ஞாயிறு, 28 ஆகஸ்ட், 2011

அதிமுக ஆட்சியில் யார் யாருக்கு வீட்டுமனை ஒதுக்கீடு? கலைஞர் பட்டியல்


அதிமுக ஆட்சியில் யார் யாருக்கு விருப்புரிமையின் அடிப்படையில் வீட்டுமனை ஒதுக்கீடு செய்யப்பட்டது என்று திமுக தலைவர் கலைஞர் பட்டியலிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
வீட்டு வசதித் துறை மானியத்தின் மீதான விவாதத்தில் பதிலளித்த அந்தத் துறையின் அமைச்சர் திமுக ஆட்சியில் சிலருக்கு முறைகேடாக வீட்டு வசதி வாரிய வீடுகள் ஒதுக்கப்பட்டதாகப் புகார் கூறியிருக்கிறார்.
 என் வீட்டில் வேலை பார்த்தவர்களுக்கு வீடுகள் ஒதுக்கப்பட்டது பற்றியும் புகார் சொல்லியிருக்கிறார். அவர்கள் சாதாரண நிலையில் பணியாற்றுபவர்கள். ஓட்டுநராக இருப்பவர்கள். அமைச்சரே சுட்டிக்காட்டியிருக்கும் திமுக தொழிற்சங்க மாநில பொதுச் செயலாளர் பூச்சி முருகன் ரூ. 6,000 சம்பளம் பெறுபவர். அப்படிப்பட்ட நிலையில் உள்ளவர்களுக்குத்தான் முதல்வர் தனது விருப்புரிமை அடிப்படையில் யாருக்கு வேண்டுமானாலும் ஒதுக்கீடு செய்யலாம் என்கிற விதிமுறைப்படி மனைகள் ஒதுக்கப்பட்டன.
 அதிமுக ஆட்சியில் தலைமைச் செயலாளராக இருந்த என்.நாராயணனுக்கு 1993ல் 4,115 சதுர அடி மனை ஒதுக்கப்பட்டது. இப்போது அமைச்சராக உள்ள செங்கோட்டையன் மகன் கே.எஸ்.கார்த்தீசன் பெயரில் பெசன்ட் நகர் பகுதியில் 1995 ம் ஆண்டு 4,535 சதுர அடி நிலம் ஒதுக்கப்பட்டது. இப்போது நாடாளுமன்ற உறுப்பினராக உள்ள தம்பிதுரை மனைவி பானுமதிக்கு அண்ணாநகரில் 7 கிரவுண்ட் நிலம் தரப்பட்டது.
 முன்னாள் அமைச்சர் நாகூர் மீரான் மனைவி நூர்ஜமீலா, எஸ்.எம்.வேலுச்சாமி மனைவி பானுமதி, காவல்துறை அதிகாரிகள் தேவாரம், ஆர்.நடராஜ், முதல்வர் துணைச் செயலாளராக இருந்த டி.நடராஜன் என்று நீண்ட பட்டியல் உள்ளது.

 இவற்றையெல்லாம் நான் தவறு என்று சொல்லவில்லை. முதல்வருக்குள்ள விருப்புரிமையின் அடிப்படையில் தரப்பட்டவை.
 ஆனால் இந்த விவகாரம் தொடர்பாக குற்றச்சாட்டு கூறப்பட்டதும் திமுக ஆட்சிக் காலத்திலேயே இனிமேல் இவ்வாறு விருப்புரிமை அடிப்படையில் மனை ஒதுக்கும் அதிகாரம் தேவையில்லை என்று ரத்து செய்தோம்.

ஆனால் அரசுக்கு அந்த விருப்புரிமை ஆணை அதிமுக ஆட்சியில்தான் தரப்பட்டது.இரு மனை ஒதுக்கீடு: அமைச்சர் பேரவையில் பேசும்போது ஒரு வீடு அல்லது மனை இருப்போருக்கு மீண்டும் ஒதுக்கீடு செய்யக்கூடாது என்பது விதி என்று சொல்லியிருக்கிறார். அதிமுக தொழிற்சங்க நிர்வாகி டானியல் எட்வின் பிரேம்குமாரின் மனைவி பியூலா என்பவருக்கு மறைமலைநகரில் எம்.ஐ.ஜி.எம் 26 என்ற மனை அதிமுக ஆட்சியில் ஒதுக்கப்பட்டுள்ளது. இவர் மத்திய அரசு அலுவலர். ஆனால் சமூக சேவகர் என்ற பிரிவில் வீடு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.<
;மற்றொரு அதிமுக தொழிற்சங்க நிர்வாகி எம்.மதுரை என்பவர் தஞ்சையில் ஒரு வீட்டு வசதி வாரிய வீட்டையும், கரூரில் சனப்பிரட்டி பகுதியில் ஒரு மனையையும், சென்னை சி.ஐ.டி.நகரில் ஒரு வாடகை வீட்டையும் பெற்றிருக்கிறார்.

இதையெல்லாம் மூடி மறைத்துவிட்டு, பேரவையில் திமுக ஆட்சியில் தவறு நடைபெற்றதைப் போல அமைச்சர் கூறியிருக்கிறார்.
காவல்துறையின் சார்பில் கட்டப்பட்டுள்ள பல்வேறு கட்டடங்களை முதல்வர் ஜெயலலிதா காணொலி காட்சி மூலமாகத் திறந்து வைத்திருக்கிறார். நல்லவேளை, இந்தக் கட்டடங்கள் எல்லாம் திமுக ஆட்சியில் கட்டப்பட்டவை என்பதற்காக அங்கெல்லாம் ஆரம்ப சுகாதார நிலையங்கள் நிறுவப்படும் என்று முதல்வர் சொல்வில்லை.
திட்டக்குழு விவாதத்தில் கலந்துகொண்டபோது மத்திய அரசு மாநில அரசு கேட்டதைவிட அதிகமாகக் கொடுத்ததாக கூறியது இதே முதல்வர்தான். இப்போது மத்திய அரசு கேட்டாலும் கொடுக்காது என்று சொல்பவரும் இதே முதல்வர்தான் என்று கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக