ஞாயிறு, 12 ஜூன், 2011

வாகன விபத்துக்கள்.அலட்சியம் அவசரம் தான் மட்டும் எப்படியாவது முந்த வேண்டும்


சென்னையிலிருந்து திருப்பூர் சென்று கொண்டிருந்த ஆம்னி பஸ் கவிழ்ந்து, தீப்பிடித்து எரிந்ததில் டிரைவர் மற்றும் ஒரே ஒரு பயணியைத் தவிர மீதமிருந்த 23 பேரும் உடல் கருகி அகால மரணமடைந்திருக்கின்றனர். அவர்களின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை இறைஞ்சுவோம்.
இந்த விபத்துக்கும் காரணம் முன்னே சென்று கொண்டிருந்த லாரி தான்! வலது ஓர பாதையில் வெகு மெதுவாக ஊர்ந்து செல்லும் லாரிகள் தேசிய நெடுஞ்சாலைகளில் வெகு சாதாரணம். பின்னால் வரும் வாகனங்கள் முன்னே செல்ல வேறு வழியின்றி இடது பக்கமாக தாண்டிச் செல்ல வேண்டும். அந்த நேரத்தில் திடீரென லாரி ஓட்டுனரும் இடது பக்கம் திடீரென திருப்புவதால் இந்த மாதிரியான விபத்துகள் ஏற்படத்தான் செய்யும்.
இரண்டு லாரி சுமையை ஒரே லாரியில் ஏற்றி, லாரியின் பின் புறம் விளக்கு எரியாமல் மெல்ல மெல்ல வலது ஓரம், இடது ஓரம், நடு ரோடு என்றெல்லாம் பார்க்காமல் தனது தாத்தா காசில் போட்ட ரோடு என்ற நினைப்பில் செல்லும் லாரிகளின் அலட்சியத்தால் பல விபத்துகள் நிகழ்கின்றன.
இதே போல தேசிய நெடுஞ்சாலைகளாகட்டும், சாதாரண சாலைகளாகட்டும் நாம் ஏற்கனவே முன்னர் ஒரு கட்டுரையில் சுட்டிக் காட்டியபடி, டூ வீலர்களும் இதே போலத் தான்! இடது ஓரமாக மட்டுமே டூ வீலர்கள் ஓட்டப்பட வேண்டும் என்ற சட்டம் இருந்தாலும் நடைமுறையில் இடது ஓரத்தைத் தவிர மீதி எல்லா இடங்களிலும் டூ வீலர்கள் ஓட்டப்படுகின்றன. ரோட்டில் போக்குவரத்து கம்மியாகவே இருந்தாலும் கூட டூ வீலர் ஓட்டுபவர்கள் நடு ரோட்டிலோ, வலது பக்க பாதையிலோ தான் ஓட்டுகிறார்கள். கடுமையான சட்டங்கள் தேவை. இப்படி இஷ்டத்துக்கு வாகனம் ஓட்டுபவரின் லைசன்ஸ் முதல் தடவையிலேயே ரத்து செய்யப்படும் என்று சட்டம் கொண்டு வந்து நடைமுறைப்படுத்தினால் பிறகு யாராவது அப்படி ஓட்டுவார்களா?!
விபத்தில் இறந்து போன குடும்பத்தினருக்கு அரசு சார்பில் நஷ்ட ஈடு…. அத்தோடு முடிந்தது. இதற்கு மேல் அடுத்த தடவை இதே போன்ற விபத்து நேரும் போது புள்ளி விபரத்திற்காக மட்டுமே இந்த விபத்து நினைவு கோரப்படும்!
அலட்சியம்… அலட்சியம்… அலட்சியம்… ஒரு அரசியல் தலைவர் படுகொலை செய்யப்பட்டால் மீண்டும் ஒரு முறை அதே போன்றதொரு கொலை அதே ஸ்டைலில் நடைபெற விடுவார்களா? எத்தனை எத்தனை கோடி செலவழித்து பாதுகாத்துக் கொள்கிறார்கள். ஆனால் இதைப் போன்ற விபத்துகளில் மட்டும் ஏன் அன்றைய பரிதாபத்தோடு மறந்து விடுகிறார்கள்?
எல்லாவற்றிலும் கடுமை காட்டக்கூடியவர் என்று பெயரெடுத்த முதல்வர், உடனடியாக இந்த விஷயத்தில் கடுமையான சட்ட நடைமுறைப்படுத்தலைக் கொண்டு வர வேண்டும்.
கடந்த முறை ஆட்சியிலிருந்து போது 2004-ம் வருடம் ஜூலை மாதம் 15-ம் தேதியை மறக்க முடியுமா? கும்பகோணத்தில் பள்ளிக்கூட தீ விபத்தில் 94 மாணவச் செல்வங்களை பறிகொடுத்தோம். இன்னமும் கூட அந்த விபத்திலிருந்து நாம் பாடம் கற்றுக் கொள்ளவில்லை! அதே கதியில் தான் பல பள்ளிக்கூடங்கள் இருக்கின்றன! பாடத்திட்டங்களையெல்லாம் விட அடிப்படை வசதிகள், சுகாதாரமான கழிப்பிடம், சுத்தமான தண்ணீர் போன்றவற்றை அனைத்து பள்ளிக்கூடங்களிலும் கட்டாயமாக்க வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக