வியாழன், 19 மே, 2011

Tamil cinema record 14 National awards for the first time.மொத்தம் 14 விருதுகளை

இதுவரை இல்லாத அளவு மிகப் பெரிய அளவில் தமிழ் சினிமாவுக்கு தேசிய விருதுகள் பெருமளவில் கிடைத்துள்ளன. மொத்தம் 14 விருதுகளை தமிழ் சினிமா தட்டிச் சென்றுள்ளது.

இத்தனை விருதுகளை தமிழ் சினிமா இதுவரை பெற்றதாக நினைவில்லை. அந்த அளவுக்கு 58வது தேசிய விருதுகளை தமிழ் சினிமா சுனாமி போல வந்து வாரிச் சுருட்டிக் கொண்டு போய் விட்டது.

இத்தனைக்கும் எந்திரன், ஆடுகளம், மைனா, தென் மேற்குப் பருவக் காற்று ஆகிய நான்கு படங்கள் மட்டுமே இத்தனை விருதுகளையும் பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இதில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளியான படங்கள் எந்திரன், ஆடுகளம் ஆகியவை. மைனா படம், உதயநிதி ஸ்டாலினின் படம். அதிக அளவிலான பாராட்டுக்களைப் பெற்ற படம் தென் மேற்குப் பருவக் காற்று.

தனுஷ் ஆடுகளத்தை விட மிகச் சிறப்பான நடிப்பைக் கொடுத்த படங்கள் இதற்கு முன்பே வந்துள்ளன. ஆனால் அவற்றுக்குக் கிடைக்காமல் ஆடுகளத்துக்கு சிறந்த நடிகருக்கான விருது கிடைத்துள்ளது.

அதேபோல சரண்யாவின் நடிப்பும் இதற்கு முன்பு பலமுறை பாராட்டுக்களை வாரிக் குவித்துள்ளது. அதேசமயம், இந்தப் படங்கள் அத்தனையையும் சேர்த்து ஒரே படத்தில் கொடுத்தது போல தென் மேற்குப் பருவக் காற்றில் அபாரமான நடிப்பைக் கொடுத்திருந்தார் சரண்யா. அவருக்கு விருது நிச்சயம் என்று அப்போதே பேசப்பட்டது. ஆனால் இப்போதோ சிறந்த நடிகைக்கான விருது கிடைத்து விட்டது.

ஆடுகளம் மொத்தம் ஆறு விருதுகளை அள்ளிச் சென்றுள்ளது. அதேபோல எந்திரன் படத்துக்கு 3 விருதுகள் கிடைத்துள்ளன.

அனைவராலும் பாராட்டப்பட்ட மைனா படத்துக்கு ஒரே ஒரு விருதுதான் கிடைத்துள்ளது. அதேசமயம், அத்தனை பேரின் பாராட்டுக்களையும் வாரிக் குவித்தவரான தம்பி ராமையாவுக்கே அந்த விருது கிடைத்திருப்பது ஆறுதல் தருவதாக உள்ளது.

விமர்சகர்களின் பாராட்டுக்களைப் பெற்ற படம் தென் மேற்குப் பருவக் காற்று. இப்படத்திற்கு சிறந்த பாடலாசிரியர், சிறந்த நடிகை, தமிழில் சிறந்த படம் என மூன்று விருதுகளை அள்ளியுள்ளது. ரஜினி படத்துக்கு நிகராக இந்தப் படமும் மூன்று விருதுகளை அள்ளியிருப்பது குறிப்பிடத்தக்கது.

இதுவரை இல்லாத அளவுக்கு தமிழ் சினிமாவுக்கு இத்தனை விருதுகள் கிடைத்திருப்பது இதுவே முதல் முறையாகும்.

விருதுகளை பெருமளவில் அள்ளிய ஆடுகளம், தென் மேற்குப் பருவக் காற்று, மைனா ஆகிய மூன்றுமே தமிழ் மணம் வீசும், மண்வாசனைப் படங்கள் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. தரமும், மண்மணமும் நிறைந்திருந்தால் நிச்சயம் விருதுகள் ஓடி வரும், தேடி வரும் என்பதை இந்தப் படங்கள் நிரூபித்துள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக