செவ்வாய், 12 ஜூலை, 2011

85 அகதிகளை விடுவிக்க இந்தோனேசியா மறுப்பு - ஏற்க நியூசிலாந்து மறுப்பு!

நியூசிலாந்து நோக்கி அகதிகளாகச் சென்று கைது செய்யப்பட்டுள்ள இலங்கையர்கள் 85 பேரை விடுவிக்க இந்தோனேசிய அதிகாரிகள் மறுப்புத் தெரிவித்துள்ள நிலையில் அவர்களை ஏற்றுக் கொள்ள நியூசிலாந்து மறுப்புத் தெரிவித்துள்ளது. 85 இலங்கை அகதிகளை ஏற்றிய கப்பல் இந்தோனேசியாவின் பின்டன் தீவிலுள்ள தன்யுன்ங் பினெனங் நரகப் பகுதியிலுள்ள கடற்பரப்பில் கடந்த சனிக்கிழமை நங்கூரமிடப்பட்டுள்ளது. இந்தக் கப்பலில் உள்ள அகதிகளை ரொய்டர் செய்திச் சேவையின் புகைப்படப் பிடிப்பாளர் யூலி செஜெரி நேரில் சென்று சந்தித்துள்ளார். தாங்கள் நியூசிலாந்து நோக்கிச் செல்ல விரும்புவதாக குறித்த கப்பலில் இருந்த அகதிகள் குறிப்பிட்டுள்ளனர். கப்பலை விட்டு இறங்க இணக்கம் தெரிவிக்காத அகதிகள் ஐநா தலையீட்டாலும் ஏனைய வழிமுறைகளிலும் நியூசிலாந்து செல்ல முடியுமா என ரொய்டர் செய்திச் சேவையின் புகைப்படப் பிடிப்பாளர் யூலி செஜெரிஸிடம் கேள்வி எழுப்பியுள்ளனர். "நாம் நியூசிலாந்து செல்ல வேண்டும்... தயவு செய்து எங்களுக்கு உதவி செய்யுங்கள்..." என இலங்கை அகதிகள் யூலி செஜெரிஸிடம் மன்றாடிக் கேட்டுள்ளனர். இரண்டு வருடங்களாக இந்த கப்பலில் இருக்கும் மற்றுமொரு அகதி, இலங்கையில் தனது குடும்பம் கொலை செய்யப்பட்டுவிட்டதாகவும் அதனால் கப்பலைவிட்டு வெளியே வருவதைவிட கப்பலிலேயே உயிர் நீத்தல் சிறந்தது எனவும் கூறியுள்ளார். இந்த நிலையில் இலங்கை அகதிகள் 85 பேரின் வழிமுறைகளை தாம் ஏற்றுக் கொள்ளவில்லை எனத் தெரிவித்துள்ள நியூசிலாந்து பிரதமர் ஜோன் கீ, அகதிகளை ஏற்றுக் கொள்ளத் தாயார் இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக