செவ்வாய், 19 ஜூலை, 2011

கோவில் புதையல்கள் எல்லாம் கருப்பு பணமே.சுவிஸ் வங்கியை விட மோசமான தர்மகர்த்தாக்கள்

திருவிதாங்கூரின் பாதாள அறையிலிருந்து மட்டுமல்ல, புட்டபர்த்தியிலுள்ள பாபாவின் தனியறையான யஜுர்வேத மந்திரத்திலிருந்தும் தங்கமும் வைரமும், கட்டு கட்டாகப் பணமும், காசோலைகளும் வருகின்றன. தனியறையில் படுத்து ஆன்மீக ஆராய்ச்சியில் ஈடுபடுவதற்குப் பதிலாக காணிக்கைகளை ஆராயக் காரணம் என்ன? பெண்டாட்டி, பிள்ளை இல்லாத பாபா யாருக்காக காணிக்கைப் பணத்தை தனியறையில் ஒதுக்கி வைத்தார்? வந்த காணிக்கைகளை அறங்காவலர் குழுவிடம் கொடுத்து ரசீது போடாமல், கோடிக்கணக்கான ரூபாயை ஏன் தன்னுடைய தனியறையில் பதுக்கி வைத்துக் கொண்டார் என்ற கேள்விகளை அரசாங்கம் எழுப்பவில்லை. பத்திரிகைகளும் எழுப்பவில்லை. பக்தர்களுக்கும் அது உரைக்கவில்லை.
அலைக்கற்றை ஊழலில் ஈட்டிய கணக்கில் வராத காசை சோதனை போட்டுப் பிடிக்கும் வருமான வரித்துறையோ, சி.பி.ஐ யோ பாபாவின் அறையைச் சோதனை போடவில்லை. ஒருவேளை கலைஞர் டிவிக்கு பதிலாக ‘கலைஞர் கோவில்’ என்றொரு ஆன்மீகக் கம்பெனியைத் தொடங்கி, அக்கோவிலின் உண்டியலில் 200 கோடி ரூபாயை காணிக்கையாக வரவு வைத்திருந்தால், கணக்கே கொடுக்காமல் பணத்தையும் காப்பாற்றி, கனிமொழியையும் கூட காப்பாற்றியிருக்கலாமோ?
வெளிநாட்டு வங்கிகளில் இந்தியர்கள் குவித்து வைத்திருக்கும் கருப்புப் பணத்தைக் கைப்பற்றி மக்களுக்குச் சொந்தமாக்குவதற்காக சிறப்புப் புலனாய்வுக் குழு ஒன்றை அமைத்திருக்கிறது உச்சநீதி மன்றம். கருப்புப் பணத்தைப் பதுக்குவதற்கு வெளிநாட்டுக்கு ஓடுவதும், கே மேன் ஐலாண்ட், மொரிஷியஸ் போன்ற தீவுகளைத் தேடுவதும் மேற்கத்திய சிந்தனை முறையில் உதித்த வழிமுறைகள். பாரம்பரிய மிக்க நமது பாரத மரபில் இதற்கான பல வழிமுறைகள் ஏற்கெனவே உருவாக்கப் பட்டிருக்கின்றன. அவற்றில் தொன்மையானது திருவிதாங்கூர் நிலவறை. நவீனமானது பாபாவின் யஜூர்வேத மந்திரம். இவை எந்தச் சிறப்புப் புலனாய்வுக் குழுவின் பிடிக்கும் சிக்காதவை.
ஏனென்றால் இவை ஆன்மீக உரிமைகள் என்ற இரும்புப் பெட்டகத்தினால் சட்டரீதியாகப் பாதுகாக்கப்படும் பௌதீகத் திருட்டுச் சொத்துகள்.

தற்போது தோண்டியெடுக்கப்பட்டுள்ளவை அனைத்தும் தொல்லியல் மதிப்பு மிக்க செல்வங்கள் அல்ல. அவற்றில் ஒன்றிரண்டைத் தவிர மற்றவை அனைத்தும் தங்கத்தின் வடிவிலான பணம். அவ்வளவே. அவை இந்த நாட்டின் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு மட்டுமே உரிமையான சொத்து. அவர்களுடைய முன்னோர்களிடமிருந்து பிடுங்கப்பட்ட செல்வம்; சுரண்டப்பட்ட உழைப்பு.
திருவிதாங்கூர் அரசாட்சி கீழ் விவசாயிகள் மீதும், ஒடுக்கப்பட்ட சாதிகளைச் சேர்ந்த மக்கள் மீதும் நம்பூதிரிகளும், நாயர்களும் இழைத்த கொடுமைகளையும், அவ்வரசாட்சியின் கீழ் மக்களுடைய அவலமான வாழ்நிலையையும், ஆங்கிலேயனுடன் கூட்டுச் சேர்ந்து கொண்டு நம் நாட்டு மக்களுக்கு அந்த மன்னர் பரம்பரை இழைத்த துரோகத்தையும் காட்சிப்படுத்தி, இரத்தம் தோய்ந்த அந்த வரலாற்றின் பின்புலத்தில், கண்டெடுக்கப்பட்ட இந்த ஒரு இலட்சம் கோடிப் புதையலைப் பார்வைக்கு வைக்க வேண்டும்.
அப்போதுதான் இந்தப் புதையல் எங்கிருந்து எடுக்கப்பட்டது என்ற விவரத்தைக் காட்டிலும், யாரிடமிருந்து எடுக்கப்பட்டது என்ற வரலாற்று உண்மையின் முக்கியத்துவம் நிலைநிறுத்தப்படும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக