வெள்ளி, 26 ஆகஸ்ட், 2011

நான் சொல்வதை தமிழர்கள் கேட்கவில்லை என தி.மு.க., தலைவர்

சென்னை: ""நான் பலமுறை சொல்லியும் தமிழர்கள் கேட்கவில்லை; அதனால், இன்று அனுபவிக்கின்றனர். ஜனநாயகத்தை மட்டுமல்ல, தமிழையும் பாதுகாக்க வேண்டும்,'' என தி.மு.க., தலைவர் கருணாநிதி பேசினார்.
வடசென்னை மாவட்ட தி.மு.க., சார்பில், "சட்டசபையில் ஜனநாயகம் படும் பாடு' என்ற தலைப்பில், தங்கச் சாலையில் பொதுக்கூட்டம் நடந்தது. இதில் பங்கேற்று, தி.மு.க., தலைவர் கருணாநிதி பேசியதாவது:
சட்டசபையில் ஜனநாயகமே இல்லாத போது, அது படும் பாடு என்று எப்படி வருத்தப்பட முடியும். ஜெயலலிதா ஆட்சிக்கு வந்ததும், "வன்முறைக்கு இனி இடமில்லை; கொலை, கொள்ளையில் ஈடுபட்டோர் ஆந்திராவுக்கு தப்பிவிட்டனர்' என ஜெயலலிதா கூறினார். அவர் 100 நாள் ஆட்சியில், தமிழகத்தில், 86 கொலை, 110 கொள்ளை, 38 செயின் பறிப்பு, 13 வழிப்பறி நடந்துள்ளதும் சாதனை தான். புதிய தலைமைச் செயலகம் எதற்கும் உதவாது என்றவர், தற்போது தலைசிறந்த மருத்துவமனை வரும் என தீர்மானம் போடுகிறார். தி.மு.க.,வின் செயல் அனைத்தையும் மாற்ற வேண்டும் என்பதை லட்சியமாகக் கொண்டுள்ளார்.

நான் தமிழர்களுக்கு பல முறை சொல்லியும், அவர்கள் காதில் போட்டுக் கொள்ளவில்லை; அதனால் இன்று அனுபவிக்கின்றனர். தமிழுக்கு மரியாதை கொடுக்க மாட்டோம் என உறுதியாக உள்ளனர். சமச்சீர் பாடப் புத்தகத்தில், செம்மொழி என்ற வார்த்தையை அழித்துள்ளனர். புத்தகத்தில் உள்ள வாசகத்தை அழிக்கலாமே தவிர, தமிழர்களின் இதயத்தில் உள்ள வார்த்தைகளை அழிக்க முடியாது.

தமிழ்ப் புத்தாண்டு தை முதல் நாள் அல்ல, சித்திரை முதல் நாள் என மாற்றியுள்ளனர். அரிய கலாசாரத்தை அழிப்பதோடு, தமிழையும் அழித்து விடுவர். அதனால் நாம், ஜனநாயகத்தை மட்டுமல்ல, தமிழையும், தமிழ் உணர்வையும் அழிக்காமல் பாதுகாக்க வேண்டும். தமிழ் வாழ, தமிழர் வாழ போராடுவோம். இளைஞர்கள் இருக்கும் வரை எனக்கு கவலை இல்லை. இவ்வாறு கருணாநிதி பேசினார்.

தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின், முன்னாள் அமைச்சர் துரைமுருகன், முன்னாள் எம்.எல்.ஏ., சேகர்பாபு, மாவட்ட பொறுப்பாளர் சேகர் மற்றும் ஏராளமானோர் இதில் பங்கேற்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக