ஞாயிறு, 28 ஆகஸ்ட், 2011

உண்ணாவிரதத்தை முடித்தார் ஹஸாரேவின் 3 முக்கிய கோரிக்கைகள் ஏற்பு

டெல்லி: அன்னா ஹஸாரேவின் மூன்று முக்கிய கோரிக்கைகள் ஏற்கப்பட்டு, அதுதொடர்பாக நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதால், தனது உண்ணாவிரதத்தைக் கைவிட ஹஸாரே ஒப்புக் கொண்டார். அதன்படி இன்று காலை 10 மணிக்கு அவர் உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டார்.

முன்னதாக நேற்று நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்ட தீர்மானம் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது. லோக்சபாவிலும், ராஜ்யசபாவிலும் கொண்டு வரப்பட்ட இந்தத் தீர்மானம் உறுப்பினர்களால் மேசைகளைத் தட்டி வரவேற்று நிறைவேற்றப்பட்டது.

அந்தத் தீர்மானத்தில், கீழ்மட்ட அரசு அதிகாரிகளையும் லோக்பால் வரம்புக்குள் இணைப்பது, அனைத்து அரசு அலுவலகங்களிலும் மக்களின் பணிகளை குறித்த காலத்திற்குள் நிறைவேற்றுவது தொடர்பான பட்டியலை வைப்பது, அனைத்து மாநிலங்களிலும் லோக் ஆயுக்தாக்களை நிர்மானிப்பது ஆகியவை கொள்கை அளவில் ஏற்கப்படுகிறது.

மேலும் இந்த தீர்மானத்தை நாடாளுமன்ற நிலைக்குழுவுக்கு அனுப்பி வைப்பது என்றும் தீர்மானிக்கப்படுவதாக குறிப்பிடபப்பட்டிருந்தது.

தீர்மானம் நிறைவேற்றப்பட்டவுடன் அதன் நகலை எடுத்துக் கொண்டு அன்னா சார்ந்த மகாராஷ்டிராவைச் சேர்ந்தவரும், மத்திய அமைச்சருமான விலாஸ் ராவ் தேஷ்முக் ராம்லீலா மைதானத்திற்கு விரைந்தார். தீர்மான நகலை அவரிடம் காட்டினார்.

இதையடுத்து அந்த நகலை கூட்டத்தினரிடம் காட்டி இந்திய மக்களுக்கு வெற்றி கிடைத்துள்ளது என்று கூறி தனது போராட்டம் வெற்றி பெற்றதை அறிவித்தார் அன்னா ஹஸாரே. மேலும் தனது கோரிக்கைகள் ஏற்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து தான் நாளை அதாவது இன்று காலை 10 மணிக்கு உண்ணாவிரதத்தைக் கைவிடுவதாக அவர் அறிவித்தார். அதன்படி உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டார் ஹஸாரே.

தனது போராட்டத்தின் வெற்றி, இந்திய மக்களுக்குக் கிடைத்த வெற்றி என்று பின்னர் அவர் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக