வெள்ளி, 26 ஆகஸ்ட், 2011

அனைத்து கிருமிகளையும் அழிக்கும் சக்தி கொத்தமல்லிக்கு

அனைத்து வகை கிருமிகளையும் அழிக்கும் சக்தி கொத்தமல்லிக்கு இருப்பதாக மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். இந்திய மக்கள் சமையலில் சேர்க்கும் தானியங்கள், தாவரங்கள், மசாலாக்களை வெளிநாட்டினர் ஆய்வு செய்வது அதிகரித்து வருகிறது. நாம் பொடியாக்கி உணவில் சேர்க்கும் மஞ்சளின் மருத்துவ குணங்களை அறிந்து ஆச்சரியப்பட்ட விஞ்ஞானிகள், தொடர்ந்து நடத்திய பல ஆராய்ச்சிகளின் விளைவாக ‘உலகின் சத்து மிகுந்த 10 எளிமையான உணவுகள்’ பட்டியலில் இட்லி, தயிர் சாதத்துக்கு இடமளித்து கவுரவித்தனர். 

ஒவ்வொரு உணவிலும் ஒவ்வொரு விதமான மசாலாவை இந்தியர்கள் பயன்படுத்துவது ஏன் என்ற  ரகசியத்தை ஆராய்ச்சிகள் மூலம் அவர்கள் வெளியே கொண்டு வருகிறார்கள். அஞ்சறை பெட்டிக்கு மாடர்ன் கிச்சனில் இடமில்லாமல் போனாலும் அதில் போட்டு வைத்திருக்கக்கூடிய இஞ்சி, சுக்கு, ஓமம், மஞ்சள், கிராம்பு, வெந்தயம், சோம்பு, கடுகு, கடுக்காய் போன்ற பொருட்கள் மறைந்துவிடவில்லை. ‘உணவே மருந்து, மருந்தே உணவு’ என்ற புராதன இந்திய தத்துவம் மேற்கத்திய கருத்தரங்குகளில் விவாதத்துக்கு வந்துள்ளது. 

ஆயுர்வேதம் முதலான இந்திய மருத்துவ முறைகள் தொடர்பான ஆய்வுகள் ஒரு புறமும் இந்திய உணவுகள் பற்றிய ஆராய்ச்சி இன்னொரு புறமும் தொடர்வதால் நமது தொன்மையான மருத்துவ குறிப்புகள் விரிவாக அலசப்படுகின்றன. மருந்துகளை எந்த நேரத்தில் உட்கொள்ள வேண்டும்; அப்போது உடலும் மனமும் என்ன நிலையில் இருக்க வேண்டும் என்பதைக்கூட சித்தர்களும்  முன்னோடிகளும் வகுத்து தந்திருக்கிறார்கள். 

நம்பர் 1 அறிவியல் சஞ்சிகையான நியு சைன்டிஸ்ட் இந்த விவரங்களை ஊர்ஜிதப்படுத்தும் வகையில் ‘ஹீல் தைசெல்ஃப்’ என்ற கவர் ஸ்டோரியை பிரசுரித்துள்ளது. ‘எந்த நோயானாலும் அதற்கு இலவச மருந்து ஒன்று இருக்கிறது; அதன் பெயர் உங்கள் மனம்’ என்கிறது கட்டுரையின்  தொடக்கம். இந்திய அணுகுமுறை என குறிப்பிடாத போதிலும் காலம் காலமாக நமது வைத்தியர்கள் கூறிவரும் வாழ்வுமுறை ஆலோசனைகளையே எதிரொலிக்கின்றன அதன் கருத்துக்கள். உலகம் மெல்ல மெல்ல இந்தியாவின் பாதைக்கு வந்துகொண்டிருக்கும்போது இங்கு பலரும் தமது வேர்களில் இருந்து விடுவித்துக் கொள்ள போராடுவதை பார்க்க பரிதாபம் மேலிடுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக