வியாழன், 19 மே, 2011

சிறந்த நடிகர் தனுஷ், சிறந்த நடிகை சரண்யா-தம்பி ராமையா சிறந்த துணை நடிகர்,தேசிய விருதுகள்

டெல்லி: 58வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் ஆடுகளம் படத்தில் நடித்த நடிகர் தனுஷ், சலீம் குமார் என்ற மலையாள நடிகருடன் இணைந்து சிறந்த நடிகருக்கான விருதைப் பகிர்ந்து கொள்கிறார்.

அதேபோல தென் மேற்குப் பருவக் காற்று படத்தில் சிறப்பாக நடித்திருந்த சரண்யா பொன்வண்ணன், மராத்தி நடிகை மித்தாலியுடன் இணைந்து சிறந்த நடிகைக்கான விருதை பெறுகிறார்.

58வது தேசிய திரைப்பட விருதுகள் இன்று டெல்லியில் அறிவிக்கப்பட்டன.

சிறந்த நடிகர் தனுஷ்

அதன்படி ஆடுகளம் படத்தில் நடித்த நடிகர் தனுஷுக்கு சிறந்த நடிகருக்கான விருது கிடைத்துள்ளது. இந்த விருதை அவர் நடிகர் சலீம் குமார் என்ற மலையாள நடிகருடன் இணைந்து பெறுகிறார்.

சிறந்த நடிகை சரண்யா

இதேபோல சிறந்த நடிகைக்கான விருது சரண்யாவுக்குக் கிடைத்துள்ளது. தென் மேற்குப் பருவக் காற்று படத்துக்காக இந்த விருது அவருக்குக் கிடைத்துள்ளது. இவர் மித்தாலி என்ற மராத்தி நடிகையுடன் இணைந்து சிறந்த நடிகைக்கான விருதைப் பெறுகிறார்.

சிறந்த இயக்குநர் வெற்றி மாறன்

சிறந்த இயக்குநருக்கான விருது வெற்றி மாறனுக்குக் கிடைத்துள்ளது. இதற்கான தங்கத் தாமரை விருதை அவர் பெறுகிறார்.

சிறந்த திரைக்கதை - வெற்றி மாறன்

சிறந்த திரைக்கதைக்கான விருதையும் வெற்றி மாறனே தட்டிச் சென்றுள்ளார்.

சிறந்த துணை நடிகர் தம்பி ராமையா

சிறந்த துணை நடிகருக்கான விருது தம்பி ராமையாவுக்குக் கிடைத்துள்ளது. காமெடியனாக, இயக்குநராக அறியப்பட்ட தம்பி ராமையா சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்த படம் மைனா. இந்தப் படத்துக்காக தம்பி ராமையா, சிறந்த துணை நடிகருக்கான விருதை தட்டிச் சென்றுள்ளார்.

சிறந்த துணை நடிகை சுகுமாரி

சிறந்த துணை நடிகை விருது சுகுமாரிக்குக் கிடைத்துள்ளது. நம் கிராமம் என்ற படத்துக்காக அவர் இதைப் பெறுகிறார்.

சிறந்த பாடலாசிரியர் வைரமுத்து

சிறந்த பாடலாசிரியருக்கான விருது வைரமுத்துவுக்குக் கிடைத்துள்ளது. தென் மேற்குப் பருவக் காற்று படத்துக்காக இந்த விருது அவரைத் தேடி வந்துள்ளது.

சிறந்த தமிழ்ப் படம்

தமிழில் சிறந்த படமாக தென் மேற்குப் பருவக் காற்று திரைப்படம் தேர்வாகியுள்ளது.

சிறந்த நடன அமைப்பு திணேஷ்

ஆடுகளம் படத்தில் நடன வடிவமைப்பு செய்திருந்த திணேஷுக்கு சிறந்த நடன அமைப்புக்கான விருது கிடைத்துள்ளது.

எந்திரனுக்கு 2 விருதுகள்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த எந்திரன் படத்துக்கு 2 விருதுகள் கிடைத்துள்ளன.

சிறப்பு ஸ்பெஷல் எபக்ட்ஸுக்காக ஸ்ரீனிவாஸ்மோகன் விருது பெறுகிறார்.

சிறந்த கலை-தயாரிப்பு வடிவமைப்புக்காக சாபு சிரில் விருது பெறுகிறார்.

ஆடுகளத்திற்கு 6 விருதுகள்

ஆடுகளம் மொத்தம் ஆறு விருதுகளை அள்ளிச் சென்றுள்ளது.

சிறந்த நடிகர், சிறந்த இயக்குநர், சிறந்த திரைக்கதை, சிறந்த நடன வடிவமைப்பு, சிறந்த படத்துக்கான சிவராம காரந்த் விருது ஆகியவை ஆடுகளம் படத்துக்குக் கிடைத்துள்ளது.

அதேபோல சிறந்த எடிட்டிங்குக்கான விருதும் ஆடுகளம் படத்திற்காக கிஷோருக்குக் கிடைத்துள்ளது.

ஈழக் கவிஞருக்கு சிறப்பு விருது

ஆடுகளத்தில் தனுஷின் குருவாக நடித்தவரான ஈழத்தைச் சேர்ந்த கவிஞர் ஜெயபாலனுக்கு சிறப்பு விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
English summary
The national award for the best actor is shared by Dhanush for Adugalam and Saleem Kumar. Actress Saranya has received the national award for the best actress, Thambi Ramaiyah is the best supporting actor and actress Sukumari is the best supporting actress. Vetrimaran has got the best director award for Adugalam, Vairamuthu for best lyrics and the movie Thenmerku Paruva katru is selected as the best Tamil film.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக