திங்கள், 11 ஜூலை, 2011

வந்தே மாதரம் பாடமறுப்பவன் தேச விரோதியா?

கண்ணை மறைக்கும் காவிப் புழுதி

சிறுபான்மையினர்க்கு எதிரான ஆர்.எஸ்.எஸ்இன் பொய்யும் புரட்டும் – 6

சுதந்திரப் போராட்டக் காலத்தில் தேசபக்தர்களுக்கும், தூக்குக் கயிற்றில் தொங்கிய தியாகிகளுக்கும் உயிர் கொடுத்த மந்திரச் சொல் வந்தே மாதரம்‘. தன்னிகரில்லா பாரதத் தாயின் மீது பக்தியையும், அன்பையும் தூண்டி எழுச்சியைத் தோற்றுவிக்கும் வந்தே மாதரதேசிய கீதத்தை கிறித்தவர்களும், முசுலீம்களும் பாட மறுக்கிறார்களே ஏன்?”
- ஆர்.எஸ்.எஸ்.இன் நீண்டகால அவதூறுகளில் இதுவும் ஒன்று.
டந்த பத்தாண்டுகளாக பா.ஜ.க ஆளும் மாநிலங்களில் உள்ள பள்ளிகள் மற்றும் அரசு அலுவலகங்களில் வந்தே மாதரத்தைக் கட்டாயமாகப் பாடும் நடைமுறையை அவர்கள் ஏற்கெனவே ஆரம்பித்து விட்டார்கள். வந்தே மாதரத்தைப் பாட மறுக்கும் சிறுபான்மையினரைத் தேசத்துரோகிகள் என்று பெரும்பான்மை மக்கள் எளிதில் ஏற்கும் வண்ணம் பிரச்சாரமும் செய்து வருகிறார்கள். ஆகையால் வந்தே மாதரத்தையும் நாட்டுப் பற்றையும் இணைத்து இந்து மதவெறியாளர்கள் போட்டிருக்கும் இந்தப் பொய் முடிச்சை நாம் அவிழ்க்க வேண்டும்.

நாட்டுப் பற்று ஜெபத்திலா, சிறையிலா?

ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தை எதிர்த்துப் போராடியவர்களின் பெருமை, அவர்கள் ஒவ்வொரு நாளும் வந்தே மாதரத்தை உச்சசாடனம் செய்தார்களா என்பதில் இல்லை; தடியடி, சிறை, தூக்கு இன்னபிற கொடுமைகளை ஏற்றுக்கொண்டு தளராமல் போராடியதில்தான் இருக்கின்றது அவர்களது பெருமை. அதைத்தான் நாட்டுப்பற்று எனக்கூற முடியும். அதேசமயம் வெள்ளையர்கள் இருக்கும்வரை ‘ஷாகா’ சென்று கபடி விளையாடிய ஸ்வயம் சேவகக் குஞ்சுகள், ஒவ்வொரு நாளும் ‘வந்தே மாதரம்’ ‘பாரத் மாதாகி ஜெய்’ இரண்டையும் ஜெபம் செய்தார்களே ஒழிய, சுதந்திரப் போராட்டத்திற்காகத் தமது சுட்டு விரலைக்கூட அசைக்கவில்லை. சிறைக் கம்பிகளைக் கூடக் கண்டிராத கோழைகளும், துரோகிகளுமான இந்துமத வெறியர்கள், வந்தே மாதரத்தின் ஊடாக நாட்டுப்பற்றை பற்றிப் பேசுவதற்கு என்ன அருகதை இருக்கிறது?
பாரதமாதா கிடக்கட்டும், பாரதம் என்று இன்று அறியப்படும் இந்தியாவே உருவாயிராத காலம்தான் 19ஆம் நூற்றாண்டு. பல்வேறு வழிமுறைகளில் ஆட்சியதிகாரத்தை வெள்ளையர்கள் கைப்பற்றிக் கொண்டிருந்த காலம் அது. அதனால் அதிகாரமிழந்தவர்கள் அவர்களை எதிர்ப்பதும், அதிகாரம் பெற்றவர்கள் ஆதரிப்பதும் இடத்திற்கிடம் மாறுபட்டது. உதாரணத்திற்கு மராத்திய சிவாஜிக்குப் பின், பேஷ்வாக்களின் ஆட்சியில் தக்காணம் முழுவதையும் பார்ப்பன ‘மேல்’சாதி நிலப்பிரபுக்களும், வியாபாரிகளும் ஆண்டு அனுபவித்தனர். ஆங்கிலேயரின் வரவு பேஷ்வா ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வந்தது. தமது சமூக மேலாண்மை பறி போனதைக் கண்ட மராத்திய சித்பவனப் பார்ப்பனர்கள், வெள்ளையர்களை எதிர்க்கத் துவங்கிய சூழ்நிலை இதுதான். திலகர், கோகலே, சாவர்க்கர் போன்ற சித்பவனப் பார்ப்பனர்கள் பிரிட்டிஷ் எதிர்ப்பாளர்களாக உருவான விதமும் அப்படித்தான்.

ஆங்கிலப் பிதாவிடம் வங்கமாதாகாதல்!

மராத்திய நிலைமை இப்படியிருக்க வங்கத்தின் நிலைமை நேரெதிராக இருந்தது. மொகலாயர் ஆட்சிக்குப் பின்னால் வங்கத்தை ஆண்ட முசுலீம் நவாப்புகள், ஜமீன்தார்கள் ஆட்சியில் – பார்ப்பன ‘மேல்’சாதியினர் தமது அதிகாரத்தை இழந்து தவித்தனர். எனவே, நவாப்புகளை முறியடித்த ஆங்கிலேயர்களை அவர்கள் நெஞ்சார வாழ்த்தி வரவேற்றனர். இந்தச் சூழ்நிலையை வைத்து 19ஆம் நூற்றாண்டின் இறுதியில் பங்கிம் சந்திர சட்டர்ஜி என்ற பார்ப்பனர் ‘ஆனந்தமடம்’ என்ற நாவலை எழுதினர். முசுலீம் அரசர்களை எதிர்த்து இந்துச் சாமியார்கள் போராடுவதைக் கூறும் இக்கதையில்தான் ‘வந்தே மாதரம்’ (தாய்க்கு வணக்கம்) என்ற பாடல் வருகிறது. காளி, துர்க்கை, சரஸ்வதி, லட்சுமி என்ற தாயை விளிக்கும் ‘வந்தே மாதரம்’ இப்படித்தான் தோன்றியது.
”நம்முடைய நவாபின் ராஜ்ய பரிபாலனத்தைப் பாரும். மதம் போய்விட்டது; சமூகம் போய்விட்டது; மானம் போய்விட்டது; குலம் போய்விட்டது; இப்போது பிராணனும் போய்க் கொண்டிருக்கிறது…” இது ‘ஆனந்த மடம்’ நாவலில் வரும் ஒரு உரையாடல். இதில் யாருடைய மதம் – சமூகம் – மானம் – குலம் – பிராணன் போய்விட்டது என்பதை வாசகர்கள் புரிந்து கொள்ளலாம். அதனால்தான் முசுலீம் அரசர்களிடமிருந்து வங்கத்து மாதாவை விடுதலை செய்த ‘ஆங்கிலப் பிதாவை’ அன்றைய வங்கத்துப் பார்ப்பன ‘மேல்’ சாதியினர் மனதார வாழ்த்தினர். வந்தே மாதரத்தின் தோற்றத்திலேயே நாட்டுப்பற்றுக்கு இடமில்லை!
காலப்போக்கில் வங்கத்து வந்தே மாதரம் ஆங்கிலப் பிதாவை எதிர்க்கும் பாரத மாதாவாக மறுபிறவி எடுத்தது. இந்த பாரத மாதா பஜனையை விடுதலைப் போராட்டத்தில் திணித்தது காங்கிரசு கும்பலின் கைங்கரியமாகும். இந்திய அளவில் இந்து மதமும், பாரத மாதாவும் உருவாக்கப்பட்டு வந்த நிகழ்ச்சிப் போக்கும், காங்கிரசின் பார்ப்பன ‘மேல்’சாதித் தலைவர்களும் அவர்களின் பார்ப்பனிய இந்துத்துவக் கருத்தும் ‘வந்தே மாதரத்தை’ப் பயன்படுத்திக்கொள்ள ஏதுவாக இருந்தன.

பஜனை நாட்டுப்பற்று எங்கேயுமில்லை!

இந்த இடத்தில் வாசகர்கள் கொஞ்சம் சிந்தித்துப் பார்க்க வேண்டும். பிரிட்டன், போர்ச்சுக்கல், ஸ்பெயின், இத்தாலி, ஜெர்மனி, ஜப்பான் போன்ற ஏகாதிபதியங்களின் ஆதிக்கத்தின் கீழ் பல ஆசிய, ஆப்பிரிக்க, லத்தீன் அமெரிக்க நாடுகள் இருந்திருக்கின்றன. ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்டங்களின் மூலம் விடுதலையும் அடைந்திருக்கின்றன. அந்நாட்டைச் சேர்ந்த மக்கள் கிறித்தவம், இசுலாம், பவுத்தம் என்ற பலவிதமான மதநம்பிக்கை கொண்டவர்களாகவே இருந்திருக்கின்றனர். லிபியாவின் ஓமர் முக்தா தனிப்பட்ட முறையில் ஆழ்ந்த இசுலாமிய மதப்பற்று கொண்டவர்; துருக்கியின் கமால் பாட்சாவோ மதச்சார்பற்றவர்.
சீனாவை ஆக்கிரமித்த ஜப்பானும், அடிமைப்பட்ட சீனாவும் பவுத்தமத நம்பிக்கை கொண்ட நாடுகள்தான். அமெரிக்க ஐரோப்பிய ஏகாதிபத்திய நாடுகளின் மதமும், அடிமைப்படுத்தப்பட்ட லத்தீன் அமெரிக்க நாடுகளின் மதமும் கிறித்தவம்தான்.
அடிமைப்படுத்தப்பட்ட நாடுகளின் மக்கள் தம்நாட்டைத் தாய்நாடென்றோ தந்தையர் நாடென்றோதான் அழைத்தார்கள். ஆனால், யாரும் கன்னி  மேரியைப் போலவோ, ஏசுவைப் போலவோ, புத்தரைப் போலவோ ஒரு படம் வரைந்து வைத்து குடம், சாம்பிராணி காட்டி, இந்தப் படத்துக்கு பஜனை பாடுபவன்தான் உண்மையான நாட்டுப்பற்று கொண்டவன் என்று கூறவில்லை. ஒரு மதத்தினர் மட்டுமே வாழும் நாடுகளில் கூட  நடக்காத இந்தப் பித்தலாட்டம், பல மதத்தினர் வாழும் இந்தியாவில் நடந்தது.

ரவிவர்மாவின் லட்சுமி காங்கிரசின் பாரத மாதா

கோயில்களின் அம்மணமாக நிற்கும் பெண் கடவுள்களை மாதிரியாகக் கொண்டு, அந்தப் பெண் உருவங்களுக்கு பார்ப்பன, உயர்சாதி மாமிகளின் பாணியில் சேலை கட்டி, ”இதுதான் லட்சுமி, சரஸ்வதி, பார்வதி” என்று வரைந்து தள்ளினார் திருவதாங்கூர் மன்னர் பரம்பரையைச் சேர்ந்த ஓவியர் ரவிவர்மா. இப்படி ‘மாதா’க்களை உருவாக்கிய மன்னர் பரம்பரைதான் கடைசிவரை வெள்ளையனின் விசுவாச அடிமையாக இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. முதுகில் நாலு கை முளைத்த லட்சுமிதான் பாரத மாதா; இந்தப் பெண் தெய்வத்தை வருணிக்கும் பாடல்தான் ‘விடுதலைக் கீதம்’ என்று சொன்னால் அது பிற மதத்தினரை வெறுப்படையத் செய்யாதா?
இப்படித்தான் விடுதலைப் போராட்டத்திலிருந்து மதத்தின் பெயரால் முசுலீம் மக்களைத் தனிமைப்படுத்தும் போக்கை காங்கிரசுக் கும்பல் ஆரம்பித்து வைத்தது. உருவ வழிபாடில்லாத, ஓரிறைக் கோட்பாட்டில் நம்பிக்கை கொண்ட கிறித்தவ, இசுலாமிய மதங்களைச் சேர்ந்த மக்கள் வந்தே மாதரம் பாடுவதன் மூலம் இந்துத் தெய்வங்களை வணங்க வேண்டும் என்பது இந்துமத வெறியர்களின் குரூரமான விருப்பம். பாட மறுக்கும்போது தேசவிரோதிகள் என்று பிரச்சாரம் செய்வது அவர்களது பாசிச நோக்கம் நிறைவேற்றுவதற்கான வாய்ப்பு.

பாரத மாதாவை விற்பவர்கள் யார்?

ஒரு நாடு என்பது அங்கு வாழும் மக்களை மட்டும்தான் குறிக்கும். நாட்டுப்பற்று என்பது அம்மக்களின் நலனில் அக்கறை கொண்டிருப்பதை மட்டும் குறிக்கும். மக்களையும், அவர்கள் நலனையும் பற்றிக் கவலைப்படாத இந்து மதவெறியர்கள்தான் நாட்டை தெய்வம், படம், பூசை என்று சடங்கு முறையாக்கும் ”தேசபக்தி”க்குச் சொந்தக்காரர்களாக இருக்கிறார்கள். ஆகையால் நாட்டை தெய்வமாக்குவதை அதுவும் பார்ப்பனத் தெய்வமாக மாற்றுவதை அனைவரும் எதிர்க்க வேண்டும்.
ஆகாசவாணியின் விடிகாலை ஒலிபரப்பில் கீறல் விழுந்த ரிக்கார்டாக ஒலித்துவந்த வந்தே மாதரத்தை, பிரேக் டான்சின் வலிப்புக்கேற்ப பாப்பிசை ‘வண்ட்டே மாட்றம்’ ஆக சோனி நிறுவனம் உலகெங்கும் வெளியிட்டிருக்கிறது. இன்னொருபுறம் மேல்நிலை வல்லரசுகளுக்காக நாட்டையே காட்டிக் கொடுத்து விற்கும் தரகனாக பா.ஜ.க. அரசு செயல்பட்டு வருகிறது. இப்படி அரசியலிலும் பண்பாட்டிலும் பொருளாதாரத்திலும் ”பாரத மாதா”வை விற்பவர்கள் முசுலீம்களோ, கிறித்தவர்களோ அல்ல!
- தொடரும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக