இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இயற்கை எரிவாயு மற்றும் கச்சா எண்ணை வயல்களைக் கண்டுபிடிக்கவும் எண்ணை துரப்பணம் செய்யவும் ரிலையன்ஸ், கெய்ன்ஸ் உள்ளிட்ட தனியார் நிறுவனங்களுக்கு அளிக்கப்பட்டுள்ள ஒப்பந்தங்களில் மாபெரும் ஓட்டைகள் இருப்பதாகவும், அதன் வழியே புகுந்து புறப்பட்டுள்ள முகேஷ் அம்பானி, அரசுக்கும் மக்களுக்கும் பட்டை நாமம் சாற்றியிருப்பதாகவும் இப்போது வெளியாகியிருக்கும் CAG அறிக்கையின் முன்வரைவு கூறுகிறது.
குறிப்பாக கிருஷ்ணா கோதாவரிப் படுகையில் இயற்கை எரிவாயு வயல்களை கண்டுபிடிக்கவும், அதற்காக ஆழ்துளைக் கிணறுகள் தோண்டவும் போடப்பட்டுள்ள ஒப்பந்தத்தில், ஆரம்பத்தில் ரிலையன்ஸ் செய்யவிருப்பதாக ஒப்புக் கொண்ட மூலதனச் செலவைக் காட்டிலும் இரண்டே வருடத்தில் மும்மடங்கு அதிகமாக செலவு செய்ததாக கள்ளக்கணக்கு எழுதியிருக்கிறது. இதைத் தொடர்ந்து ஒப்பந்தம் போடும் போது ஒப்புக் கொண்ட அளவுக்கு எரிவாயு ரிசர்வ் இல்லை என்று சொல்லி செலவு செய்ததாக அவர்கள் காட்டிய தொகையையும் அரசிடம் இருந்தே கறந்துள்ளனர். இது இந்த ஊழலின் ஒரு அம்சம்.
இதில் இன்னொரு அம்சமும் உள்ளது. அதாவது, எரிவாயு கண்டுபிடிக்க (to be explored) வேண்டிய பகுதிகள் என்று குறிக்கப்பட்ட பகுதிகளையெல்லாம் கண்டுபிடிக்கப்பட்ட (discovered) பகுதிகள் என்று போர்ஜரி வேலையும் செய்துள்ளது ரிலையன்ஸ். கிருஷ்ணா கோதாவரி சுழிமுனையில் இயற்கை எரிவாயு ரிசர்வ் இருப்பதை உறுதி செய்து கொண்ட அரசு, அந்தப் பகுதியில் ஆழ்துளைக் கிணறுகள் அமைக்கும் ஒப்பந்தத்தை ரிலையன்ஸிடம் கொடுக்கிறது. இதில் ஐந்து சதவீத பகுதியில் மட்டும் ஆழ்துளைக் கிணறுகள் அமைத்த ரிலையன்ஸ், அருகில் உள்ள மற்ற பகுதிகளில் தானே எரிவாயுவைக் கண்டுபிடித்து விட்டதாகச் சொல்லி அப்பகுதிகளையும் அமுக்கிக் கொண்டிருக்கிறது.
இவ்விவகாரத்தில், அரசுக்கும் தனியாருக்கும் இடையேயான ஒப்பந்தம் என்பது உற்பத்திப் பகிர்வின் (PSC – Production-sharing contract) அடிப்படையில் லாபப் பகிர்வு இருக்கும் என்றும், அதில் மூலதனச் செலவுக்கு ஏற்ப லாப விகிதங்கள் பகிர்ந்து கொள்ளப் படும் என்றும் குறிப்பிட்டிருப்பதால் தான் ஊழல் செய்ய வாய்ப்பு ஏற்பட்டு, நாட்டுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது என்று கணக்குத் தணிக்கை அதிகாரியின் அறிக்கை தெரிவிக்கிறது. இந்த மோசடிகளுக்கெல்லாம் பெட்ரோலியத் துறை அதிகாரிகளும் அமைச்சரும் உடந்தையாக இருந்ததாகவும் அறிக்கை சொல்கிறது.
தற்போது நடப்பில் இருக்கும் உற்பத்திப் பகிர்வு அடிப்படையிலான ஒப்பந்தங்கள் ஊழலுக்கு வழிகோலுவதால், இதற்கு மாற்றாக உற்பத்தியின் அடிப்படையில் ராயல்டி விதிப்பது சரியாக இருக்கும் என்று கணக்குத் தணிக்கை அதிகாரி பரிந்துரைத்துள்ளார். மேலும், செனற் ஆண்டு வெளியான ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு தொடர்பான ஊழலைப் போல் அல்லாமல், இந்த ஊழலில் மக்களுக்கும் அரசுக்கும் ஏற்பட்டுள்ள இழப்பை கணிக்க முடியவில்லை என்றும், ஆனால் அதே நேரம் இந்த ஊழலின் அளவு முந்தைய ஊழல்களைக் காட்டிலும் பிரம்மாண்டமானதாக இருக்கும் என்றும் கணக்குத் தணிக்கை அதிகாரி தெரிவித்துள்ளார்.
ஆயினும் சில சுயேச்சையான கணக்கீடுகள், இந்த ஊழலின் அளவு சற்றேரக்குறைய 2ஜி அலைக்கற்றை ஊழலின் அளவை ஒத்திருக்கலாம் என்று தெரிவிக்கிறது.
கணக்குத் தணிக்கை அதிகாரியின் வரைவு அறிக்கை வெளியாகி மத்தியில் ஆளும் காங்கிரசு கும்பல் படுகேவலமாக அம்பலமாகி நிற்கும் இந்த நிலையை பிரதான எதிர்கட்சியான பாரதிய ஜனதா தனது சொந்த அரசியல் நலனுக்காகக் கூட பயன்படுத்திக் கொள்ள முனையவில்லை. காங்கிரசோடு சேர்ந்து கிழிந்திருப்பது அம்பானியின் கோவணமும் தான் என்பதால் பெயரளவுக்கு முனகிவிட்டு அடங்கிவிட்டனர். ஸ்பெக்ட்ரம் ஊழல் வெளியான போது சம்பிரதாயமாகவாவது சாமியாடிய போலி கம்யூனிஸ்டுகள் இப்போது ‘பத்தோடு பதினொன்னு அத்தோடு இது ஒன்னு’ என்கிற ரீதியில் இந்த ஊழலைப் பற்றி கருத்துத் தெரிவித்து முடித்துக் கொள்ளப் பார்க்கிறார்கள்.
ஏற்கனவே கிருஷ்ணா கோதாவரி எரிவாயு வர்த்தகத்தில் அம்பானி சகோதர்களுக்குள் குத்துவெட்டு நடந்த போது அதில் தலையிட்டு பஞ்சாயத்துப் பேசி தீர்த்து வைத்ததே சுப்ரீம் கோர்ட்டு தான் என்பது வாசகர்களுக்கு நினைவிருக்கலாம். முகேஷ் தலைமையிலான ரிலையன்ஸ் கம்பெனி எரிவாயுவுக்கு அதிக விலை நிர்ணயம் செய்ததாக அனில் அம்பானி ஆந்திர அரசு மற்றும் உர அமைச்சகங்கள் குற்றம் சாட்டிய போது தலையிட்ட காபினெட் குழுவும் உச்ச நீதிமன்றமும் முகேஷுக்கு சாதகமான தீர்ப்பையே வழங்கியிருந்தன.
ஆக, ஊழல் சட்டபூர்வமானது என்பதைக் கடந்து, வளங்களைத் திருடிச் செல்வதில் முதலாளிகளுக்கு ஏதாவது பிரச்சினையேற்பட்டால் அதை பைசல் பண்ணிவிட நீதிமன்றமும் அரசுமே தயாராய் நிற்கிறது என்பதை நாம் புரிந்து கொள்ள முடிகிறது.
சமீப நாட்களாக ஊழலை எதிர்த்து சண்டமாருதம் செய்து வரும் முதலாளித்துவ ஊடகங்களோ, இதைப் பற்றி எதுவும் பேசாமல் மயான அமைதியில் உறைந்து போயிருக்கிறார்கள். ஒரு செய்தியாகக் குறிப்பிடும் போது கூட, உற்பத்திப் பகிர்வு ஒப்பந்தத்தில் முறைகேடு இருப்பதால் தான் ஊழல் நடந்து விட்டது என்றும், கணக்குத் தணிகை அதிகாரி முன்மொழிந்திருக்கும் பரிந்துரைகளின் அடிப்படையில் ஒப்பந்தங்கள் போடப்பட்டால் பிரச்சினை தீர்ந்தது என்பது போலும் சொல்கிறார்கள்.
பொதுவாக ஒவ்வொரு முறை ஊழல் வெளியாகும் போதும் அதைப் பற்றி தனித்தனியே விவாதிப்பதும், அதில் நடந்துள்ள முறைகேடுகள் பற்றி வாய்கிழியப் பேசி விட்டு, அப்போதைக்கு கையில் மாட்டும் யாராவது ஒரு பலியாட்டின் தலையில் பாவக் கணக்கை எழுதி வைத்து விட்டு அடுத்த ஊழலுக்குக் காத்திருப்பதே முதலாளித்துவ ஊடகங்களின் வாடிக்கையாக இருக்கிறது. ஸ்பெக்ட்ரமுக்கு ஒரு ராசா, காமன்வெல்த்துக்கு ஒரு கல்மாடி என்று ஏற்கனவே மாட்டிக் கொண்ட பலியாடுகளைப் போல் இதற்கும் இனி ஒரு பலியாடு கண்டுபிடிக்கப்படுவார். பார்வையற்ற நான்குபேர் யானையைத் தடவிப் பார்த்துப் புரிந்து கொள்ள முயல்வதைப் போன்றே இவர்களின் அணுகுமுறையும் இருக்கிறது.
இந்த ஊழல்கள் அனைத்திலும் ஒரு இணைப்புக் கண்ணி இருப்பதை இவர்கள் திட்டமிட்டே மறைக்கிறார்கள். மக்களையும் அவ்வாறு பார்த்துப் புரிந்து கொள்ள விடுவதில்லை. இப்போது வெளியாகியிருக்கும் ஊழலைப் பொருத்தவரையில் உற்பத்திப் பகிர்வு ஒப்பந்தத்தின் ஓட்டை என்பது ஒரு விளைவு தான் – இந்த விளைவுக்கான காரணம் வேறு.
தனியார்மய தாராளமயக் கொள்கைகள் அமுல்படுத்தத் துவங்கிய ஆரம்ப காலத்தில் – ஏன் இன்றும் அதியமான் போன்றவர்கள் கூட – அதற்கான காரணமாக முன்வைக்கப் பட்டது பொதுத்துறையின் திறமையின்மை. இவர்கள் முதலீடு செய்யும் பலமும், தொழில் நுட்பத் திறனும், வாடிக்கையாளார் சேவையிலும் பொதுத்துறை நிறுவனங்கள் பலமடங்கு பின்தங்கியிருப்பதாகவும், இதனால் தான் நாட்டின் வளர்ச்சி பாதிக்கப்படுகிறது என்றும், இதற்குத் தனியார்களை அனுமதிப்பதே ஒரே தீர்வு என்றும் சொன்னார்கள்.
ஆனால், இந்தியாவின் பொதுத்துறை எண்ணை நிறுவனங்களைப் பொருத்தமட்டில், அரசுக்குச் சொந்தமான ஓ.என்.ஜி.சி மற்றும் ஒ.ஐ.சி இந்தியாவில் மட்டுமல்லாமல் உஸ்பெகிஸ்தான், துர்க்மெனிஸ்தான், ஆப்ரிக்க நாடுகள், தென்னமெரிக்க நாடுகள் உள்ளிட்டு உலகின் பல்வேறு பகுதிகளிலும் எண்ணை வயல்களையு இயற்கை எரிவாயுவையும் கண்டுபிடிப்பதிலும் எண்ணை துரப்பணத்திலும் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறது. ஆக, ஒரு பொதுத்துறை நிறுவனத்திற்கே இத்துறையில் போதுமான நிபுணத்துவமும் தகுதியும் திறனும் இருக்கிறது. வெளிநாடுகளில் சென்று எண்ணை வயல்களைக் கண்டுபிடிக்கவும், எண்ணை துரப்பணம் செய்யவும் போதுமான மூலதன பலம் அதற்கு இருக்கிறது. அப்படியிருக்கும் போது, தனியார் பகாசுரக் கம்பெனிகளான ரிலையன்ஸுக்கும் கெயின்ஸுக்கும் பிரிட்டிஷ் கேஸுக்கும் இந்த ஒப்பந்தத்தை அளிக்க வேண்டிய தேவை ஏன் வந்தது எங்கிருந்து வந்தது?
ஊழல் பிறக்கும் இடம் இது தான். இப்போது அம்பலமாகியிருக்கும் ரிலையன்ஸ் ஊழல் என்பது எதார்த்தத்தில் பிரதானமான ஊழலின் நடைமுறையில் ஏற்பட்டுள்ள ஒரு முறைகேடு. பிரதானமான ஊழல் அப்படியே இருக்கும் போது இந்த நடைமுறைக் கோளாறையே மொத்த ஊழலாகப் பார்க்கச் சொல்வதென்பது ஆபத்தானது மட்டுமல்ல – மக்களை ஏமாற்றுவதும் கூட. இதைத் தான் அண்ணா ஹசாரே உள்ளிட்ட திடீர் ஊழல் எதிர்ப்புப் போராளிகள் செய்கிறார்கள்.
ஆக, நாட்டுக்கும் நாட்டு மக்களும் சொந்தமான இயற்கை வளங்களைக் கூறு போட்டு உள்நாட்டுத் தரகுமுதலாளிகளுக்கும் பன்னாட்டு பகாசுரக் கம்பெனிகளுக்கும் படையல் போட்டு வைத்து விட்டு அதைப் பொறுக்கித் தின்ன வரும் முதலாளிகளுக்கு இடைஞ்சல் இல்லாத நடைமுறையை மேற்கொள்வது தான் ஊழலற்ற நல்ல நிர்வாகம் (good governance) என்கிறார்கள். இந்தக் கூச்சலில் வளங்கள் கொள்ளை போவதிலிருந்து மக்களின் கவனத்தை திசை திருப்பவே அண்ணா ஹசாரே போன்ற கோமாளிகளின் கூத்துகள் பயன்படுகின்றன.
ஆக, உண்மையாகவே ஊழல் முறைகேடுகளைத் தடுத்து நிறுத்த வேண்டும் – அவற்றை எதிர்த்து முறியடிக்க வேண்டும் என்கிற உண்மையான அக்கறையும் தேசபக்தியும் கொண்டவர்கள், அதற்கு ஊற்றுமூலமாய் இருக்கும் பொருளாதாரக் கொள்கைகளை எதிர்த்துப் போராடி முறியடிக்க வேண்டியதைத் தவிற வேறு வழியொன்றும் இல்லை என்பதற்கு நேரடி சாட்சியாய் ரிலையன்ஸ் ஊழலே இருக்கிறது.
www.vinavu.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக