புதன், 8 ஜூன், 2011

பாரதிதாசன்,கல்யாணசுந்தரம் ஆகியோரை விட்டு விட்டு கருணாநிதிமீது கடுந்தாக்குதல் மேற்கொண்ட காங்கிரஸ்

இதன் முதல் பகுதி: http://namathu.blogspot.com/2011/06/blog-post_7418.html

காரமான கட்டுரைகள் என்ற பாராட்டு மழையில் நனைந்துகொண்டிருந்த கருணாநிதியை மேலும் உற்சாகப்படுத்தும் வகையில் ஒரு செய்தி வந்து சேர்ந்தது. சென்னை மாகாணத்தில் இருப்பது போலவே புதுவையிலும் திராவிடர் கழக அமைப்பை உருவாக்கவேண்டும் என்று விரும்பினார் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன். பெரியாரிடம் கேட்டார். அவர் சம்மதம் கொடுக்கவே, தொடக்க விழாவை 1945 ஜூலை மாதத்தில் மாநாடாகவே நடத்த முடிவுசெய்தார் பாரதிதாசன்.
செய்தி கிடைத்ததும் மாநாட்டு வேலைகளில் ஈடுபடத் தொடங்கினார் கருணாநிதி. மாணவ நேசன் நடத்திய காலத்திலேயே பாரதிதாசனுடன் கருணாநிதிக்குத் தொடர்பு இருந்தது. இப்போது அது மேலும் நெருக்கமாகியிருந்தது. மாநாட்டுக்குப் பெரியார் வருகிறார்; அண்ணா வருகிறார் என்பதைக் காட்டிலும் அஞ்சா நெஞ்சன் பட்டுக்கோட்டை அழகிரிசாமி வருகிறார் என்பதுதான் கருணாநிதியை உற்சாகத்தின் உச்சத்துக்குக் கொண்டுசென்றிருந்தது. அழகிரியின் கோடையிடிப் பேச்சின் பிரதான ரசிகர் கருணாநிதி.
மாநாடு தொடங்கியதும் பெரியார் பேசினார். திராவிடர் கழகக் கொடியை ஏற்றிவைத்து அண்ணா பேசினார். பேசிமுடித்த சில நொடிகளில் மாநாட்டுப் பந்தலில் பதற்றம். சில நொடிகளில் கொடி மரம் வெட்டி வீழ்த்தப்பட்டது. உபயம்: காங்கிரஸ்காரர்கள். மாநாட்டுக்கு வந்திருந்த கூட்டத்துக்குள் கலவரம் செய்யும் கனவுடன் வந்திருந்த காங்கிரஸாரும் கலந்திருந்தனர்.
ஆபத்து சூழ்ந்துவிட்டது என்பது மேடையில் இருந்தவர்களுக்குப் புரிந்துவிட்டது. திராவிடர் கழக மாநாடு அல்லது பொதுக்கூட்டத்துக்குள் காங்கிரஸ்காரர்கள் புகுந்து கலகம் செய்வது புதிய விஷமில்லை. காங்கிரஸ் கூட்டத்துக்குள்ளும் இதே போன்ற கலகங்களை திராவிடர் கழகத்தினரும் பதிலடியாக நடத்துவது வழக்கம்.
இனியும் தாமதித்தால் உயிருக்கு உத்தரவாதம் இல்லை என்பதால் பெரியாரையும் அண்ணாவையும் ரிக்சாவில் ஏற்றிப் பாதுகாப்பாக அனுப்பிவைத்தனர் கழக நிர்வாகிகள். மாநாட்டு ஏற்பாட்டாளரான பாரதிதாசனுடன் கருணாநிதியும் காஞ்சி கல்யாண சுந்தரமும் இணைந்துகொண்டு ஓட்டமும் நடையுமாக நகர்ந்தனர்.
மூவரையும் வழிமறித்தது ஒரு கும்பல். கைகளில் ஆயுதங்கள். ஓடுவதைத் தவிர வேறு வழியில்லை என்ற நிலை. மூவரும் ஆளுக்கொரு பக்கமாகப் பிரிந்து ஓடினர். மற்ற இருவரையும் விட்டுவிட்டுக் கருணாநிதியை மட்டும் விடாமல் துரத்தியது அந்தக் கும்பல். சிவகுருவாக நடித்து கருணாநிதி பேசிய நாடக வசனங்களும் கருணாநிதியாக எழுதிய கட்டுரைகளும் கருணாநிதி மீது தீராத ஆத்திரத்தை அவர்களுக்குள் ஏற்படுத்தியிருந்தது. கையில் கிடைத்த செருப்பு ஒன்றையும் கருணாநிதியின் மீது வீசினர்.
கண்ணில்பட்ட வீடுகள் அனைத்தும் பூட்டப்பட்டிருக்க, ஓடிக்கொண்டே இருந்தார் கருணாநிதி. சட்டென்று கவனத்தை ஈர்த்தது அந்த வீடு. சாத்தப்படாத வீடு. கண் இமைக்கும் நேரத்தில் அந்த வீட்டுக்குள் நுழைந்த கருணாநிதி, கதவுக்குப் பின்னால் சென்று ஒளிந்துகொண்டார்.
பாதுகாப்பானது என்று நினைத்து கருணாநிதி புகுந்த அந்த வீடுதான் உண்மையில் எதிரிகளின் கூடாரம். (இன்று காங்கிரஸுடன் கூட்டணி வைத்திருப்பது போல) கதவைத் தள்ளிக்கொண்டு உள்ளே வந்த கலகக்காரர்கள் கருணாநிதி மீது பலப்பிரயோகம் செய்தனர். வலி பொறுக்க முடியாமல் சுருண்டு விழுந்த கருணாநிதியைத் தூக்கிச் சாக்கடையில் வீசிவிட்டு மறைந்தனர்.
நிமிடங்கள் நகர்ந்தன. மயக்கத்திலேயே கிடந்தார் கருணாநிதி. இன்னொரு பக்கம் கலைக்கப்பட்ட மாநாடு மாலையில் மீண்டும் கூடியது. அஞ்சாநெஞ்சன் அழகிரிசாமி பேசினார். காலையில் நடந்த வன்முறைச் சம்பவங்களைக் கண்டித்த அவர், “நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும்; இனி நடப்பவை நல்லவையாக இருக்கட்டும்’ என்று பேசினார். திராவிட இயக்க மேடைகளில் இன்றும் பேசப்படும் சொற்றொடர் இது.
பாரதிதாசன்
மாநாடு மீண்டும் தொடங்கியது, அழகிரிசாமி பேசியது உள்ளிட்ட எந்த விவரமும் தெரியாமல் யார் வீட்டுத் திண்ணையிலோ மயங்கிக் கிடந்தார் கருணாநிதி. அந்த வீட்டினரின் உதவியுடன் மயக்கம் தெளிந்த கருணாநிதி, பொழுது விடிந்த்தும் பெரியார், அண்ணா உள்ளிட்டோர் தங்கியிருந்த இடத்துக்குச் சென்றார். வெறுமனே சென்றால் கலகக்காரர்கள் கண்ணில் சிக்கவேண்டியிருக்குமே என்பதால் கைலி, ஜிப்பா, தொப்பி அணிந்து இஸ்லாமியர் போல வேடம் போட்டுக்கொண்டு அங்கிருந்து வெளியேறினார்.
புதுவையில் நாடகம் முடிந்ததும் மீண்டும் திருவாரூருக்கே வந்துவிட்டார் கருணாநிதி. நாடகம் நடிப்பது என்பதை முழுநேரப்பணியாக அவர் நினைக்கவில்லை. வேறு நல்ல வாய்ப்புக்காக முயற்சிசெய்துகொண்டிருந்தார். அப்போது உதவிக்கு வந்தவர் கருணாநிதியின் நண்பர் தென்னன். கருணாநிதிக்கு வேலை ஒன்றை ஏற்பாடு செய்துதரும்படி பெரியாரின் குடி அரசு பத்திரிகையில் வேலைசெய்துவந்த கவிஞர் கருணானந்தத்துக்குக் கடிதம் எழுதினார் தென்னன்.
அதன்பிறகு ஈரோடு புறப்பட்டார் கருணாநிதி. ஏற்கெனவே பெரியாரிடம் நல்ல அறிமுகம் இருந்தது கருணாநிதிக்கு. கூடவே, கருணானந்தத்தின் சிபாரிசு. உடனடியாக வேலை கிடைத்தது கருணாநிதிக்கு. குடி அரசு பத்திரிகையில் துணை ஆசிரியர் வேலை. நாற்பது ரூபாய் சம்பளம். சாப்பாட்டுக்கும் இதர செலவுகளுக்குமே முப்பந்தைந்து ரூபாய் போய்விடும். எஞ்சிய ஐந்து ரூபாயைத்தான் வீட்டுக்கு அனுப்பினார் கருணாநிதி.
சராசரி பத்திரிகை துணை ஆசிரியர் வேலைக்கும் குடி அரசு துணை ஆசிரியர் வேலைக்கும் நிறைய வித்தியாசங்கள் இருந்தன. பெரியாருக்கு வரும் பத்திரிகைகளை உரத்த குரலில் வாசித்துக்காட்டுவது, கடிதங்களைப் பிரித்துப் படித்துக்காட்டுவது, பத்திரிகையில் வரும் செய்திகளைக் குறித்துக்கொடுப்பது போன்ற வேலைகளை எல்லாம் செய்யவேண்டும். அதன்பிறகுதான் பத்திரிகைப்பணிகள்.
எழுத்தார்வம் இருப்பதால் சில கட்டுரைகளை எழுதுவதற்கு வாய்ப்பு கிடைத்தது கருணாநிதிக்கு. அவ்வப்போது துணைத் தலையங்கங்களையும் எழுதினார். அண்ணாமலைக்கு அரோகரா, தீட்டாயிடுத்து என்பன போன்ற கட்டுரைகள் வாசகர்களை வரவழைத்தன. சில கட்டுரைகளுக்குப் பெரியாரின் பாராட்டும் கிடைத்தது. பிடித்த வேலை. முக்கியமாக, பிடித்ததைச் செய்கின்ற வேலை. ஆனாலும் கருணாநிதியின் மனத்தில் ஒரு வருத்தம்!
(தொடரும்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக