்ந்த அரை டசின் சேலைகளை மாற்றி மாற்றி அலங்கரிக்கிறீர்கள். ஆனால் அங்குள்ள எத்தனையோ அனாதைப் பெண்கள், மாற்றிக் கட்டுவதற்கு ஒரு சாதாரண நூல் சேலை தன்னும் இல்லாமல் பரிதவிக்கிறார்கள். புலிகளின் போருக்கு அள்ளி அள்ளிக் கொடுத்த நீங்கள் அவர்களுக்கு ஒரு சிறிய அளவிலாவது உதவலாம் அல்லவா? இங்குள்ள பாடசாலை பழைய மாணவர் சங்கங்கள் மற்றும் ஊர் சங்கங்கள் இதில் கவனம் செலுத்தினால் என்ன?”

இவ்வாறு அவர் தனது நீண்ட உரையில் சில முக்கியமான விடயங்களைக் குறிப்பிட்டுப் பேசினார்.

முன்னதாக ஆகஸ்ட் 26ம் திகதி கனடிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் (CTBC) அவரை சுமார் இரண்டு மணித்தியாலங்கள் வரை பேட்டி கண்டது. அந்தப் பேட்டியின் போது, ஏராளமான நேயர்கள் கலந்து கொண்டு பல கேள்விகளை எழுப்பி தெளிவு கண்டதுடன், தமது கருத்துகளையும் பரிமாறிக் கொண்டனர்.

ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் அவர்களுடன் கலந்துரையாடுவதற்காக, மேலும் பல அமைப்புகள் ஒழுங்குகளைச் செய்துள்ளன

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக