திங்கள், 15 ஆகஸ்ட், 2011

3வது அணி அமைக்கும் பாமக, மதிமுக இணைந்து செயல்பட திமுக, காங். முடிவு

திருச்சி: சட்டசபையில் இணைந்து செயல்பட திமுகவும், காங்கிரஸும் தீர்மானித்துள்ளனவாம். அதேபோல வருகிற உள்ளாட்சித் தேர்தலில் 3வது அணி அமைத்து போட்டியிட பாமகவும், மதிமுகவும் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

இனி திமுகவுடனும் கூட்டணி கிடையாது, அதிமுகவுடனும் கூட்டணி கிடையாது என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவித்துள்ளார். இந்த முடிவு அடுத்த பொதுத் தேர்தல் வரும் வரைதான் நீடிக்கும் என்று பலரும் நம்புகின்றனர். இந்த நிலையில் வருகிற உள்ளாட்சித் தேர்தலின்போது புதிய கூட்டணியை அமைக்க ராமதாஸ் தீவிரமாக ஈடுபட்டுள்ளார் என்று கூறப்படுகிறது.

தனது கூட்டணியில் மதிமுகவை சேர்க்க அவர் திட்டமிட்டுள்ளார். மேலும் சில குட்டிக் கட்சிகளும் இதில் இணையலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழகத்தில், திமுக, அதிமுகவுக்கு மாற்று என்ற மிகப் பெரிய இடத்தை விஜயகாந்த்தின் தேமுதிக பெற்றது. ஆனால் யாரும் எதிர்பாராத வகையில் அதிமுகவுடன் கூட்டணி வைத்து அந்த இடத்தை காலி செய்து விட்டார் விஜயகாந்த். அந்த இடத்தைப் பிடிக்க தற்போது பாமக தீவிரமாக முயல்வதாக தெரிகிறது.

உள்ளாட்சித் தேர்தலில் தனது பலத்தை நிரூபித்தால் தானாகவே அத்தனை பேரும் மீண்டும் தங்களை நாடி வருவார்கள் என்பது பாமகவின் எண்ணம். மேலும் இதை வைத்து வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் மீண்டும் ஏதாவது ஒரு திராவிடக் கட்சியுடன் இணைந்து கணிசமான இடங்களைப் பெறலாம் என்றும் பாமக திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

பாமக தலைமையில் அமையவுள்ள இக்கூட்டணியில் மதிமுக தவிர காங்கிரஸும் இணையுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளதாம்.ஆனால் காங்கிரஸுடன் சேர்ந்து மேடையேற மதிமுக தயாராக இருக்காது என்பதால் காங்கிரஸ் கட்சி இந்தக் கூட்டணியில் இணையும் வாய்ப்பு இல்லை என்று கூறுகிறார்கள்.

வைகோவின் மதிமுகவும், ராமதாஸின் பாமகவும் இப்போது கிட்டத்தட்ட அடியோடு வீழ்ந்து கிடக்கும் இயக்கங்களாக மாறியுள்ளன. இருவருமே தங்களது செல்வாக்கை பரீட்சித்துப் பார்க்கும் நிலையில், கட்டாயத்தில் உள்ளனர். இருவரும் தங்களது செல்வாக்கு அப்படியேதான் உள்ளது என்பதை நிரூபித்தால் மட்டுமே அவர்களது அரசியல் எதிர்காலம் கொஞ்சமாவது மிஞ்சும் என்பதால் செல்வாக்கை நிரூபிப்பதில் இருவரும் இணைந்து செயல்பட முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.

1996 சட்டசபைத் தேர்தலிலும், லோக்சபா தேர்தலிலும் மதிமுக மிக மோசமான தோல்வியைச் சந்தித்தது. இருப்பினும் அதே ஆண்டில்நடந்த உள்ளாட்சித் தேர்தலில் ஓரளவு இடங்களைக் கைப்பற்றி புத்துயிர் பெற்றது. இதையடுத்து 1998ம் ஆண்டு நடந்த லோக்சபா தேர்தலின்போது அக்கட்சியை அழைத்து கூட்டணி வைத்துக் கொண்டார் ஜெயலலிதா என்பது நினைவிருக்கலாம்.

தற்போதும் அதேபோல தங்களது இழந்த செல்வாக்கை மீண்டும் பெற்று திராவிடக் கட்சிகளின் கடைக்கண் பார்வையைப் பெற மதிமுகவும், பாமகவும் முயல்வதாக தெரிகிறது.

அதேசமயம், இந்த இரு கட்சிகளுக்கும் வேறு ஒரு எண்ணமும் இருப்பதாக கூறப்படுகிறது. எதிர்காலத்தில் திமுக இடத்தைப் பிடிக்க மதிமுக திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. அதேபோல விஜயகாந்த்தின் இடத்தைப் பிடித்து வலுவான அரசியல் சக்தியாக விளங்க பாமக திட்டமிடுவதாக தெரிகிறது.

பாமகவைப் பொறுத்தவரை 1998 முதல் திமுக அல்லது அதிமுகவுடன் இணைந்தே ஒவ்வொரு தேர்தலையும் அது சந்தித்து வருகிறது. அக்கட்சி இடம் பெற்ற கூட்டணியே வென்றும் வ்நதுள்ளது. இது 2006 வரை தொடர் கதையாக நீடித்து வந்தது.

2009 நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி சேர்ந்தது பாமக. ஆனால் படு தோல்வியைச் சந்தித்தது. இதையடுத்து சமீபத்தில் நடந்த சட்டசபைத் தேர்தலில் திமுக பக்கம் வந்தது பாமக. இந்த முறை முதலுக்கே மோசமாக மகா தோல்வியைச் சந்தித்தது பாமக. திமுகவும் சேர்ந்து போண்டியானது.

இதனால்தான் இனிமேல் தனி அணி என்ற முடிவை டாக்டர் ராமதாஸ் எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

காங்கிரஸுடன் இணைந்து செயல்பட திமுக முடிவு

இதற்கிடையே, சட்டசபைத் தேர்தல் தோல்வி காரணமாக முட்டல், உரசலுடன் போய்க் கொண்டுள்ள திமுகவும், காங்கிரஸும் இப்போது தங்களது பூசல்களை புதைத்து விட்டு தீவிரமாக இணைந்து செயல்பட முடிவு செய்துள்ளனவாம். குறிப்பாக சட்டசபைக்குள் இணைந்து செயல்பட அவர்கள் முடிவு செய்துள்ளனராம்.

திமுகவினருக்கு சட்டசபையில் ஒரே இடத்தைத் தர அதிமுக அரசு மறுத்து வருவதாக, சபாநாயகர் மீது திமுக குறை கூறி வருகிறது. இதனால் சட்டசபைத் தொடரை புறக்கணிக்கும் முடிவையும் அது எடுத்தது. ஆனால் தற்போது அதை வாபஸ் பெற்று விட்டது.

மறுபக்கம் அதிமுக கூட்டணிக் கட்சிகள் பிரதமரையும், சோனியா காந்தியையும் குறி வைத்துப் பேசியதைக் கேட்டு காங்கிரஸ் உறுப்பினர்களும் பெரும் அதிர்ச்சிக்குள்ளானார்கள். முதல்வர் ஜெயலலிதாவும் மத்திய அரசை கடுமையாக சாடிப் பேசி வருவதால் அவருக்கு சரியான பதிலடி தரும் வகையிலான பலமோ அல்லது நல்ல பேச்சாளர்களோ காங்கிரஸ் தரப்பில் இல்லாத நிலை.

இதனால் பாதிக்கப்பட்டுள்ள திமுகவும், காங்கிரஸும் இணைந்து சட்டசபையில் ஒரே குரலாக செயல்பட முடிவு செய்துள்ளனராம். இணைந்து குரல் கொடுப்பதன் மூலம், செயல்படுவதன் மூலம் அதிமுக கூட்டணியின் எதிர்ப்புகளை ஓரளவுக்கு சமாளிக்கலாம் என்று அவர்கள் கருதுகிறன்றனராம்.

மேலும் இப்போதிருந்தே மீண்டும் இணக்கமாக செயல்பட்டால்தான் லோக்சபா தேர்தலின்போது மறுபடியும் இணைந்து போட்டியிடும்போது தொண்டர்கள் ஒருமித்து செயல்படுவார்கள் என்ற காரணமும் இதில் அடங்கியுள்ளதாம்.   [ கருத்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக