செவ்வாய், 30 ஆகஸ்ட், 2011

மர்ம மனிதனும் கூட்டணியினரும் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் குற்றச்சாட்டு

மர்ம மனிதன் விவகாரத்தை பெரிதுபடுத்தி மக்களைத் தூண்டிவிட்டு வேடிக்கை பார்த்தவர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரே-விநாயகமூர்த்தி முரளிதரன்(கருணா)!


மர்ம மனிதன் விவகாரத்தை பெரிதுபடுத்தி மக்களைத் தூண்டிவிட்டு வேடிக்கை பார்த்தவர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களேயென மீள்குடியேற்றப் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா) குற்றஞ்சாட்டியுள்ளார்.மட்டக்களப்பு மாவட்டத்தின் பொலிஸ் பிரிவுகளின் சிவில் விழிப்புக் குழுக்கள், அரசியல்வாதிகள் கலந்துகொண்டு களுவாஞ்சிக்குடியில் இன்று திங்கட்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,

மர்ம மனிதன் விவகாரம் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏற்பட்டமை அனைவரும் அறிந்ததே. ஆனால் இந்த மர்ம மனிதனை நேரடியாகக் கண்டவர்கள் எவரும் இல்லை. எல்லாம் வதந்தியாகும்.

இவற்றையெல்லாம் பெரிதுபடுத்தி மக்களைத் தூண்டிவிட்டு வேடிக்கை பார்த்தவர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்பதை அடித்துக் கூறுகின்றேன்.

தூண்டிவிட்டு வேடிக்கை பார்த்தவர்களால் இன்று கைதுசெய்யப்பட்டவர்களை வெளியில் எடுக்க முடிந்ததா? தூண்டிவிடப்பட்டமையினால் அப்பாவிகள் பொலிஸ் நிலையத்தை உடைத்து சட்டத்தைக் கையிலெடுத்துக் கொண்டதால் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இவர்களின் குடும்பங்களைக் கவனிக்க தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களால் முடியுமா?
ஜனாதிபதி அவசரகாலச் சட்டத்தை நீடிக்க இவ்வாறெல்லாம் செயற்படுத்தப்படுகின்றதென தமிழ் தேசியக் கூட்டமைப்பு பிரசாரம் செய்தது. இருப்பினும் ஜனாதிபதியால் அவசரகாலச் சட்டம் நீக்கப்பட்டுள்ளது.

தற்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரால் என்ன கூறமுடியுமென கேள்வியெழுப்பினார்.
இதேவேளை, இங்கு மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் திலக் விஜயகுணவர்த்தன உரையாற்றுகையில்,

சிவில் விழிப்புக் குழுக்கள் ஊடாக கிராம மட்டத்தில் பாதுகாப்பை உறுதிப்படுத்துவோம். சட்டத்தை நீங்கள் கையில் எடுக்கக்கூடாது. ஆனால் நாங்கள் உங்களை பாதுகாப்போம். மர்ம மனிதர்கள் யார் என்பதை நீங்கள் விரைவில் உணர்வீர்கள் என்றார். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக