செவ்வாய், 12 ஜூலை, 2011

கஹவத்தை மர்மக் கொலைகள்: மூன்று சூத்திரதாரிகளும் கைது; அச்சம் வேண்டாமென்கிறது பொலிஸ்


பூதம் என்பது வதந்தி
இரத்தினபுரி கஹவத்தை பிரதேசத்தில் தொடர்ச்சியாக இடம்பெற்று வந்த ஏழு பெண்களின் கொலைகளுடன் தொடர்புடைய மூன்று பிரதான சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்து தடுத்து வைத்திருப்பதுடன் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரும் இராணுவத்தினரும் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டிருப்பதனால் இம்மர்ம கொலைகள் குறித்து பொதுமக்கள் இனிமேல் அச்சம் கொள்ளத் தேவையில்லையென கஹவத்தை பொலிஸ் அதிகாரியொருவர் தினகரனுக்குத் தெரிவித்தார்.
இதேவேளை, அப்பகுதியெங்கும் பூதம் நடமாடி வருவதாக பரப்பப்படும் வதந்திகளில் எவ்வித உண்மையுமில்லை. அது அப்பட்டமான பொய்யெனவும் இவை குறித்து கஹவத்தை மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் கூறினார்.கஹவத்தை பிரதேசத்தில் சுமார் ஒன்றரை வருடங்களாக 50 வயதிற்கு மேற்பட்ட பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட பின்னர் கொலை செய்யப்பட்டு வந்தனால் அப்பகுதியெங்கும் கடும் அச்சம் நிலவி வந்ததுடன், தேவையற்ற வதந்திகளும் பரவி வந்தன.
இதனால், பெண்கள் வீடுகளில் தனியாக இருக்கவோ, வீதிகளில் நடமாடவோ அச்சமடைந்திருந்தனர். கடந்த காலங்களில் இடம்பெற்ற ஏழு கொலைகளுடன் சம்பந்தப்பட்ட மூவரும் ஏதோவொரு வகையில் மனநோயாளிகளாக காணப்படுவதாகவும் இனிமேலும் இம்மர்ம கொலைகள் குறித்து மக்கள் கலக்கமடையத் தேவையில்லையெனவும் கஹவத்தை பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த பொலிஸ் அதிகாரியொருவர் கூறினார்.
அவர் இச்சம்பவங்கள் குறித்து மேலும் விவரிக்கையில், கஹவத்தை பிரதேசத்தில் கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் இவ்வருட முதல் ஐந்து மாதங்கள் வரையான காலப் பகுதிக்குள் 50 வயதிற்கு மேற்பட்ட 7 பெண்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
2008 ஆம் ஆண்டில் இருவரும் 2010 ஆம் ஆண்டில் இருவரும் 2011 ஆம் ஆண்டின் முதல் ஐந்து மாத காலப் பகுதிக்குள் மூவரும் இவ்வாறாக கொலை செய்யப்பட்டுள்ளனர். இக்கொலைகளில் முதல் ஆறு கொலைகளுக்கும் காரணமான காம வெறியர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
2008 மற்றும் 2010 இல் நான்கு பெண்களையும் தானே பாலியல் பலாத்காரம் செய்த பின்னர் கொலை செய்ததாக கைது செய்யப்பட்டவர்களில் முதலாவது சந்தேக நபர் ஒப்புக்கொண்டுள்ளார். மற்றைய சந்தேக நபரும் இவ்வருட ஆரம்பத்தில் 50 வயதிற்கு மேற்பட்ட இரண்டு பெண்களை தானே கொலை செய்ததாகவும் அதன் பின்னர் சடலங்களுடன் பாலியல் உறவுகொண்டதாகவும் ஒப்புக்கொண்டுள்ளார்.
இந்நிலையில் கடந்த மே 30 ஆம் திகதி இடம்பெற்ற கொலையுடன் சம்பந்தப்பட்ட சந்தேக நபரே நேற்று முன்தினம் சனிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.

ரணசிங்க ஆரச்சிகே சித்ரானந்த (49) எனும் மூன்று பிள்ளைகளின் தந்தையே தனது தாயான திஸாநாயக்க கீன்மெனிக்கே (65) என்பவரை கொலை செய்துள்ளார்.

பொலிஸாரும் சி.ஐ.டி. யினரும் இணைந்து மேற்கொண்ட தீவிர தேடுதலின் விளைவாகவே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சிறுவயது முதல் தனது தாய் மேலிருந்து வந்த கோபமே தன்னை கொலை செய்ய வைத்திருப்பதாக அவர் பொலிஸாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார். தனது இரு மூத்த சகோதரிகளுக்கே தனது அம்மா அதிக அன்பைக் காட்டியதாகவும் வீடு, காணி அனைத்தையும் அவர்களுக்கே கொடுக்க முற்பட்டமையே தான் விரக்தி நிலைக்கு உள்ளாக்கியதாகவும் அவர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
தேவேளை கஹவத்தை பகுதியில் உயர்ந்த கறுத்த பூதமொன்று நடமாடுவதாகவும் இரவுகளில் பெண்களிருக்கும் வீட்டு கதவுகளை தட்டிச் செல்வதாகவும் வதந்திகள் உலவி வருகின்றன.
இவை அப்பட்டமான பொய் என்பது தொடர்பாக பொலிஸாரினால் பொதுமக்களிடையே விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் பூஜித்த ஜயசுந்தர தலைமையில் கடந்த 06 ஆம் திகதியும், நேற்றும் அப்பகுதியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டுள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக