திங்கள், 20 ஜூன், 2011

இந்திய வீரர்களை அனுமதிப்பதில்லை: இலங்கை கிரிக்கெட் நாளை கூட்டம்


இலங்கை பிரிமியர் லீக் போட்டிகளில் விளையாட இந்திய வீரர்களை அனுமதிப்பதில்லை என்ற இந்திய கிரிக்கெட் சபையின் (பிசிசிஐ) தீர்மானம் குறித்து அதிர்ச்சியடைந்துள்ள இலங்கை கிரிக்கெட் இது குறித்து நாளை கலந்துரையாடவுள்ளது.
நாளை இவ்விடயம் குறித்து இடைக்கால நிர்வாகக் குழு கலந்துரையாடும். இந்நிலைமையை நாம் ஆராய வேண்டியிருப்பதால் இது குறித்து இப்போதே கருத்துக்கூறுவது கால முதிர்ச்சியற்றதாகும் என இலங்கை கிரிக்கெட் செயலாளர் நிஷாந்த ரணதுங்க கூறியுள்ளார்.
இலங்கை மாகாண அணிகளுக்கிடையிலான இப்போட்டிகளில் 12 இந்திய வீரர்கள் விளையாடவிருந்தனர். - பிரவீன் குமார், முனாவ் பட்டேல், இர்பான் பதான், தினேஸ் கார்த்திக், ஆர்.அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, மனோஜ் திவாரி, சௌரப் திவாரி, உமேஸ் யாதவ், வினய் குமார், மனிஷ் பான்டே, போல் வால்தாட்டி ஆகியோரே இவ்வீரர்கள்.
இவர்களுக்கு ஆட்சேபனையில்லை என்ற சான்றிதழை வழங்க இந்திய கிரிக்கெட் சபை மறுப்பு தெரிவித்துள்ளது.
இப்போட்டிகள் இலங்கை கிரிக்கெட் சபையினால் அல்லாமல் சிங்கப்பூரை தளமாகக் கொண்ட சமர்செட் என்டெர்டெய்ட்ன்மன்ட் எனும் தனியார் நிறுவனமொன்றினால் நடத்தப்படுவதே இதற்குக் காரணம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை இப்போட்டிகளை ஏற்பாடு செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள சமர்செட் என்டெர்டெய்ட்ன்மன்ட் நிறுவனமானது இலங்கை கிரிக்கெட்டின் சந்தைப்படுத்தல் கிளையாகும் என நிஷாந்த ரணதுங்க தெரிவித்துள்ளார்.
ஜூலை 19 முதல் ஓகஸ்ட் 4 ஆம் திகதிவரை இப்போட்டிகளை நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக