திங்கள், 15 ஆகஸ்ட், 2011

விஷம் குடித்த காதலி சாவு: உயிர்பிழைத்த காதலன் 15வது நாளில் தூக்குபோட்டு தற்கொலை

மாத்தூர் கோழிவிளை பகுதியை சேர்ந்தவர் மேக்ளின் (வயது16). பிளஸ் 1 படித்து வந்தார். இவருக்கும் மாத்தூர், பகுதியை சேர்ந்த ஜான்சன் மகன் ஜெகன் (23) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. ஜெகன் கார் டிரைவர். முதலில் சாதாரணமாக தோன்றிய பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இவர்களது காதல் விவகாரம் பெற்றோருக்கு தெரிந்ததை தொடர்ந்து, அவர்கள் காதல் ஜோடியை கண்டித்தனர்.
இந்த நிலையில் கடந்த மாதம் 14 ந் தேதி பள்ளிக்கு சென்ற மேக்ளின் மாலையில் வீடு திரும்பவில்லை. இதனால், அவரது உறவினர்கள் பல இடங்களில் தேடத் தொடங்கினர். இதற்கிடையே மத்தூர் பகுதியில் அனாதையாக நின்ற ஒரு சொகுசு காரில் காதலர்கள் இருவரும் விஷம் குடித்து மயங்கி கிடப்பதாக தகவல் கிடைத்தது. உடனே, அவர்களை உறவினர்கள் மீட்டு, மேக்ளினை மார்த் தாண்டத்தில் உள்ள மருத்துவமனையிலும், ஜெகனின் உறவினர்கள் அவரை குலசேகரத்தில் உள்ள மருத்துவமனையிலும் சிக்சைக்காக சேர்த்தனர். இதில், ஜெகன், நலம்பெற்று மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார்.
ஆனால், மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்த மேக்ளின், நினைவு திரும்பாத நிலையில் கடந்த மாதம் 31 ந் தேதி பரிதாபமாக இறந்தார்.

இந்தநிலையில் மேக்ளின் உறவினர்கள் திருவட்டார் போலீசில் புகார் கொடுத்தனர். அந்த புகாரில், மேக்ளினை, ஜெகன் ஆசை வார்த்தைகள் கூறி அழைத்து சென்று, விஷம் கொடுத்து கொன்றதாக கூறியிருந்தனர்.
இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்த ஜெகனை தேடினர். ஆனால், போலீசார் தன்னை தேடுவதை அறிந்த ஜெகன் தலைமறைவானார். தலைமறைவாக திரிந்த காலத்தில், தனது நண்பர்களை சந்திக்கும் போது, நான் உயிருடன் இருக்க மாட்டேன். காதலி சென்ற இடத்துக்கு நானும் செல்வேன், வாழ்வில் சேராத நாங்கள் சாவில் ஒன்று சேர்வோம்' என்று கூறியதாக தெரிகிறது.

ஜெகனின் பெரியம்மா, சித்தி ஆகியோரின் வீடு மலவிளையில் உள்ளது. நேற்று காலையில் ஜெகனின் பெரியம்மா டெய்சி, தனது வீட்டைவிட்டு வெளியே வந்த போது, எதிரே நின்ற ரப்பர் மரத்தின் அடியில் ஒருஜோடி செருப்பு கிடந்தது. இது யாருடைய செருப்பு? என்ற கேள்வியுடன், டெய்சி மரத்தில் பார்த்த போது, ஜெகன் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக காணப்பட்டார்.
காதலி இறந்த துக்கத்தில் காதலனும் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது.
இதுகுறித்து திருவட்டார் போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக