புதன், 8 ஜூன், 2011

Chennai ஈழத்தமிழர் குடும்பத்தோடு தீயிட்டு தற்கொலை /கொலை பொலிசார் புலன்

சென்னை சேத்துப்பட்டு அடுக்குமாடி வீட்டில் பயங்கரம்: தாய், 2 மகள்கள் தீக்குளித்து சாவு
இலங்கை தொழிலதிபர் குடும்பத்தின் பரிதாப முடிவு
gnachandranசென்னை சேத்துப்பட்டில் அடுக்குமாடி குடியிருப்பில் இலங்கை தொழிலதிபரின் மனைவியும், 2 மகள்களும் தீக்குளித்து பரிதாபமாக உயிரைவிட்டனர். இலங்கை தொழிலதிபரும் அவருடைய இன்னொரு மகளும் பலத்த தீக்காயங்களுடன் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.சென்னை சேத்துப்பட்டு ஸ்பர்டாங் சாலையில் உள்ள லாமக் அவென்ïவில், ராயல் என்கிளேவ் என்ற பெயரில் புதிதாக 3 மாடிகளைக் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்பட்டு உள்ளது. இந்தக் குடியிருப்பில் 7 வீடுகள் இருக்கின்றன. இந்த அடுக்குமாடி குடியிருப்பின் உரிமையாளர் பெங்களூருவில் வசிக்கிறார். இந்தக் குடியிருப்பில் உள்ள வீடுகள் மிகவும் ஆடம்பரமானவை ஆகும்.
ஏழு வீடுகளில் 4 வீடுகளுக்கு மட்டும் மாதம் ரூ.50 ஆயிரம் வாடகை கொடுத்து 4 குடும்பத்தினர் வசிக்கிறார்கள். மற்ற 3 வீடுகள் காலியாக உள்ளன. இரண்டாவது மாடியில் உள்ள வீட்டில் இலங்கையைச் சேர்ந்த தொழிலதிபர் ஞானச்சந்திரன் (வயது 55) கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு வந்து குடியேறினார். இவரது மனைவி ஜெயா (வயது 50). இவர்களுக்கு மூன்று மகள்கள் இருந்தனர். மூத்த மகள் பெயர் சவுமியா (வயது 15), கடைசி 2 மகள்களும் எட்டு வயது நிரம்பிய இரட்டைக் குழந்தைகள் ஆவார்கள். இலங்கை தமிழர்களான இவர்கள், ஆஸ்திரேலியாவில் இருந்து வந்து இங்கு குடியேறியுள்ளனர்.
வீட்டில் பயங்கர தீ
நேற்றிரவு 8.15 மணியளவில் தொழிலதிபர் ஞானச்சந்திரன் வீட்டில் இருந்து பயங்கர புகை கிளம்பியது. இதைப் பார்த்து பக்கத்து 3 வீடுகளில் வசிப்பவர்கள் அலறி அடித்துக் கொண்டு கீழே ஓடிவந்தனர். அந்தத் தெருவில் வசிப்பவர்கள் அனைவரும் பங்களாவாசிகள் ஆவார்கள். சத்தம் கேட்டு அனைவரும் தெருவில் கூடினார்கள். இதுகுறித்து தீயணைப்புத் துறைக்கும், போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்புத் துறையினர், தீயணைப்பு அதிகாரிகள் பிரியா, லோகநாதன் ஆகியோர் தலைமையில் இரண்டு வண்டிகளில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். போலீஸ் இணை கமிஷனர் சங்கர், துணை கமிஷனர் பவானீஸ்வரி, சேத்துப்பட்டு போலீஸ் இன்ஸ்பெக்டர் மகேந்திரன் ஆகியோர் போலீஸ் படையோடு விரைந்து வந்தார்கள்.
தீக்காயங்களுடன்...
தீப்பிடித்து எரிந்த தொழிலதிபர் ஞானச்சந்திரனின் வீட்டுக் கதவு உள்பக்கம் பூட்டப்பட்டிருந்தது. தீயணைப்பு வீரர்கள் அந்தக் கதவை உடைத்து வீட்டுக்குள் போக முயன்றனர். ஆனால், வீடு முழுவதும் தீப்பிடித்து எரிந்ததால் ஒரே புகைமூட்டமாக இருந்தது. பயங்கர அனல் அடித்ததால் யாரும் உள்ளே போக முடியவில்லை. அதன்பிறகு தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர்.
அப்போது, தொழிலதிபர் ஞானச்சந்திரன் தீக்காயங்களுடன் வெளியே வந்தார். அவரது மகள் சவுமியா உடல் முழுவதும் தீப்பற்றி எரிந்த நிலையில் நிர்வாண கோலத்தோடு வெளியே ஓடிவந்தார். என்ன நடந்தது? எதனால் தீப்பிடித்தது? என்ற விவரம் எதுவும் உடனடியாக தெரியவில்லை. ஞானச்சந்திரனையும், சவுமியாவையும் உடனடியாக அப்பல்லோ ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று சிகிச்சைக்கு சேர்த்தனர்.
3 பேர் சாவு
வீட்டுக்குள் 3 படுக்கை அறைகள், பெரிய வரவேற்பு அறை, சமையலறை, பூஜை அறை என பல அறைகள் இருந்தன. ஒவ்வொரு அறையாக சென்று பார்த்தபோது, ஒரு படுக்கை அறைக்குள் ஜெயாவும், ஒரு மகளும் தீயில் எரிந்து கரிக்கட்டைகளாக பிணமாக கிடந்தனர். இன்னொரு மகள் குளியலறைக்குள் உடல் முழுவதும் எரிந்து கரிக்கட்டை கோலத்தில் பிணமாக கிடந்தார்.
அக்கம் பக்கத்து வீடுகளில் விசாரித்தபோதும் இவர்களைப் பற்றிய பெயர், விவரங்கள்கூட தெரியவில்லை. அவர்கள் வீட்டில் வேலை செய்த பாப்பாத்தி என்ற பெண் மட்டும் ஒரு சில விவரங்களை மட்டும் கூறினார். பின்னர் படிப்படியாக, போலீசார் தகவல்களை சேகரித்தனர். இவர்கள் குடும்பத்தோடு தீக்குளித்திருக்கலாம் என்று ஆரம்பகட்ட விசாரணை மூலம் கருதுவதாக தீயணைப்பு படையினரும், போலீசாரும் கூறினார்கள்.
உடல்கள் மீட்பு
சமையல் கியாஸை திறந்துவிட்டு தீவைத்துக் கொண்டார்களா! அல்லது மண் எண்ணெயை உடலில் ஊற்றிக் கொண்டு தீக்குளித்தார்களா! என்பது பற்றி விசாரணை நடத்தப்பட்டது. கைரேகை நிபுணர்களும், தடய அறிவியல் நிபுணர்களும் வரவழைக்கப்பட்டனர். இரவு 10.30 மணிக்கு மேல்தான் பிணமாக கிடந்த 3 பேரின் உடல்களையும் போலீசார் மீட்டு, பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
தொழிலதிபர் ஞானச்சந்திரனே மனைவி, மகள்களை தீவைத்து எரித்தாரா? என்ற கோணத்திலும் விசாரணை நடக்கிறது. ஏனென்றால், அவருக்கு தீயினால் அதிக காயம் ஏற்படவில்லை.
தனிப்படை
வேலைக்கார பெண் பாப்பாத்தியிடம் விசாரித்தபோது, அவர்கள் அதிகமாக யாரிடமும் பேசமாட்டார்கள். எதிரே உள்ள வீட்டில் வசிப்பவர்களிடமும்கூட எதுவும் பேசுவதில்லை. எப்போதும் கதவைப் பூட்டிக் கொண்டுதான் இருப்பார்கள். ஏதாவது வேலை சொன்னால் மட்டும் நான் செய்வேன் என்று சுருக்கமாக கூறினார். பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி தலைமையில் ஒரு தனிப்படை அமைக்கப்பட்டு, தொழிலதிபர் ஞானச்சந்திரனிடம் ஆஸ்பத்திரியில் விசாரணை நடந்து வருகிறது. ஞானச்சந்திரன் மட்டுமே பேசக்கூடிய நிலையில் இருப்பதால், அவர் மூலம் உண்மையிலேயே என்ன நடந்தது? என்பது குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. இந்த சம்பவம் நேற்றிரவு சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சேத்துப்பட்டு போலீசார் இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக