செவ்வாய், 19 ஜூலை, 2011

கடவுளுக்கு வந்த காணிக்கைகள் அல்ல.மன்னர்குடும்பம் ஆங்கிலேயரின் கைகூலிகள்

.
ஆன்மீக வல்லரசு
ஸ்விஸ் வங்கிகள், பாதுகாப்புப் பெட்டகங்கள் போன்றவை இல்லாத அந்தக் காலத்தில் கோவில்கள்தான் மன்னர்கள் தமது செல்வத்தைப் பதுக்கி வைப்பதற்கான பெட்டகங்களாக  இருந்திருக்கின்றன. அது மட்டுமல்ல, நிலப்பிரபுத்துவ சாதிய சமூகத்தின் அதிகாரமும், அரசு அதிகாரமும் கோவில் வழியாகவே செலுத்தப்பட்ட காரணத்தினால், கோவில்கள் அறிவிக்கப்படாத அரசு கஜானாக்களாகவே இருந்திருக்கின்றன. ஆகையினால்தான் இராசராச சோழன் முதல் கஜினி முகமது வரையிலான மன்னர்கள் அனைவரும் தாங்கள் ஆக்கிரமிக்கும் நாட்டில் உள்ள கோவில்களைக் குறிவைத்துக் கொள்ளையிட்டிருக்கிறார்கள். தங்கத்தைக் கோவிலுக்குப் பதிலாகச் சுடுகாட்டில் புதைத்து வைப்பது மரபாக இருந்திருந்தால், கஜினி முகமதுவும் சோமநாதபுரத்தின் கோவிலுக்குப் பதிலாக அந்த ஊரின் சுடுகாட்டைத்தான் சூறையாடியிருப்பான்.
திருவிதாங்கூர் சமஸ்தானத்திடம் இந்த அளவுக்குத் தங்கம் சேர்ந்ததற்குச் சில குறிப்பான காரணங்களும் உள்ளன. அன்று ஐரோப்பாவுடன் கடல் வணிகத்தில் ஈடுபட்டு வந்த செம்பகச்சேரி, கோட்டயம், கொச்சி ஆகிய நாடுகள் திருவிதாங்கூரைக் காட்டிலும் பன்மடங்கு செல்வ வளம் மிக்கவையாக இருந்தன. 18 ஆம் நூற்றாண்டில் திருவிதாங்கூர் மன்னனாக இருந்த மார்த்தாண்ட வர்மா, இந்த நாடுகளின் மீது படையெடுத்து அந்நாடுகளின் செல்வத்தைக் கொள்ளையிட்டிருக்கிறான். இவையன்றி மன்னன் விதிக்கும் அபராதங்கள் அனைத்தும் கோவிலின் பெயரில் தங்கமாக வசூலிக்கப்பட்டதால் அவையும்,  வணிகர்களும் செல்வந்தர்களும் கோவிலுக்குச் செலுத்திய காணிக்கைகளும் தங்கமாகச் சேர்ந்திருக்கின்றன.
18 ஆம் நூற்றாண்டில் தமிழகத்தில் கட்டபொம்மன், மருது முதலானவர்களும், மைசூரில் திப்புவும் ஆங்கிலேயனை எதிர்த்து நின்றபோது, கேரளத்தில் திருவிதாங்கூர் சமஸ்தானமும், தமிழகத்தில் ஆற்காட்டு நவாபும் கும்பினியின் கைக்கூலிகளாக இருந்தனர். கும்பினியின் எடுபிடியாக இருந்த திருவிதாங்கூர் அரசுக்கு எதிராக திப்பு படையெடுத்த போது, கேரளத்தின் வடபகுதியில் இருந்த குறுநில மன்னர்கள் பலரும் தமது பொக்கிஷங்களைத் திருவிதாங்கூர் மன்னனிடம் கொடுத்துப் பதுக்கி வைத்திருக்கின்றனர். இதற்கு ஆவணச் சான்றுகள் உள்ளன என்று கூறும் கேரளத்தைச் சேர்ந்த வரலாற்றாசிரியர்  கோபாலகிருஷ்ணன், இந்த நிலவறைகள் எல்லாம் அப்போதுதான் தோண்டப்பட்டிருக்க வேண்டும் என்றும் கூறுகிறார். அந்நியப் படையெடுப்புக்கு அஞ்சியது மட்டுமல்ல, அரச குடும்பங்களுக்குள் வழக்கமாக நடக்கும் அரண்மனைச் சதிகளும், உள்குத்துகளும் கூட இப்படி தங்கத்தைப் புதைத்து வைக்கக் காரணமாக இருந்திருக்கலாம்.
அவ்வாறின்றி, ஆன்மீக அடிப்பொடிகள் சித்தரிப்பதைப் போல இவையெல்லாம் கடவுளுக்கு வந்த காணிக்கைகள் அல்ல. ஒரு வாதத்துக்கு அப்படி வைத்துக் கொண்டாலும் அதற்குக் கணக்கும் இல்லை, யார் கொடுத்த காணிக்கை என்பதற்கான விவரமும் இல்லை. கோவிலில் மணி அடிப்பவனுக்கும், சமையற்காரனுக்கும், விளக்கு போடுபவனுக்கும் ஆண்டுக்கு எவ்வளவு கலம் நெல் அளிக்க வேண்டும் என்பதைக் கல்வெட்டில் செதுக்கி வைக்கும் அளவுக்கு ‘யோக்கியர்களான’ மன்னர் பரம்பரையினர், பல இலட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள ‘காணிக்கைகளை’ புதைத்து வைத்திருப்பது பற்றி ஒரு துண்டுச் சீட்டில் கூட எழுதி வைக்காததற்கு வேறு என்ன காரணம்?
இந்தப் புதையல் அனைத்தையும் மக்கள் நலனுக்கும், வறுமை ஒழிப்புத் திட்டங்களுக்கும் பயன்படுத்த வேண்டும் என்று ஓய்வுபெற்ற நீதிபதி வி.ஆர். கிருஷ்ணய்யர், கேரள பகுத்தறிவாளர் சங்கத்தை சேர்ந்த காலநாதன், வரலாற்றாய்வாளர் செரியன் போன்றோர் கூறியிருக்கின்றனர். இதைக் கேட்டவுடனே ஆத்திரம் கொண்ட ஆர்.எஸ்.எஸ் காலிகள்  நள்ளிரவில் காலநாதன் வீட்டைக் கல்லெறிந்து தாக்கியுள்ளனர்.
“தற்போது எடுக்கப்பட்டுள்ள நகைகள் எல்லாம் மன்னர் குடும்பத்துக்கே சொந்தம்” என்பது காஞ்சிபுரத்து யோக்கியர் ஜெயேந்திரனின் கருத்து. “அவை தொல்லியல் துறைக்குச் சொந்தம்” என்பது கே.என். பணிக்கர் போன்றோரின் கருத்து. “மாநில அரசுக்குச் சொந்தம்” என்பது வேறு சிலர் கருத்து. “அனைத்தும் பகவான் பத்மநாப ஸ்வாமிக்கே சொந்தம்” என்பது மாநில முதல்வர் உம்மன் சாண்டியின் கருத்து.
“பகவான் பத்மநாபஸ்வாமியும், அவருடைய கோவிலும், அதன் சொத்துக்களும் மன்னர் குடும்பத்துக்கே சொந்தம்” என்பது தற்போதைய திருவிதாங்கூர் மகாராஜா உத்திராடம் திருநாள் மார்த்தாண்ட வர்மாவின் கருத்து. அது வெறும் கருத்து அல்ல. இந்தக் கோவிலும், அதன் சொத்துக்களும் மக்களுக்குச் சொந்தமா அல்லது மன்னர் குடும்பத்துக்குச் சொந்தமா என்பது உச்சநீதி மன்றத்தில் தற்போது நிலுவையில் இருக்கும் வழக்கு. இந்த வழக்கின் அங்கமாகத்தான் தற்போதைய புதையல் வேட்டை நடந்து கொண்டிருக்கிறது என்பதால் மேற்கூறிய கேள்விக்கான விடையைப் புரிந்துகொள்வதற்கு இவ்வழக்கு பற்றித் தெரிந்து கொள்வதும் அவசியம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக