வெள்ளி, 26 ஆகஸ்ட், 2011

வடக்கு, கிழக்கு மக்களை பயங்கரவாதத்திலிருந்து பாதுகாத்து அரசாங்கம்

அவர்களுக்கு இயல்பு வாழ்க்கையைப் பெற்றுக்கொடுத்துள்ளது.
mahinda speechஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவசரகால சட்டத்தை முற்றாக நீக்குவதற்கான பிரேரணையைச் சபையில் முன்வைத்து உரை
அவசரகாலச் சட்டம் நேற்று முழுமையாக நீக்கப்பட்டது. உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் இதற்கான அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் இதற்கான அறிவிப்பை நேற்று பாராளுமன்றத்தில் விடுத்தார்.

நாட்டின் பாதுகாப்பு திருப்திகரமானதாக உள்ளதால் நாட்டை ஆட்சிசெய்வதற்கு அவசரகால சட்டம் அவசியமற்றது என்ற தீர்மானத்திற்கமையவே அவசரகால சட்டத்தை முழுமையாக நீக்குவதற்கான பிரேரணையை சபையில் முன்வைப்பதாக ஜனாதிபதி தெரிவித்தார். பாராளுமன்றத்துக்கு நேற்று விஜயம் செய்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவசரகால சட்டத்தை முற்றாக நீக்குவதற்கான பிரேரணையைச் சபையில் முன்வைத்து உரை நிகழ்த்தினார்.
ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்கும் பயங்கரவாதத்தை ஒழித்து நாட்டைப் பாதுகாத்து அபிவிருத்தியில் கட்டியெழுப் பவும், யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் மீள்குடியேற்றம் மற்றும் இயல்பு வாழ்க்கையை உறுதி செய்வதற்கு அவசரகால சட்டம் மிகவும் பலமாக அமைந்ததாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
வரலாற்று முக்கியத்துவம் மிக்க தீர்மானமொன்றை வெளியிடுவதற்காக பாராளுமன்றத்திற்கு நேற்று வருகை தந்த ஜனாதிபதியை ஆளுங்கட்சியினர் ஆரவாரத்துடன் வரவேற்றனர்.
அவசரகால சட்டத்தை முற்றாக நீக்குவது தொடர்பான பிரேரணையை சபையில் முன்வைத்து ஜனாதிபதி 20 நிமிடங்கள் உரையாற்றினார்.
ஜனாதிபதி தொடர்ந்து உரையாற்று கையில் :- பாராளுமன்றத்துக்கும் ஜனாதிபதிக்கும் உள்ள உறவை வலுப்படுத்துவதற்காகவே நான் அடிக்கடி பாராளுமன்றத்துக்கு விஜயம் செய்கிறேன். அந்த வகையில் அதிக தடவை பாராளுமன்றத்துக்கு வருகை தந்த தலைவர் என்ற பெருமை எனக்குண்டு.

வரவு செலவுத் திட்டத்தை சபையில் சமர்ப்பிப்பதற்காக நான் தொடர்ந்தும் பாராளுமன்றத்திற்கு வருகை தந்ததுடன், பாராளுமன்ற ஆலோசனைச் சபை கூட்டங்களிலும் பங்குபற்றியுள்ளேன்.
நிறைவேற்று அதிகாரத்துக்கும் அரசியலமைப்புக்கும் இடையில் நெருங்கிய தொடர்புகள் இருக்க வேண்டும். நாட்டின் பொருளாதாரம், ஜனநாயக மேம்பாட்டுக்கு இது மிக முக்கியமானதாகும். 1983 ஆம் ஆண்டில் கறுப்பு ஜுலையில் அன்றிருந்த உக்கிரமான நிலையையடுத்து அவசரகால சட்டம் நடைமுறைப்படுத்தப் பட்டது.
அதன் பின்னரான சமாதான ஒப்பந்த காலத்தில் அது மீண்டும் நீக்கப்பட்டு, சமாதான பேச்சுவார்த்தையை புலிகள் முறியடித்ததையடுத்து மீண்டும் அவசரகால சட்டம் நடைமுறைக்கு வந்தது.

வன்முறை, படுகொலைகளுடனான உக்கிர நிலையின் உச்சமாக வெளி விவகார அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமரின் படுகொலை இடம்பெற்றது. இதுபோன்ற சூழலொன்றிலேயே 2005 ஆம் ஆண்டு நம் நாட்டின் ஆட்சிப் பொறுப்பை ஏற்றோம்.
நாம் புலிகளுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டோம். அக்காலகட்டத்திலேயே கெப்பித்திக்கொல்லாவ படுகொலைகள், மாவிலாறு அணை மூடப்பட்ட சம்பவங்கள் இடம்பெற்றன.

இதனையடுத்து வடக்கு, கிழக்கை மீட்கும் மனிதாபிமான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டன. வடக்கு, கிழக்கு மக்களை பயங்கரவாதத்திலிருந்து பாதுகாத்து அரசாங்கம் அவர்களுக்கு இயல்பு வாழ்க்கையைப் பெற்றுக்கொடுத்துள்ளது.
மனிதாபிமான நடவடிக்கை, பாதுகாப்பு, மக்களுக்கான நிவாரணம், அம் மக்களின் மீள் குடியேற்றம் போன்ற நடவடிக்கைகளுக்கு அவசரகால சட்டம் பெரும் உறுதுணையாக அமைந்தது.
எமது ஆட்சிக் காலத்தில் எந்த ஊடகங்களின் செயற்பாட்டுக்கும் நாம் தடை விதிக்கவில்லை. தணிக்கை செய்யவுமில்லை. ஆனால் சில ஊடகங்கள் இச் சுதந்திரத்தைப் பயன்படுத்தி அரசுக்கு எதிராகச் சேறுபூசும் நடவடிக்கைகளில் ஈடுபட்டதைக் குறிப்பிட வேண்டும்.
நாம் மனிதாபிமான நடவடிக்கையை மேற்கொண்ட போது அதனை சில ஊடகங்கள் அபகீர்த்திக்குள்ளாக்கும் வகையில் செயற்பட்டன. இது மிகவும் கவலைக்குரிய விடயமாகும்.
2006 ஜூன் மாதத்திலிருந்து 2009 மே மாதம் வரையிலான காலகட்டத்தில் எமது மனிதாபிமான நடவடிக்கையின் மூலமாக பயங்கரவாதத்தை நாட்டிலிருந்தே ஒழிக்க எம்மால் முடிந்தது.

அதனைத் தொடர்ந்து வடக்கு, கிழக்கில் இயல்பு வாழ்க்கையைத் தோற்றுவிக்கும் வகையில் மிதிவெடிகளை அகற்றவும் அடிப்படை உட்கட்டமைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், இடம்பெயர்ந்தவர்களை மீள்குடியேற்றவும் நடவடிக்கை எடுத்தோம். இவற்றை எமது பிரதான பொறுப்பாகக் கொண்டோம்.

இடம்பெயர்ந்த 3 இலட்சம் பேரில் 8,000 பேரே தற்போது மீள்குடியேற்றத்திற்காக எஞ்சியுள்ளனர். இது எமது வெற்றிகரமான நடவடிக்கையின் பிரதிபலனாகும்.
வடக்கு, கிழக்கு பகுதிகளில் பாடசாலை சுகாதாரம், நிர்வாக வசதிகள் அனைத்தும் பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளன.
குறிப்பாக அப்பிரதேசங்களின் அபிவிருத்திக்காக மாத்திரம் அரசாங்கம் 2,000 மில்லியன் டொலர் நிதியை செலவிட்டுள்ளது.

இந்த நிதியானது நீண்ட மற்றும் குறுகிய கால கடனாக மற்றும் உதவி நிதியாக பல்வேறு நாடுகளிலிருந்தும் பெறப்பட்டன.
இதனடிப்படையில் எதிர்வரும் இரண்டு வருடங்களில் அப்பிரதேசங்கள் முழுமையான அபிவிருத்திக்குள்ளாக்கப்படுவது உறுதி.
பயங்கரவாத பாதிப்புகளுக்கு உள்ளான பிரதேசங்களை மீளக்கட்டியெழுப்புவதோடு, குறுகிய காலகட்டமொன்றில் அங்கு உள்ளூராட்சித் தேர்தலை நடத்தி அங்கு ஜனநாயக நிர்வாக முறையை பலப்படுத்த முடிந்துள்ளது.
அடுத்த வருடத்தில் வடக்கில் மாகாண சபைத் தேர்தலை நடத்தவும் நாம் எதிர்பார்த்துள்ளோம். இதன் மூலம் பிரதேச, மாகாண ரீதியிலும் பாராளுமன்றத்திலும் ஜனாதிபதியைத் தெரிவு செய்வதிலும் ஏனைய பகுதி மக்களைப் போன்றே வடக்கு மக்களுக்கும் சமவாய்ப்பை நாம் பெற்றுக் கொடுத்துள்ளோம்.
2009 மே மாதம் பயங்கரவாதத்திற்கு முடிவு கட்டிய பின்னர் கிaஸ் பூதத்தை தவிர நாட்டில் எந்தவொரு பயங்கரவாத செயலும் பதிவாகவில்லை. ஜனநாயக ரீதியில் பல தேர்தல்கள் நடத்தப்பட்டுள்ளன. இவை நீதியான தேர்தல்கள் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளன.
இதனால்தான் கடந்த காலங்களில் அவசரகால சட்டத்தில் பல நிபந்தனைகளை நீக்கியுள்ளோம். இதன் மூலம் எமது சமூகத்தை சாதாரண நிர்வாக முறைமையின் கீழ் கொண்டுவர முடிந்துள்ளது.
இலங்கையில் பயங்கரவாதத்தை சக்திப்படுத்தும் அவர்களுக்கிடையிலான நிதி, பொருள் பரிமாற்றங்கள் போதைவஸ்து வர்த்தகம் மற்றும் நிதி, வங்கி செயற்பாடுகள் தொடர்பில் சர்வதேச ரீதியில் ஏற்றுக்கொள்ளப்பட்ட சட்ட திட்டங்கள் எம்மால் பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.
தேசிய பாதுகாப்பை பலப்படுத்தும் அதேவேளை, இந்த சட்ட திட்டங்கள் மூலம் பயங்கரவாதம் மீண்டும் தலைதூக்காமலிருப்பதற்கான நடவடிக்கைகளை நாம் மேற்கொண்டுள் ளோம். நாட்டின் சட்ட திட்டங்கள் மூலம் சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநாட்ட எம்மால் முடிந்துள்ளது என்பதை பெருமையுடன் கூற முடியும்.

எனவே பல வருடங்களின் பின்னர் பெற்றுக்கொள்ளப்பட்ட ஜனநாயக சுதந்திரத்தைப் பாதுகாப்பது எமது பொறுப்பாகும். பல வருடங்களாக இந்த பாராளுமன்றத்தில் பிரதி மாதமும் அவசரகால சட்டம் நிறைவேற்றப்பட்டு வருகிறது. சிலர் அதற்கு எதிராக வாக்களித்தனர். வேறு பலர் வாக்களிக்பைத் தவிர்த்தனர்.
இந்தப் பாராளுமன்றம் பல கட்சிகளைக் கொண்டுள்ளது. இதன் பிரதிநிதித்துவமானது பல்வேறு கருத்துகளை ஒன்றிணைத்த பெறுமதியான சொத்தாகிறது. இந்த வகையில் சபாநாயகர் உள்ளிட்ட 225 உறுப்பினர்களும் பெரும் சொத்துக்களாவர்.
முதற் தடவையாக பயங்கரவாத அழுத்தங்களின்றி வெளிப்படையாகவும் ஜனநாயக ரீதியாகவும் எமது நாட்டில் நிலவும் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண வாய்ப்பு கிடைத்துள்ளது.
அதனால் இந்த பாராளுமன்றத்தின் மூலம் அதற்கான சந்தர்ப்பத்தை இந்த நாட்டிற்குப் பெற்றுக் கொடுக்க வேண்டுமென நாட்டு மக்கள் சார்பில் நான் இந்த பாராளுமன்றத்தில் கேட்டுக்கொள்ளுகின்றேன்.
ஜனநாயக நாட்டில் எதிர்கால நடவடிக்கைகளை சாதாரண சட்டங்களின் கீழ் முன்னெடுக்க முடியும் என்பதால் அவசரகால சட்டத்தை நீக்கும் ஆலோசனையை நான் இந்த பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கின்றேன்.
நாட்டின் நிர்வாக நடவடிக்கைகளில் அவசரகால சட்டம் அவசியமில்லை என்பதால் நான் இந்த ஆலோசனையை முன்வைக்கிறேன் எனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்
.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக