திங்கள், 15 ஆகஸ்ட், 2011

குகநாதன் தாக்குதல் சந்தேக நபர் கைது


உதயன் பத்திரிகையின் செய்தி ஆசிரியர் ஞா.குகநாதன் மீது இரு நபர்கள் தாக்குதல் நடத்தியதைக் கண்டித்தும் குற்றவாளிகளைப் பொலிஸார் இதுவரை கைது செய்யாததைக் கண்டித்தும் யாழ். நகரில் நாளை பெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. அதே வேளை ஞா.குகநாதன் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் தொடர்பிலான பிரதான சந்தேகநபர் ஒருவரை பொலிஸார் இன்று கொழும்பில் கைது செய்துள்ளனர்.
கொழும்பைத் தளமாகக் கொண்டியங்கும் சுதந்திர ஊடகவியலாளர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் யாழ். மத்திய பஸ் நிலையம் முன்பாக முற்பகல் 11 மணிக்கு இந்த கண்டன ஆர்ப்பாட்டம் இடம்பெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஊடக சுதந்திரம் மற்றும் மக்களின் கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரத்துக்கு அச்சுறுத்தலாக அமையும் இத்தகைய தாக்குதல்களைக் கண்டிக்க வடக்கில் உள்ள மனித உரிமை ஆர்வலர்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் அனைவரையும் திரண்டு வருமாறு சுதந்திர ஊடகவியலாளர் ஒன்றியத்தின் அமைப்பாளர் சுனில் ஜயசேகர அழைப்பு விடுத்துள்ளார்.
உதயன் பத்திரிகை செய்தி ஆசிரியர் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் தொடர்பிலான பிரதான சந்தேகநபர் ஒருவரை பொலிஸார் இன்று கொழும்பில் கைது செய்துள்ளனர்.
கடந்த ஜூலை மாதம் 29ம் திகதி வேலை முடிந்து வீடு திரும்பிக்கொண்டிருந்த வேளையில் இனந்தெரியாத நபர்களால் கடுமையாக குகநாதன் தாக்கப்படார்.
படுகாயமடைந்த குகநாதன் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
குகநாதன் தாக்கப்பட்டது தொடர்பில் பொலிஸ் மா அதிபர் என்.கே.இளங்கக்கோன் ஜனாதிபதிக்கு அறிக்கை ஒன்றினை சமர்ப்பித்து இருந்தார்.
அத்தோடு குகநாதன் தாக்கப்பட்டதற்கு எதிராக பல்வேறு மனித உரிமை அமைப்புகளும் ஊடக அமைப்புகளும் போராட்டங்களை முன்னெடுத்து வந்தன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக