புதன், 8 ஜூன், 2011

கொலை மிரட்டல்.காவலன் பட தயாரிப்பாளரை சக்தி சிதம்பரம்


காவலன் படத்தயாரிப்பாளருக்கு கொலை மிரட்டல்!
வீடு புகுந்து மிரட்டிய தயாரிப்பாளர் ஷக்தி சிதம்பரம் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, "காவலன் பட தயாரிப்பாளர் ரோமேஷ்பாபு, சென்னை மாநகர் போலீஸ் கமிஷனரிடம் மனு அளித்தார். சென்னை, தி.நகரைச் சேர்ந்தவர் ரோமேஷ் பாபு; சமீபத்தில், நடிகர் விஜய் நடித்து வெளிவந்த, "காவலன் படத்தின் தயாரிப்பாளர். இவர், சென்னை போலீஸ் கமிஷனர் திரிபாதியை சந்தித்து புகார் ஒன்றை அளித்தார்.

அப்போது அவருடைய வக்கீல் ரவிராஜ பாண்டியன் கூறியதாவது:
"காவலன் படத்தை பெரும் பொருட்செலவில் ரோமேஷ் பாபு தயாரித்தார். அப்போது, வினியோகஸ்தர் என்ற பெயரில் தயாரிப்பாளரும், இயக்குனருமான ஷக்தி சிதம்பரம், எங்களை அணுகினார். அதன் பின், காவலன் படத்திற்கு தானே தயாரிப்பாளர் என்று கூறி பலரிடம் ஒப்பந்தம் போட்டுள்ள தகவல் எங்களுக்கு கிடைத்தது. இது தொடர்பாக, கோர்ட்டில் வழக்கும் தொடரப்பட்டது. வழக்கு முடிவில், காவலன் படத்திற்கு தயாரிப்பாளர் ரோமேஷ் பாபு மட்டுமே என்றும், இதில், ஷக்தி சிதம்பரம் தலையிடக் கூடாது என்றும், ஷக்தி சிதம்பரத்திடம் ஒப்பந்தம் போட்டு பணம் கொடுத்தவர்கள், தனிப்பட்ட முறையில் அவரிடம் பெற்றுக் கொள்ள வேண்டும் என்றும் கோர்ட் தீர்ப்பளித்ததை தொடர்ந்து, படத்திற்கான சிக்கல் விலகி, வெளிவந்தது.

படத்திற்கான "சாட்டிலைட் உரிமத்தை ரோமேஷ்குமார், தனியார் தொலைக்காட்சி நிறுவனத்திற்கு 5.5 கோடி ரூபாய்க்கு கொடுத்தார். அதில், 2.75 கோடி ரூபாயை அந்த நிறுவனம் கொடுத்துவிட்டது. மீதமுள்ள 2.75 கோடி ரூபாய்க்கு கடந்த நான்கு மாதங்களாக சாக்கு போக்கு சொல்லி வருகிறது. இந்நிலையில், கடந்த 5ம் தேதி, ஷக்தி சிதம்பரம் மற்றும் இரண்டு பேர், ரோமேஷ் குமாரின் வீட்டிற்கு வந்தனர்.

வீட்டில் இருந்த வயதான பெற்றோரிடம், " உன் மகன், அந்த "டிவி நிறுவனத்திற்கு செல்லக் கூடாது. "டிவி நிறுவனத்தினரை பார்த்தால் உன் மகன் போட்டோவில் தான் இருப்பான். என் பலம் என்ன? எனக்கு பின்னாடி யார் இருக்கிறார்கள் என்று உன் மகனுக்கு தெரியவில்லை.(Shakthi Sithambaram) என் மீதோ, "டிவி நிறுவனம் மீதோ புகார் கொடுத்தால், உன் மகன் இல்லாமல் போய்விடுவான். அவனுக்கு மூன்று நாள் கெடு, என்று மிரட்டிச் சென்றுள்ளனர். தொடர்ந்து, ரோமேஷ்க்கு போன் செய்து, " இன்னும் இரண்டு நாட்களில் பணம் எனக்கு வேண்டாம் என்று எழுதிக் கொடுத்துவிட்டு ஊரைவிட்டு ஓடிவிடு. இல்லையென்றால் அவ்வளவுதான் என்று மிரட்டியுள்ளனர். இது தொடர்பாக, நாங்கள் கமிஷனரிடம் புகார் அளித்தோம். கமிஷனர், இந்த புகாரை சென்னை மத்திய குற்றப் பிரிவு விசாரணைக்கு பரிந்துரைத்துள்ளார். இவ்வாறு ரவிராஜ பாண்டியன் கூறினார்.
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக