திங்கள், 29 ஆகஸ்ட், 2011

நீதிமன்றத்தை மிரட்ட மன்னர் முயற்சி பத்மநாப சுவாமி கோயில் தேவபிரசன்னத்தின் மூலம்


திருவனந்தபுரம் : பத்மநாப சுவாமி கோயில் வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வரும் நிலையில், உத்திராடம் திருநாள் மார்த்தாண்ட வர்மா ஜோதிடத்தின் மூலம் நீதிமன்றத்தை மிரட்ட முயற்சிக்கிறார் என்று கேரள எதிர்க்கட்சி தலைவர் அச்சுதானந்தன் கூறினார். கேரள தலைநகர் திருவனந்தபுரத்தில், சமூக அறிவியல் வானவில் என்ற அமைப்பின் சார்பில் பத்மநாப சுவாமி கோயில் பொக்கிஷமும், ஜனநாயக கேரளாவும் என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடந்தது. இதில் கேரள எதிர்கட்சி தலைவர் அச்சுதானந்தன் கலந்து கொண்டார். அவர் பேசியதாவது:

 பத்மநாப சுவாமி கோயிலில் இதற்கு முன் பல முறை ரகசிய அறைகளை திறந்து பொக்கிஷங்களை மதிப்பிட்டு புகைப்படம் எடுத்துள்ளனர். ரகசிய அறையில் உள்ள தங்கத்தை பயன்படுத்திதான் கோயில் மண்டபத்திற்கு தங்கமுலாம் பூசியுள்ளனர். அப்போதெல்லாம் தேவபிரசன்னம் எதுவும் நடத்தப்பட வில்லை. ரகசிய அறையில் நுழைந்த யாருடைய குடும்பமும் அழிந்ததாக தெரியவில்லை. ஆனால், இப்போது ரகசிய அறைகளை திறக்கக் கூடாது என்று தேவபிரசன்னத்தில் தெரிய வந்ததாக கூறுகிறார்கள்.

உச்சநீதிமன்றத்தில் வழக்கு உள்ள நிலையில், தேவபிரசன்னம் நடத்தி, ஜோதிடம் மூலம் நீதிமன்றத்தை மிரட்ட மன்னர் உத்திராடம் திருநாள் மார்த்தாண்ட வர்மாவும், அவரது குடும்பத்தினரும் முயற்சிக்கிறார்கள். இது நீதித்துறைக்கு விடப்பட்டுள்ள சவால். தேவபிரசன்னம் நடத்தித்தான் ரகசிய அறைகளை திறக்க வேண்டும் என்று கூறி மன்னர் குடும்பத்தினர் உச்சநீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடர்ந்துள்ளனர்.

ஆனால், இந்த வழக்கில் தீர்ப்பு வரும் முன்பே ஜோதிடர்களை வரவழைத்து தேவபிரசன்னம் நடத்தி உள்ளனர். இதன்மூலம் பொக்கிஷங்களை மதிப்பிடும் பணிக்கு தேவபிரசன்னம் மூலம் தடங்கல் ஏற்படுத்த முயற்சித்துள்ளனர். தற்போது இந்தியாவில் மக்களாட்சி நடைபெறுகிறது. மன்னர் ஆட்சியல்ல. எனவே, சாதாரண குடிமகனுக்கு இருக்கும் உரிமைகள்தான் மன்னர் குடும்பத்தினருக்கும் இருக்கிறது. இவ் வாறு அவர் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக