புதன், 8 ஜூன், 2011

சிபிஐ இயக்குநருடன் டி.ஆர். பாலு திடீர் மோதல்

புது தில்லி, ஜூன் 7: 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு குறித்து விசாரிக்கும் நாடாளுமன்றக் கூட்டுக் குழுக் (ஜேபிசி) கூட்டத்தில், சிபிஐ இயக்குநரின் விளக்கத்துக்கு முன்னாள் அமைச்சர் டி.ஆர்.பாலு கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.இந்த திடீர் மோதலால் ஜேபிசி கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.ஜேபிசி குழுவின் முன்பு சிபிஐ இயக்குநர் ஏ.பி. சிங் மற்றும் என்.கே. குப்தா, ஏ.கே.அவஸ்தி உள்ளிட்ட அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை ஆஜரானார்கள். 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு தொடர்பாக இதுவரை சிபிஐ மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பான அனைத்து விவரங்களையும், விசாரணை நிலவரத்தையும் ஜேபிசி குழுவின் முன்பு சிபிஐ தலைவர் ஏ.பி. சிங் பட்டியலிட்டு வந்தார்.தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியில் மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சர்களாக பிரமோத் மகாஜன், அருண் சௌரி ஆகியோர் இருந்தபோது மேற்கொள்ளப்பட்ட முடிவுகள் குறித்து குழுவின் முன்பு அவர் விவரித்தார். அதுவரை டி.ஆர். பாலு அமைதி காத்தார்.சிபிஐ இயக்குநர் ஏ.பி. சிங், 2004 ஆம் ஆண்டில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் மத்திய தொலைத்தொடர்பு அமைச்சர் தயாநிதி என்று குறிப்பிடுவதற்குள் டி.ஆர்.பாலு இடைமறித்து, எந்த அமைச்சரின் பெயரையும் குறிப்பிட வேண்டியதில்லை என்று கூறினார். இது அங்கிருந்த உறுப்பினர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. இச் சம்பவம் தேசிய தொலைக்காட்சி அலைவரிசைகளில் ஒளிபரப்பாகின.ஜேபிசி கூட்டம் முடிந்த பிறகு, இது குறித்து குழுவின் தலைவர் பி.சி. சாக்கோவிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, அதுபோல் எதுவும் நடைபெறவில்லை என பதிலளித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக