ஞாயிறு, 29 மே, 2011

UNP எதிர்ப்பு,மாகாணங்களுக்கு பொலிஸ் அதிகாரம்

மாகாணங்களுக்கு பொலிஸ் அதிகாரம்: ஐ.தே.க. எதிர்ப்பு!


அரசமைப்பின் 13 ஆவது திருத்தத்தை அடியொட்டி இனப்பிரச்சினைக்குத் தீர்வை முன்வைக்கப்போவதாக அரசு தெரிவித்து வரும் நிலையில், 13 ஆவது திருத்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பொலிஸ் அதிகாரங்களை வழங்குவதற்கு ஐக்கிய தேசியக் கட்சி எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.

“மாகாண சபைகளுக்கு பொலிஸ் அதிகாரம் வழங்கப்பட்டால் அவற்றை மாகாண நிர்வாகங்கள் தவறாகப் பயன்படுத்தக் கூடும். அத்துடன், வெளிச்சக்திகள் (மூன்றாம் தரப்புகள்) பொலிஸ் நிர்வாகத்தில் ஊடுருவி மீண்டும் கிளர்ச்சிகளை ஏற்படுத்தவும் கூடும்” என்று தெரிவித்துள்ளார் கட்சியின் பிரதித் தலைவர் கருஜெயசூரிய. இதனால் பொலிஸ் அதிகாரம் மாகாணங்களுக்கு வழங்கப்படுவதைக் கட்சி விரும்பவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று வழங்கியுள்ள செவ்வியில் அவர் இதனைக் கூறியுள்ளார்.
அந்தச் செவ்வியில் அவர் மேலும் தெரிவித்துள்ளவை வருமாறு: அரசமைப்பின் 13 ஆவது திருத்தத்துக்கு அமைய பொலிஸ் அதிகாரங்கள் மாகாணசபை நிர்வாகத்துக்கு வழங்க வேண்டும் என்று இன்று வலியுறுத்தப்படுகிறது.அவ்வாறு பொலிஸ் அதிகாரங்களை வழங்கினால், அவை தவறாகப் பயன்படுத்தப்படக் கூடும் என்ற சந்தேகமும் தயக்கமும் நிலவுகிறது.மாகாண சபைகளுக்கு பொலிஸ் அதிகாரத்தை வழங்கினால், வெளிச்சக்திகள் அதில் தலையிட்டு, ஊடுருவி தேவையில்லாத பிரச்சினைகளை உருவாக்கக்கூடும். அதனால் எதிர் காலத்தில் கிளர்ச்சிகள் ஏற்படவும் வாய்ப்பு உண்டு. இதனாலேயே பொலிஸ் அதிகாரங்கள் வழங்கப்படுவதை நாம் எதிர்க்கிறோம்.
இலங்கை இனப்பிரச்சினைக்குத் தீர்வுகாண வேண்டுமானால், இந்திய மாநிலங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது போன்ற அதிகாரப் பகிர்வை மேற்கொள்ளலாம்.அவசரகாலச் சட்டம், பயங்கரவாத தடுப்புச் சட்டம் போன்றவற்றைத் தொடர்ந்து நடைமுறைப்படுத்தப்படுவதால் நாட்டின் நற்பெயருக்குக் களங்கம் ஏற்பட்டுள்ளது.
இந்தச் சட்டங்களைத் தொடர்ந்து நடைமுறையில் வைத்திருப்பதால், எமது நாட்டைப் பயங்கரவாத நாடாகவே உலகம் பார்த்துக் கொண்டிருக்கிறது.இந்த நிலையை நீக்கி, உடனடியாக இந்தச் சட்டங்கள் நீக்கப்படவேண்டும் என்றும் கருஜெயசூரிய தெரிவித்துள்ளார்.ஐ.தே.க. தற்போது மாகாணங்களுக்கு பொலிஸ் அதிகாரம் வழங்கப்படுவதை எதிர்க்கின்ற போதும், 1987 ஆம் ஆண்டில் செய்துகொள்ளப்பட்ட இந்திய இலங்கை ஒப்பந்தத்தில் அந்தக் கட்சியின் முன்னாள் தலைவரான ஜெ.ஆர்.ஜெவர்த்தனாவே கையெழுத்திட்டிருந்தார். அந்த ஒப்பந்தத்தின் மூலம் உருவாக்கப்பட்ட 13 ஆவது திருத்தத்தில் மாகாணங்களுக்குப் பொலிஸ் அதிகாரம் வழங்கப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக