ஞாயிறு, 28 ஆகஸ்ட், 2011

அமெரிக்காவை மிரட்டும் "ஐரீன்' சூறாவளி : 7 மாகாணங்களில் அவசர நிலை


ireenநியூயார்க் : "ஐரீன்' சூறாவளி இன்று, அமெரிக்காவின் கிழக்குக் கடற்கரையை கடுமையாகத் தாக்கும் என, வானியல் நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதனால், அப்பகுதியில் உள்ள ஏழு மாகாணங்களில் அவசர நிலை பிறப்பிக்கப்பட்டுள்ளது. மூன்று லட்சத்திற்கும் அதிகமான மக்கள் தங்கள் வீடுகளை விட்டு, பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
வட அட்லாண்டிக் பெருங்கடல் பகுதியில், சூறாவளிகள் அடிக்கடி உருவாவது வழக்கம். இந்த சூறாவளிகள் உருவாகும் காலகட்டம், "அட்லாண்டிக் பருவம்' என அழைக்கப்படுகிறது. இந்தாண்டில் இப்பருவம், கடந்த ஜூன் 1ம் தேதி துவங்கி, நவம்பர் 30ம் தேதியோடு முடிவடைகிறது.
இப்பருவத்தில் உருவான, "ஐரீன்' சூறாவளி சமீபத்தில், அமெரிக்காவின் தென்கிழக்குப் பகுதியில் உள்ள பஹாமாஸ் தீவுகளைத் தாக்கியது. பின் அது, புளோரிடா மாகாணத்தின் வடபகுதி கடலில், நிலை கொண்டது. அப்போது அது,"3'ம் எண் நிலையில் இருந்ததாக, அமெரிக்க வானியல் நிபுணர்கள் தெரிவித்தனர்.
மணிக்கு 150 கி.மீ., தூரம்: சூறாவளியில்,"3'ம் எண் நிலை என்பது மிகப் பேராபத்தை விளைவிக்கக் கூடியது. இதற்கிடையில் கடந்த இரு நாட்களில், "ஐரீன்' வீரியம் குறைந்து, "1'ம் எண் நிலையை எட்டியது. எனினும்,"அதன் வேகம் மணிக்கு 150 கி.மீ., தூரம் இருக்கும். அதன் விளைவு 150 கி.மீ., சுற்றளவில் எதிரொலிக்கும். சூறாவளி வீசும் பகுதிகளில், இடியுடன் கூடிய பலத்த மழை, அதனால் கடும் வெள்ளப் பெருக்கு போன்றவை ஏற்படும்' எனவும், வானியல் நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து, வடக்கு கரோலினா மாகாணத்தில் கடற்கரையோரம் வசிக்கும் இரண்டு லட்சம் மக்கள் பாதுகாப்புக் கருதி, நேற்று தங்கள் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டு, பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
தொடர்ந்து, இன்று,"ஐரீன்' சூறாவளி, அமெரிக்கக் கிழக்கு கடற்கரையோரமாக பயணித்து, நியூயார்க் அருகில் வலுவிழக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், வடக்கு கரோலினா, விர்ஜினியா, மேரிலேண்ட், டெலாவேர், நியூ ஜெர்சி, நியூயார்க் மற்றும் கனடிக்கட் ஆகிய மாகாணங்களில் அவசர நிலை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கிழக்குக் கடற்கரையோரப் பகுதிகளில் அதிகளவில் மக்கள் வசிப்பதால், சூறாவளியால் உயிர்ச்சேதம் எதுவும் ஏற்பட்டு விடக் கூடாது என்பதில், அமெரிக்க அரசு உறுதியாக உள்ளது. அதனால், அப்பகுதியில் உள்ள மக்கள் அனைவரும், கட்டாயமாக தங்கள் வீடுகளை விட்டு பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லும்படி, மாகாண அரசுகள் உத்தரவிட்டுள்ளன.
அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா விடுத்துள்ள அறிக்கையில்,"இது வரலாறு காணாத சூறாவளி; அதனால், மக்கள் எச்சரிக்கையுடன் பாதுகாப்பாக இருக்க வேண்டும்' எனக் கேட்டுக் கொண்டுள்ளார்.
 சூறாவளியின் பயணப் பாதையின் இறுதியில் உள்ள நியூயார்க், பெருமளவு பாதிக்கப்படக் கூடும் என்பதால், அந்நகரின் ரயில் மற்றும் பொதுப் போக்குவரத்துகள், நேற்று நண்பகல் முதல் நிறுத்தப்பட்டன. நியூயார்க்கின் கடற்கரைப் பகுதிகளில் இருப்போர் உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லும்படி, அந்நகர மேயர், மிக்கேல் ப்ளூம்பெர்க் உத்தரவு பிறப்பித்துள்ளார். "கடைசி நிமிடம் வரை பார்க்கலாம் என யாரும் நினைத்து கடற்கரையோரம் தங்கி விட வேண்டாம்' எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
நியூயார்க் மற்றும் நியூஜெர்சியில் உள்ள விமான நிலையங்கள் மூடப்பட்டன. நியூயார்க்கை பொறுத்தவரை, 1985ல் தாக்கிய, "க்ளோரியா' சூறாவளிக்குப் பின், "ஐரீன்' சூறாவளி தான் பெரும் மிரட்டலை விடுத்துள்ளது.
தலைநகர் வாஷிங்டனில், அதிபர் ஒபாமா பங்கேற்கும் ஜூனியர் மார்ட்டின் லூதர் கிங்கின் புதிய நினைவுச் சின்ன திறப்பு விழா, இன்று நடப்பதாக இருந்தது. சூறாவளி எச்சரிக்கை காரணமாக, அவ்விழா ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. வாஷிங்டனில், மின் துண்டிப்பு நேரிடலாம் எனவும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக