செவ்வாய், 19 ஜூலை, 2011

திருவிதாங்கூர் மன்னர் பிடுங்கிய வரிதான் தங்கப் பொக்கிஷமாக ‘இந்துக் கோவில், இந்து மன்னர், இந்துப் புதையல்

.
ஆன்மீக வல்லரசு

1947 இல் திருவிதாங்கூர் சமஸ்தானத்தை இந்தியாவுடன் இணைப்பதற்கு மன்னருடன் போடப்பட்ட ஒப்பந்தத்தில், கேரளத்தின் மற்ற கோவில்களெல்லாம் அறநிலையத்துறையின் கீழ் கொண்டு வரப்பட்டாலும், பத்மநாபசாமி கோயில் மட்டும் தனது நேரடிக் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என்பதை உத்திரவாதம் செய்து கொண்டார் திருவிதாங்கூர் மன்னர். பத்மநாபசுவாமியின் மீது மட்டும் மன்னர் கொண்டிருந்த அளவுகடந்த பக்திக்குக் காரணம் என்ன என்பது அப்போது புரியவில்லையெனினும் இப்போது அனைவருக்கும் புரிந்திருக்கும்.
‘இந்துக் கோவில், இந்து மன்னர், இந்துப் புதையல்’ என்று சங்க பரிவாரத்தின் அமைப்புகள் தற்போது கூச்சல் எழுப்புகின்றனர். . கிறித்தவர்கள், முஸ்லிம்களிடத்திலிருந்தும் திருவிதாங்கூர் மன்னர் பிடுங்கிய வரிதான் தங்கப் பொக்கிஷமாக மின்னிக் கொண்டிருக்கிறது.  எனினும், இந்தப் பொக்கிஷத்தை என்ன செய்வது என்பது பற்றி கிறித்தவர்களோ முஸ்லிம்களோ கருத்துத் தெரிவிக்கக் கூடாது என்று மிரட்டுகின்றனர் இந்து வெறியர்கள். அவர்களது அபிமான திருவிதாங்கூர் மன்னரும், திவான் சர்.சி.பி. ராமசாமி ஐயரும் அகண்ட பாரதத்திலிருந்து திருவிதாங்கூரைத் துண்டாடவும், அதன் பின் பாகிஸ்தானுடன் கூட்டணி சேரவும் முயன்றார்கள் என்ற வரலாற்று உண்மை அரை டவுசர் அம்பிகள் பல பேருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
1947 இல் மேற்படி இந்து மன்னரும், அவருடைய திவான் சர்.சி.பி. ராமசாமி ஐயரும் திருவிதாங்கூரை (கேரளத்தை) தனிநாடாக அறிவித்து பிரிந்து போவதற்கே முயன்றனர். அணு ஆயுதத் தயாரிப்புக்குப் பயன்படும் மோனோசைட் எனும் தாது திருவிதாங்கூர் கடற்கரையில் நிறைந்திருந்ததால் திருவிதாங்கூரைத் தனிநாடாக்கி விட்டால், அதனைப் பிரிட்டன் மட்டும் பயன்படுத்திக் கொள்ள வசதியாக இருக்கும் என்று பிரிட்டிஷ் அமைச்சர்களும், சி.பி. ராமசாமி ஐயரும் சேர்ந்து இரகசியத் திட்டம் தீட்டினர். பாகிஸ்தானும் திருவிதாங்கூரும் தனியே நட்புறவு ஒப்பந்தம் செய்து கொள்ளலாம் என்று ஜூன், 1947 இல் ஜின்னாவுக்குக் கடிதம் எழுதினார் சி.பி. ராமசாமி ஐயர். ஜூலை 1947 இல் தனிநாடாகச் செல்லப்போவதாக மவுண்ட்பாட்டனிடம் ராமசாமி ஐயர் அறிவிக்கவும் செய்தார். ஆனால் கம்யூனிஸ்டுகள் தலைமையிலான புன்னப்புரா வயலார் விவசாயிகள் எழுச்சியும், சமஸ்தானம் முழுவதும் மன்னராட்சிக்கு எதிராக நடைபெற்ற மக்கள் போராட்டங்களும் மன்னருடைய தனிநாட்டுக் கனவில் மண் அள்ளிப் போட்டன. (ஆதாரம், தி இந்து, 25.5.2008)
இதுதான் ‘இந்துப் பொக்கிஷத்தை’ச் சுருட்டிக்கொண்டு போவதற்கு ‘இந்து மன்னன்’ செய்த சதியின் கதை. சமஸ்தான மன்னர்களுக்குப் பல்வேறு சலுகைகளை வழங்கி இந்திய யூனியனுன் இணைத்த இரும்பு மனிதர் சர்தார் படேல், திருவிதாங்கூரை இந்தியாவுடன் இணைக்கும் ஒப்பந்தத்தில், பத்மநாபசாமி கோவில் திருவாங்கூர் மன்னர் சித்திரைத் திருநாள் பலராம வர்மாவின் நேரடி நிர்வாகத்தின் கீழ் இருக்கும் என்பதை ஏற்றுக் கொண்டிருந்தார்.
1991 இல் பலராம வர்மா இறந்தபின் அவரது தம்பியான உத்திராடம் திருநாள் மார்த்தாண்ட வர்மா, அடுத்த வாரிசு என்ற முறையில் கோவிலின் மீது உரிமை கோரியதுடன், கோயிலில் உள்ள பொக்கிஷங்கள் அனைத்தும் அரச குடும்பத்தின் தனிச்சொத்துக்கள் என்றும் கூறினார். இதனை எதிர்த்து கோவிலின் சொத்துக்களையும், நிர்வாகத்தையும் அரசு மேற்கொள்ள வேண்டும் என்று கோரி சுந்தரராஜன் என்ற வழக்குரைஞர் கேரள உயர்நீதி மன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்தார்.
இது தொடர்பாக நடைபெற்ற வழக்கில் (உத்திராடம் திருநாள் மார்த்தாண்ட வர்மா -எதிர்- யூனியன் ஆஃப் இந்தியா) 31.1.2011 அன்று கேரள உயர்நீதி மன்ற பெஞ்சு (நீதிபதிகள்: ராமச்சந்திரன் நாயர், சுரேந்திர மோகன்) தீர்ப்பளித்தது. அந்தத் தீர்ப்பின் சாரம் கீழ்வருமாறு:
“சித்திரைத் திருநாள் பலராம வர்மா 1991 இல் மரணமடைந்த பின் அவர் வகித்து வந்த கோவிலின் அறங்காவலர் பொறுப்பு, மாநில அரசுக்குத்தான் வரும். அரசியல் சட்டத்தின் 366(22) பிரிவின் படி இந்தியாவுக்குள் யாரும் எந்த விதத்திலும் மன்னர் என்ற தகுதியைக் கோர முடியாது. எனவே அரச வாரிசு என்ற முறையில் மார்த்தாண்ட வர்மா கோயிலின் மீது உரிமை கோர முடியாது.
பத்மநாபசாமி கோவில் என்பது மன்னர் குடும்பத்தின் தனிச்சொத்து அல்ல. அவ்வாறு தனிச்சொத்தாக இருந்திருப்பின் திருவிதாங்கூர்-இந்திய யூனியன் இணைப்பு ஒப்பந்தத்தில் இது குறித்த ஒரு ஷரத்தினைச் சேர்க்க வேண்டிய அவசியமே நேர்ந்திருக்காது.
கோவிலின் சொத்துக்கள், பொக்கிஷங்கள் குறித்து மறைந்த பலராம வர்மா தயாரித்த பட்டியலைச் சமர்ப்பிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த போதிலும் மார்த்தாண்ட வர்மா அவற்றைச் சமர்ப்பிக்கவில்லை. அவர் கொடுத்துள்ள விவரங்கள் முறையற்றவையாகவும், நம்பகத்தன்மையற்றவையாகவும் உள்ளன.
தற்போது மார்த்தாண்ட வர்மா என்ற தனிநபர் பத்மநாபசாமி கோவிலை நிர்வகித்து வருவதைச் சட்டப்படி சரியானது என்று மாநில அரசு கருதுகிறதா என்று இந்த நீதிமன்றம் எழுப்பிய கேள்விக்கு மாநில அரசு பதிலே சொல்லவில்லை. கோவில் நல்லபடியாக நிர்வகிக்கப் படுவதாகவும், அதில் தலையிட வேண்டிய அவசியம் அரசுக்கு இல்லை என்றும் மாநில அரசு பதிலளித்திருக்கிறது. கேரளத்தில் தனியார்களால் நிர்வகிக்கப்படும் கோவில்கள் குறித்த அரசின் நிலை பொதுமக்களின் நலனைப் பிரதிபலிப்பதாக இல்லை.
ஏராளமான தனியார் கோவில்கள் செல்வாக்குப் பெற்று வருகின்றன. அவர்களது சொத்துக்கள் எல்லாம் மக்களும், பக்தர்களும் செலுத்திய காணிக்கைகளே. மத நிறுவனங்கள் பொதுமக்களிடமிருந்து இவ்வாறு பணம் திரட்டும்போது, அவை மக்களுக்குக் கணக்கு கொடுத்தாக வேண்டும் என்பதை அரசு உத்திரவாதப்படுத்த வேண்டும். கடவுளின் பெயரால் மக்களின் பணத்தைக் கொள்ளையடிக்கும் நடவடிக்கைகளைத் தடுக்க வேண்டியது மிகவும் அவசரக் கடமையாகி விட்டது என்று கருதுகிறோம். கடவுள் அல்லது நம்பிக்கையின் பெயரால் திரட்டப்படும் பணத்தைத் தனிநபர்கள் அல்லது அறங்காவலர் குழுக்களின் தனிப்பட்ட நலனுக்குத் திருப்பி விடுவதை அனுமதிப்பது என்பது, மதம், நம்பிக்கை ஆகியவற்றை வைத்து வியாபாரம் செய்வதை அனுமதிப்பதாகும். இதனை அரசு அனுமதிக்கிறதா என்பதே கேள்வி. இவ்விசயத்தில் மாநில அரசின் அணுகுமுறை  பக்தர்களின் நலனையோ, மக்களின் நலனையோ பிரதிபலிப்பதாக இல்லை.
எனவே பத்மநாபசாமி கோவிலின் சொத்துக்களையும், அதன் நிர்வாகத்தையும் மாநில அரசு மேற்கொள்ள வேண்டும். அதனை நிர்வகிப்பதற்குரிய அறங்காவலர் குழு அல்லது சட்டப்பூர்வமான நிர்வாகத்தை நியமிக்க வேண்டும். இது 3 மாதங்களுக்குள் நிறைவேற்றப்பட வேண்டும்.
அவ்வாறு மாநில அரசால் நியமிக்கப்படுகின்ற கோவில் நிர்வாகியின் மேற்பார்வையில் கோவிலில் உள்ள சுரங்க அறைகள் திறக்கப்பட்டு, அதில் உள்ள பொக்கிஷங்கள் பட்டியலிடப்பட வேண்டும். இந்தப் பணியை நிறைவேற்றுவதற்குப் பொருத்தமான, நேர்மையான அதிகாரிகள் நியமிக்கப்பட வேண்டும். அதன் பின்னர் கோவில் வளாகத்திலேயே ஒரு அருங்காட்சியகம் அமைக்கப்பட்டு, அங்கே அவையனைத்தும் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட வேண்டும்.”
மேற்கூறிய தீர்ப்பில் கேரள உயர்நீதி மன்றம் மாநில அரசு என்று குறிப்பிட்டு விமரிசிப்பது மார்க்சிஸ்டு கட்சி அரசைத்தான். மே.வங்கத்தில் தரகு முதலாளி டாடாவுக்கு ஆதரவாக புத்ததேவ் பட்டாச்சார்யா. கேரளத்தில் திருவிதாங்கூர் மன்னனுக்கு ஆதரவாக அச்சுதானந்தன்! கோவிலும், அதன் சொத்துக்களும் மன்னரிடமே இருக்கட்டும் என்று கூறிய மார்க்சிஸ்டு கட்சி அரசு, அதனை மறுத்து உயர்நீதி மன்றம் தீர்ப்பு வழங்கிய பின்னரும் அந்தத் தீர்ப்பை அமல்படுத்தவில்லை என்பதுதான் மிகவும் முக்கியமானது. மூன்று மாதங்களுக்குள் கோவிலை மேற்கொள்ள வேண்டும் என்று ஜனவரி 31, 2011 இல் உயர்நீதி மன்றம் உத்தரவிட்டிருந்த போதிலும் அச்சுதானந்தன் அரசு ஒரு துரும்பைக் கூட அசைக்கவில்லை.
விளைவு, மார்த்தாண்ட வர்மா உச்சநீதி மன்றத்தில் மனுத் தாக்கல் செய்து, மேற்கூறிய உயர்நீதி மன்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடையும் வாங்கி விட்டார். கோவிலை மாநில அரசு மேற்கொள்வதற்கு இடைக்காலத் தடை பெற்றதன் மூலம், கோவிலின் நிர்வாகத்தை மார்த்தாண்ட வர்மா தன்னுடைய கைகளில் வைத்திருக்கிறார். சுரங்க அறையிலிருந்து பொக்கிஷங்களை எடுத்துப் பட்டியலிடுவதற்கு மட்டும் உச்சநீதி மன்றம் ஒரு குழுவை நியமித்திருக்கின்றது.
பொக்கிஷங்கள் மக்களுக்குத்தான் சொந்தம் என்பதை நாம் அரசியல் ரீதியாகக் கூறுகிறோம். சட்டப்படி அது அரசுக்குத்தான் சொந்தம் என்று தனது தீர்ப்பில் விளக்கியிருக்கிறது கேரள உயர்நீதி மன்றம்.
ஆனால் பொக்கிஷங்களும், கோவிலும் தனக்குச் சொந்தம் என்பது மார்த்தாண்ட வர்மாவின் கருத்து. சங்கராச்சாரியின் கருத்தும் அதுதான். “பொக்கிஷம் கோவிலுக்குச் சொந்தம். அதில் அரசு தலையிடக் கூடாது” என்பது ஆர்.எஸ்.எஸ் கும்பலின் கருத்து. “பொக்கிஷம் கோவிலுக்குச் சொந்தம். கோவில் நிர்வாகம் மன்னனுக்குச் சொந்தம். அதில் அரசு தலையிடத் தேவையில்லை” என்பது மார்க்சிஸ்டுகளின் கருத்து. “பொக்கிஷம் பத்மநாபசுவாமிக்கு சொந்தம்” என்பது காங்கிரசு முதல்வர் உம்மன் சாண்டியின் கருத்து. இவர்கள் எல்லோரது கருத்தும் சாராம்சத்தில் ஒரே கருத்துதான்.
யார் கொடுத்தார்கள், எவ்வளவு கொடுத்தார்கள், எதற்காகக் கொடுத்தார்கள் என்று எந்தவித விவரத்தையும் காட்டாமல், ஒரு இலட்சம் கோடி ரூபாய்க்கும் மேற்பட்ட செல்வத்தை வைத்துக் கொண்டு, கேட்டால் பகவானுக்கு வந்த காணிக்கை என்கிறார்கள். காணிக்கைக்குக் கணக்கு எழுதி வைக்கக் கூடாது என்று பகவான் சொன்னாரா, அல்லது பக்தன் சொன்னானா? கணக்கில் வராத பணத்தைத்தானே கருப்புப் பணம் என்று அழைக்கிறார்கள்?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக